தமிழக சட்டமன்ற தேர்தல்: விஜயகாந்த் அமைத்துள்ள சக்கரவியூகம் -எம்.காசிநாதன்…!!

Read Time:13 Minute, 42 Second

timthumb (3)தனித்துப் போட்டி’ என்று அறிவித்து, தனக்குத் தானே ‘சக்கர வியூகத்தை’ வகுத்துக் கொண்டிருக்கிறார் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவரும் ‘கேப்டன்’ என்று அழைக்கப்படுபவருமான நடிகர் விஜயகாந்த். 2016 சட்டமன்றத் தேர்தல் களத்துக்கான வியூகம் பற்றி, பெப்ரவரி 20ஆம் திகதி, பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணான காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதித்தார்.

பொதுக்கூட்டத்தில் நான் ‘கிங்’ ஆக இருக்க வேண்டுமா அல்லது ‘கிங் மேக்கராக’ இருக்க வேண்டுமா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டு, ‘தொண்டர்கள், கிங்காக இருக்கச் சொல்லி விட்டார்கள்’ என்று அறிவித்தார்.

அன்றே, தே.மு.தி.க மேடையில் இருந்த அக்கட்சியின் முக்கிய பிரபலங்கள், சற்றுச் சோர்ந்து போய் விட்டனர். ஆனாலும், ‘தி.மு.கவுடன் கூட்டணி அமைப்பார்’ என்ற நோக்கத்தில் அவர்கள் காத்திருந்தனர்.

விஜயகாந்தைப் பொறுத்தவரை, தனக்கு முன்புள்ள அனைத்து வியூகங்களையும் கையாண்டார். பாரதிய ஜனதாக் கட்சியின் சார்பில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் வந்த போது, அவரைச் சந்தித்துப் பேசினார். அவர் தன்னைச் சந்தித்து விட்டுச் சென்றவுடன் ‘இது மரியாதை நிமித்தமான சந்திப்பே’ என அறிவித்தார்.

அதேபோல், மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் வைகோவை மூன்று தடவைக்கு மேல், விஜயகாந்தின் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சந்தித்துப் பேசினார்கள். தி.மு.கவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக செய்தி வெளியானது.

’59 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபை உறுப்பினர், 20 சதவீத உள்ளாட்சி அமைப்பில் பிரநிதித்துவம்’ என்ற ஒரே பக்கேஜ் பற்றி, அனைத்துப் பத்திரிகைகளும் தலைப்புச் செய்திகளாகவோ, கிசுகிசு செய்திகளாகவோ வெளியிட்டன. திடீரென்று ‘கேப்டன் அவர்கள், தைரியமாக கூட்டணி பற்றி அறிவிப்பார்.

அதுவரை வரும் செய்திகள், வதந்திகள். யாருடனும் சீட் பேரம் நடத்தவில்லை’ என்ற ரீதியில், தே.மு.தி.கவின் கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார் அறிக்கை வெளியிட்டார்.

தி.மு.கவுடனான பேச்சுவார்த்தை பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த வேளையில், நிருபர்கள் கூட்டணி பற்றி கேள்வி கேட்க, ‘பழம் கனிந்து கொண்டிருக்கிறது. பாலில் விழுவது இன்னும் முடிவாகவில்லை’ என்றார் தி.மு.க தலைவர் கருணாநிதி.

இது, வைகோ போன்றவர்களுக்கு அதிர்ச்சியளித்தது. உடனே அவர், ‘விஜயகாந்த் பாலில் விழலாம். ஆனால் நச்சுப் பாலில் (தி.மு.க) விழுந்து விடக்கூடாது’ என்று எச்சரிக்கைப் பேட்டி கொடுத்தார்.

இந்நிலையில, ‘பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான அணி, டெல்லி போகிறது. பா.ஜ.க.வுடன் தொகுதி உடன்பாடு பேசி முடிக்கப்படுகிறது’ என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் பேட்டி, என்று பிரபல இணையத்தளத்தில் பேட்டி வெளிவந்தது. சில மணி நேரங்களில் அதை மறுத்த மத்திய அமைச்சர் பிரகாஷ்,

‘விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவிக்க ஒப்புக் கொள்ளவில்லை. இந்தப் பேட்டியை நான் கொடுக்கவே இல்லை. அந்த இணையத்தளத்தின் மீது பிரஸ் கவுன்சிலில் புகார் செய்வேன்’ என்றார்.

