ஆலங்குளம் அருகே ஒரே குடும்பத்தில் 3 பேர் படுகொலை: கொலையாளியை நெருங்க முடியாமல் போலீசார் திணறல்…!!
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 75). இவரது மகள் பேச்சித்தாய்(50). இவரது கணவர் முருகன். இவர்களது மகள்கள் கோமதி(25), மாரியம்மாள் (21), உஷா (18), சதீஷா(15), மகேஸ்வரி(12), லட்சுமி (6). இவர்களில் கோமதி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.
வீட்டில் தனியாக இருந்த கோமதியை நெட்டூரை சேர்ந்த முத்துராஜா என்ற ஆண்டவர்(32) பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக கோமதியின் தாயார் பேச்சித்தாய், மாரியம்மாள் இருவரும் ஆலங்குளம் போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆண்டவர் கடந்த பிப்ரவரி மாதம் 16–ந் தேதி மாலை அரிவாளுடன் பேச்சித்தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர் அங்கு இல்லாததால் ஆத்திரத்துடன் வெளியேறிய ஆண்டவர் அப்பகுதியில் உள்ள ஒரு கோவில் முன்பு அமர்ந்திருந்த பேச்சித்தாயின் தந்தை கோவிந்தசாமியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை வெறி அடங்காத ஆண்டவர் ரத்தம் சொட்டச் சொட்ட அரிவாளுடன் பேச்சித்தாய், மாரியம்மாள் ஆகியோரை தேடி ரெட்டியார்பட்டி சாலைக்கு சென்றார். ஊரக வேலை திட்ட பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த அவர்கள் இருவரையும் ஆண்டவர் வழிமறித்து சரமாரியாக வெட்டினார். இதில் மாரியம்மாள் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்தார். அரிவாள் வெட்டில் காயமடைந்த பேச்சித்தாயும் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமறைவான ஆண்டவரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் உத்தரவின் பேரில், ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கு மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார், கொலையாளி ஆண்டவரை தூத்துக்குடி, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் தீவிரமாக தேடினர். ஆனால் கொலைகள் அரங்கேறி 20 நாட்களுக்கு மேல் ஆகியும் ஆண்டவர் சிக்கவில்லை. அவர் எங்கு உள்ளார்? என்ற தகவல் இதுவரை போலீசாருக்கு கிடைக்கவில்லை.
ஆண்டவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருப்பூரில் வசித்து வந்தபோது மனைவியை அரிவாளால் வெட்டிக்கொன்ற வழக்கு, கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்ட சில வழக்குகளில் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வீ.கே.புதூரை சேர்ந்த ஒருவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப் பட்டிருந்த ஆண்டவர் கொலை சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதனால் ஆண்டவர் சிறையில் இருந்தபோது அவருடன் பழகிய நண்பர்கள் உதவியுடன் தலைமறைவாக உள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் செல்போன் உபயோகிக்காததால் ஆண்டவர் எங்கு உள்ளார் என போலீசார் கண்டு பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் நெட்டூரில் உள்ள உறவினர்கள் யாருடனும் ஆண்டவர் இது வரை தொடர்பு கொண்டு பேசவில்லை. இதனால் அவர் குறித்த எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.
திருப்பூர், தூத்துக்குடி என ஆண்டவர் வேலை பார்த்த இடங்கள், அவருடன் சிறையில் இருந்தவர்கள் ஊர்கள் என பல இடங்களில் தனிப்படை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விரைவில் அவர் சிக்குவார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Average Rating