மண்டைதீவு கடலில், கடற்படையினரால் நடத்தப்பட்ட மிகப்பெரிய படுகொலை!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 69) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்

Read Time:17 Minute, 35 Second

timthumb (2)கடலில் நடந்த மனித வேட்டை. 1986 இல் நடைபெற்ற மிகப்பெரிய சோகச் சம்பவம் மண்டைத்தீவு படுகொலைகள்.
13.6.86 அன்று கடலில் தொடங்கிய வேட்டை, தரையிலும் தொடர்ந்து 32 மீனவர்களின் உயிர்களைக் குடித்தது.

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை வழிமறித்த கடற்படையினர் சரமாரியாக சுட்டுத்தள்ளினார்கள்.

சூடுபட்ட மீனவர்கள் படகுகளுக்குள் சுருண்டுவிழுந்து உயிர்விட்டார்கள்.

மண்டைதீவு கரையோர வாடிகளில் தங்கியிருந்த மீனவர்களையும் கடற்படையினர் தாக்கினார்கள். துப்பாக்கியால் சுட்டுத்தள்ளியதுடன், வாளாலும் வெட்டப்பட்டனர்.

துப்பாக்கிப்பிரயோக சத்தங்களைக் கேட்டதும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இராணுவப்பிரிவு மண்டைத்தீவுக்கு சென்றது. கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தியது.

அதனையடுத்து கடற்படையினர் தமது தாக்குதலை நிறுத்திவிட்டுத் திரும்பிச் சென்றனர்.

கடலின் நடுவே படகுகளில் தத்தளித்துக்கொண்டிருந்த மீனவர்களை ஈ.பி.ஆர்.எல்.எஃப். இராணுவப்பிரிவு சென்று காப்பாற்றியது. பலியானவர்கள் உடல்களும் கரைக்கு கொண்டுவரப்பட்டன.

32 மீனவர்கள் கடற்படையினரால் கொல்லப்பட்டனர்.

அதில் மூன்றுபேர் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் பகுதிநேர உறுப்பினர்கள். அவர்களும் கடற்தொழிலாளர்களாக இருந்தனர்.

கொல்லப்பட்ட 32 மீனவர்களும் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்தவர்கள். பலியானவர்களின் உடல்களை குருநகருக்கு கொண்டுவந்து சேர்த்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

அப்போது ஈ.பி.ஆர்.எல்.எஃப். இராணுவப்பிரிவின் ஊர்காவத்துறைப் பொறுப்பாளராக இருந்தவர் மனோகரன்.

பலியானவர்களை கடலில் மீட்டெடுத்ததிலும், கடற்படையினரின் தாக்குதலை தடுத்து நிறுத்துவதிலும் மனோகரனும், அவரது பொறுப்பின்கீழ் இருந்த உறுப்பினர்களும் உயிரைப் பணயம்வைத்து செயற்பட்டார்கள்.

அதனால்தான் பலியானவர்களது உடல்களை மீட்க முடிந்ததுடன், ஏனைய மீனவர்களையும் பாதுகாக்க முடிந்தது.
(மனோகரன் தற்போது ஈ.பி.டி.பி.யில் இருக்கிறார்.)

மரணச்சடங்கு

பலியானவர்களது உடல்களை குருநகருக்கு கொண்டுவந்து மக்களின் அஞ்சலிக்காக வைத்தனர். இந்த இடத்தில் குருநகரில் காணப்பட்ட இயக்க ஆதரவு நிலைபற்றியும் கூறவேண்டும்.

குருநகரில் ஒரு பகுதி புலிகளின் கோட்டையாக இருந்தது. மறுபகுதி ஈ.பி.ஆர்.எல்.எஃப். கோட்டையாக இருந்தது.

கடற்படையினரால் கொல்லப்படடவர்கள் புலிகள் அமைப்பின் கோட்டையாக இருந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்.

பலியானவர்கள் உடல்களை ஈ.பி.ஆர்.எல்.எஃப். கொண்டுவந்து சேர்த்தவுடன் அப்பகுதியில் உள்ளவர்களது மனம் மாறிவிட்டனர்.

மரணச் சடங்குகளை நடத்தும் பொறுப்பை டேவிற்சனும், ரமேஷ், மோகன் ஆகியோர் முன்னின்று கவனித்தனர்.

அரசின் மீது மக்கள் எதிர்ப்பை உருவாக்கும் வகையில் மரணச்சடங்கை பெரியளவில் நடத்த திட்டமிடப்பட்டது.

துண்டுப்பிரசுரங்கள் அச்சிடப்பட்டன. பதாகைகள் தொங்கவிடப்பட்டன. யாழ் நகரமே சோகமயமாக மாறியது. பெருந்திரளான மக்கள் யாழ்ப்பாணத்தில் பல பாகங்களிலும் இருந்து குருநகருக்கு வந்தனர்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் பகுதிநேர உறுப்பினர்களாக இருந்த கடற் தொழிலாளர்களது உடல்களுக்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப். கொடி போர்த்தப்பட்டிருந்தது.

புலிகள் அமைப்பில் இருந்து திலீபனும், கிட்டுவும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பலியானவர்களில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்களும் இருப்பதால் மரணச் சடங்கை ஈ.பி.ஆர்.எல்.எஃப். முன்னின்று நடத்தும் என்று திலீபனுக்கு சொன்னார் டேவிற்சன்.

“அப்படியே செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள் புலிகள் அமைப்பினர்.

இறுதி ஊர்வலம் பொருந்திரளான மக்களுடன் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப். பாதுகாப்பு வழங்கியது.