பல்வேறான குழப்பங்களிடையே தான், தே.மு.தி.கவின் ‘மகளிர் தின விழா’ பொதுக்கூட்டம், சென்னையில் உள்ள ராயப்பேட்டை வை.எம்.சி.ஏ மைதானத்தில் மார்ச் 10ஆம் திகதி நடைபெற்றது. முதலில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘தி.மு.க என்றால் தில்லுமுல்லுக் கழகம்.

அ.தி.மு.க என்றால் அனைத்திலும் தில்லுமுல்லுக் கழகம். இந்த இரண்டு கட்சிகளையும் தமிழகத்திலிருந்து விரட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது’ என்று விஜயகாந்தின் அறிவிப்பு வரும் பின்னே ஓசை வரும் முன்னே என்று, தன் பேச்சை நிறைவு செய்தார்.

பிரேமலதா விஜயகாந்த், பேச்சை நிறைவு செய்யும் நிலையில் மேடைக்கு வந்த விஜயகாந்த், ‘கூட்டணியை முதலில் சொல்லவா அல்லது பேசிவிட்டு இறுதியில் சொல்லவா’ என்று பேசி விட்டு, ‘என்னைக் கூட்டணிக்கு அழைத்த அனைத்துத் தலைவர்களுக்கும் நன்றி’ என்றார்.

இப்படி நன்றி சொல்லி விட்டு, ‘கூட்டணி யாருடன்’ என்று மீண்டும் கேள்வி எழுப்ப, அங்கே கூடியிருந்த மகளிரணியினரில் சிலர் ‘தி.மு.க கூட்டணி’ என்று குரல் கொடுக்க, ‘உஷ்’ என்று கூறி அவர்களை அமைதியாக இருக்கச் சொன்னார்.

பிறகு இறுதியில் ‘நான் தெளிவாக இருக்கிறேன். எந்தக் குழப்பமும் இல்லை. தே.மு.தி.க தனித்து தேர்தலில் போட்டியிடுகிறது’ என்று அறிவித்தார். அவர் அறிவிப்பில் உற்சாகம் இருந்தது. ஆனால், எதிரில் அமர்ந்திருந்த மகளிர் மத்தியிலோ அல்லது மேடையில் அமர்ந்திருந்த மற்ற முன்னணித் தலைவர்கள் மத்தியிலோ எந்த வித ஆரவாரமோ, ஆர்ப்பரிப்போ இல்லை.

தனித்துப் போட்டி என்று விஜயகாந்த் அறிவித்துள்ளதன் பின்னணியில் உள்ள வியூகம் என்ன, ஆரம்பத்திலிருந்து தே.மு.தி.க தனியாக போட்டியிட வேண்டும் என்று தமிழகத்தில் விரும்பிய கட்சி அ.தி.மு.க ஆகும். 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் தனித்துப் போட்டியிட்டதால், தங்கள் வெற்றியைத் தட்டிப் பறித்தது தி.மு.க தான்.

அதேபோல், இம்முறை தே.மு.தி.க தனித்துப் போட்டியிட வேண்டும் என்று விரும்பியது அ.தி.மு.க, அதன் மூலம் தி.மு.கவை சட்டமன்றத் தேர்தலில் தனிமைப்படுத்த முடியும் என்பது அ.தி.மு.கவின் கணக்கு.

இக்கணக்குக்கு வலுச் சேர்க்கும் விதத்தில், வைகோ, முத்தரசன், திருமாவளவன், ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் வழிநடத்தும் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக அடங்கிய, மக்கள் நலக்கூட்டணி, தனியாகப் போட்டியிடுவதாக அறிவித்தது. அதற்கு முன்பாகவே டொக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி, தனி அணியாகக் களமிறங்கியது.

‘அ.தி.மு.க ஆட்சியை அகற்ற, எந்தத் தியாகமும் செய்வேன்’ என்று முழக்கம் செய்த விஜயகாந்த், திடீரென்று அதற்குரிய வாக்கு வங்கி இல்லாமலேயே தனியாகக் களம் கண்டிருப்பது தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுவரை இரு தேர்தல்களில் தனியாக போட்டியிட்டுள்ள தே.மு.தி.க, 2006இல் இடம்பெற்ற சட்டமன்ற தேர்தலில் தனியாகக் களம் கண்டு, ஆட்சியிலிருந்த அ.தி.மு.கவால் வெற்றி பெறவில்லை. அதேபோல், இம்முறை ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தி தனியாக போட்டியிடுகிறது.

