அடர்ந்த காட்டில் 40 அடி ஆழ பாதாள அறைக்குள் பிரபாகரன் வசித்து வருகிறார் பாலசிங்கம் மனைவி எழுதிய புத்தகத்தில் தகவல்
அடர்ந்த காட்டில் 40 அடிக்கும் மேற்பட்ட ஆழத்தில் கட்டப்பட்டுள்ள பாதாள அறைக்குள் பிரபாகரன் வசித்து வருவதாக பாலசிங்கம் மனைவி எழுதிய புத்தகத்தில் கூறப்பட்டு உள்ளது. புத்தகத்தில் தகவல் இலங்கை விமானப்படை கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் காயம் அடைந்ததாக இலங்கை அரசு கூறியுள்ளது. பிரபாகரன், பதுங்கு குழிக்குள் இருந்தபோது இந்த தாக்குதலால் காயம் அடைந்ததாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பிரபாகரன் வசித்து வரும் இடம் பற்றி, விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகராக பணியாற்றி மறைந்த ஆண்டன் பாலசிங்கத்தின் மனைவி அடலி எழுதிய புத்தகத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது. `தி வில் டூ ப்ரீடம்’ என்ற அந்த புத்தகத்தில் அடலி எழுதி இருப்பதாவது:- இலங்கையின் வடபகுதியில் அலம்பில் பகுதியில் உள்ள காட்டுக்குள் ஒரு பாதாள அறைக்குள் பிரபாகரன் வசித்து வருகிறார். அவரது வீடாகவும், அலுவலகமாகவும் அது இருக்கிறது. அடர்ந்த காட்டுக்குள் பாறைகளை குடைந்து இந்த பாதாள அறை உருவாக்கப்பட்டுள்ளது. 40 அடி ஆழ அன அந்த பாதாள அறைக்கு விடுதலைப்புலிகள் என்னை அழைத்துச் சென்றனர். படிகளில் இறங்கி கீழே சென்றோம். 40 அடி ஆழத்தில் நிறைய அறைகள் கட்டப்பட்டு இருந்தன. பார்ப்பதற்கே ஆச்சரியமாக இருந்தது. பாதாள சுரங்கமாக காட்சி அளித்தது. நடமாடுவதற்கு ஏற்ற வகையில் எங்கள் அறை வடிவமைக்கப்பட்டு இருந்தது.
எங்கள் அறையை விட, பிரபாகரன் அறை இன்னும் ஆழத்தில் இருந்தது. அது கிரானைட் கற்களால் கட்டப்பட்டு இருந்தது. கான்கிரீட்டை விட வலிமையாக இருந்தது. பாதாள அறைக்கு மேலே தாழ்வான கூரை அமைக்கப்பட்டு இருந்தது. தண்ணீர் வழிந்து ஓடுவதற்காக கால்வாய் வெட்டப்பட்டு இருந்தது. அதனால்தான், பாதாள அறைக்குள் மழை நீர் பாயாமல் வழிந்தோடியது.
மழையால் பாதிப்பில்லை
கனமழையை தாங்கும் வகையில் பாதாள அறை கட்டப்பட்டு இருந்தது. அதனால்தான் காட்டின் மற்ற பகுதிகள், மழையால் சேறும் சகதியுமாக காட்சி அளித்தபோது கூட, பாதாள அறை பகுதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
சூரிய வெப்பம் தாக்காத அளவுக்கு ஆழத்தில் இருந்ததால், இரவு நேரத்தில் குளிர் அதிகமாக இருந்தது. குளிரில் நான் நடுங்கியபடி இருந்தேன். எப்படி தாங்கப்போகிறேனோ என்று நினைத்தேன். ஆனால், நல்லபடியாக எந்த பாதிப்பும் இன்றி சமாளித்து விட்டேன். இவ்வாறு அடலி கூறியுள்ளார்.
ஆபத்து
இந்த பாதாள அறைக்குள் இருக்கும் போது விமான குண்டு வீச்சில் பிரபாகரன் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை என்று ராணுவ நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், தனது இயக்கத்தினரை சந்திப்பதற்காகவோ, நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவோ அவர் பாதாள அறையை விட்டு வெளியே வந்தால், குண்டு வீச்சில் அவர் தாக்கப்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.