தமிழகத் தேர்தல் வரலாற்றில் இதுவரை அ.தி.மு.க அல்லது தி.மு.கவுடன் கூட்டணி வைத்து விட்டு, தனியாகப் போட்டியிட்ட கட்சிகளின் வாக்கு வங்கி குறைந்தே இருக்கிறது. பா.ம.க, ம.தி.மு.க, மறைந்த மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் (இப்போது வாசன் தலைமையில் அந்த காங்கிரஸ் இருக்கிறது), ஏன், காங்கிரஸ் கட்சியும் அவ்வாறான நிலையை சந்தித்தது.

விஜயகாந்த், 2006 சட்டமன்ற தேர்தலில் 8 சதவீத வாக்குகளையும் 2009 நாடாளுமன்ற தேர்தலில் 10 சதவீத வாக்குகளையும் பெற்றார். ஆனால், அந்த வாக்கு சதவீதத்துக்;கான வெற்றியை அ.தி.மு.கவுடன் 2011 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்த போதும் சரி, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்த போதும் சரி பெறவில்லை. நாடு முழுவதும் மோடி அலை வீசிய போது அவர், கூட்டணியில் இடம்பெற்று தமிழகத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கூட தே.மு.தி.கவால் பெற முடியவில்லை என்பதே உண்மை.

தி.மு.கவும் அ.தி.மு.கவும் பலவீனம் அடைந்துள்ளன என்று கருதும் விஜயகாந்த் ‘தனித்துப் போட்டியிட்டு தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க இதுவே தக்க தருணம்’ என்று நினைக்கலாம். ஆனால், அதற்குரிய அடிப்படை வாக்கு வங்கி அவரிடம் இல்லை என்பது அவருக்கு மட்டுமல்ல. அவரை நம்பியுள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றாகவே புரிகிறது.

சட்டமன்றத்தின் கடைசி கூட்டத் தொடர் முடிந்த வேளையில், விஜயகாந்தின் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவியைப் பறித்த அ.தி.மு.க, விஜயகாந்தின் மீது பல்வேறு அவதூறு வழக்குகளை மாநிலம் முழுவதும் பதிவு செய்தது. இதற்காக உச்சநீதிமன்றம் வரை போய் கூட, வழக்கு விசாரணைக்குத் தடைபெற்று வந்திருக்கிறார் விஜயகாந்த். அவரது கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அறுவரை இடைநிறுத்தியது. அதற்காக உச்சநீதிமன்றம் சென்று அந்த உத்தரவை இரத்துச் செய்து வாங்கி வரப் போராடினார் விஜயகாந்த்.

அவர், சில மாதங்களுக்கு முன்பு ‘அ.தி.மு.க ஆட்சியை அகற்ற எந்தத் தியாகமும் செய்யத் தயார்’ என்றார். அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறி ‘அ.தி.மு.கவை வீழ்த்துவதற்கு எனக்கு வாக்கு வங்கி இருக்கிறதா, இல்லையா என்பது கேள்வி அல்ல. நான் ஆட்சிக்கு வருகிறேன் பார்’ என்ற ரீதியில் 2016 சட்டமன்ற தேர்தலுக்கான ‘சக்கரவியூகத்தை’ அமைத்துள்ளார்.

விஜயகாந்தின் இந்த முடிவினை அடிப்படையாக வைத்து, இனி தமிழக அரசியல் களத்தில் எத்தனை முனைப் போட்டி என்பது வெளிவரும். இப்போதைக்கு அ.தி.மு.க, தி.மு.க- காங்கிரஸ், மக்கள் நலக்கூட்டணி, பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க, பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி என்று ஏழு முனைப் போட்டிக்கு தமிழக தேர்தல் களம் தயார் நிலையில் இருக்கிறது.

இந்த ஏழு முனைகள், எந்த முனை மழுங்கி வேறு கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் என்பது போகப் போகத் தெரியும். தேர்தலுக்கு கால அவகாசம் இருப்பதால் கடைசி நேர அதிசயங்கள் எது வேண்டுமானாலும் ‘தேர்தல் கூட்டணி’ விடயத்தில் அரங்கேறலாம் என்பதே இப்போதைக்கு தமிழக சட்டமன்றத் தேர்தல் நிலவரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதலை தாக்கி இளைஞன் பலி..!!
Next post யாழில் கத்திமுனையில் பல மில்லியன் பெறுமதியான நகைகள் கொள்ளை..!!