குருநகர் சவச்சாலையில் நடைபெற்ற இறுதி அஞ்சலிக் கூட்டத்தில் டேவிற்சன் உரையாற்றினார். ஒரு மணிநேரமாக உணர்ச்சிகரமாக உரை நிகழ்த்தினார் டேவிற்சன்.

பலியான தமது உறுப்பினர்களுக்காக மரியாதை வேட்டுக்களைத் தீர்த்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

தொலைக்காட்சி சேவைகள்

14.6.86 புதன்கிழமையன்று இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் தனியார் தொலைக்காட்சி சேவையகள் பல நடத்தப்பட்டன.

தமிழ் சினிமா படங்களை காண்பிப்பதுதான் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் வேலை.

தமது தொலைக்காட்சி ஒளிபரப்பு எந்தப் பகுதி வரை வேலை செய்கிறதோ, அந்தப்பகுதிகளில் உள்ள வீடுகளில் பணம் வசூலித்துக் கொள்வார்கள். அதுதான் வருமானம்.

அப்போது பலாலி இராணுவமுகாமில் இருந்து இராணுவத்தினரும் தொலைக்காட்சி சேவை ஒன்று நடத்தினார்கள்.
தமிழ் மக்களின் தொலைக்காட்சி என்று அதற்கு பெயர் சூட்டியிருந்தனர்.

தமிழ் திரைப்படங்களில் தாராளமான காட்சிகள் கொண்ட படங்களாகப் பார்த்து ஒளிபரப்பினார்கள். இடைக்கிடையே இயக்கங்களுக்கு எதிரான பிரச்சாரங்களும் செய்யப்பட்டன.

அவர்களது தமிழ் உச்சரிப்பும், வசன பிரயோகங்களும் சிரிப்பூட்டும் வகையில் அமைந்தனவே தவிர, யாரையும் கவரத்தக்கதாக இருக்கவில்லை.

துப்பாக்கிச் சூடு

குருநகர் மரணச் சடங்கை தனியார் தொலைக்காட்சி மூலமாக ஒளிபரப்புவதற்காக மரணச்சடங்கு முடிந்த தினத்தன்றே எடிட் செய்து கொண்டு சென்றனர் டேவிற்சனும், ரமேசும்.

அரியாலையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிலையம் நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருவரும் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று துப்பாக்கி வேட்டுக்கள் அவர்களை நோக்கித் தீர்க்கப்பட்டன.

மோட்டார் சைக்கிளை டேவிற்சன் செலுத்திக் கொண்டிருந்தார். ரமேஷ்; பின்புறம் அமர்ந்திருந்தார்.

சூடுபட்டு இருவரும் காயமடைந்தனர். துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர்கள் புலிகள்.

ரெலோ இயக்கத்தினர் என்று நினைத்து தவறுதலாக துப்பாக்கிப் பிரயோகம் இடம் பெற்றதாக கூறினார்கள் புலிகள் அமைப்பினர்.

அந்த விளக்கத்தை ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை.

துப்பாக்கிப்பிரயாகம் செய்யப்பட்ட இருவரும் புலிகள் இயக்கத்தினருக்கும் பரிச்சயமானவர்கள். எனவே அடையாளம்

தெரியாமல் தவறுதலாக நடந்ததாகச் சொல்வதை ஏற்கமுடியாது என்பது ஈ.பி.ஆர்.எல்.எஃப். தரப்பு நியாயம்.

கண்டனம்
புலிகளது நடவடிக்கையைக் கண்டித்து பத்திரிகை அறிக்கை, துண்டுப்பிரசுரம் என்பவற்றை வெளியிட்டது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது இதுதான்:

“ஒரு புறத்தில் எதிரியிடம் இருந்து மக்களைப்பாதுகாக்க பதுங்கு குழிகளை வெட்டும்படி அறைகூவிக்கொண்டு, மறுபுறத்தில் போராளிகளுக்குப் புதை குழிகள் தோண்டுவது எதைக் காட்டுகிறது?

“தற்செயலாக,”… “தவறுதலாக”… “தெரியாமல்” இப்படியான காரணங்கள் எவையும் ஏற்கக்கூடியவை அல்ல.

ஒரு போராளி தன் துப்பாக்கியை இயக்குவதற்கு முன்னால் அதற்குரிய ஒழுங்குகளை கடைப்பிடிக்க வேண்டும்.

சைகைகாட்டுதல், முன்னறிவித்தல் கொடுத்தல், எச்சரிக்கை செய்தல், சந்தேகத்தை நிச்சயப்படுத்திக்கொள்ளல் போன்ற ஒழுங்குகள் ஒவ்வொரு போராளிக்குமான கட்டுப்பாடாக இருக்க வேண்டும்.

அதிகாரப்போட்டி, ஆணவம், தான்தோன்றித்தனம் போன்ற தீய நடத்தைகளுக்குப் பலியாகி போராளிகளின் ஐக்கியத்தை சீர்குழைப்பது ஈழப்போராட்டத்திற்கு தீங்கானது.

ஈழமக்களே! எமது தோழர்கள் டேவிற்சன், ரமேஷ்; ஆகியோர்மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் ஈழமண்ணில் சமாதானத்தைப் பேணுவதற்கும், போராளிகளிடையே ஐக்கியத்தைக் கட்டி வளர்ப்பதற்கும் எதிரான ஒரு அராஜக நடவடிக்கையாகும்.

கொடிய எதிரிக்கெதிரான எமது புனித யுத்தத்தில் எமது உன்னதமான தோழர்கள் பலரை நாம் இழந்தோம். இந்த வேதனை எம் நெஞ்சை நெருடிய போதும் நாம் நிலை குலையவில்லை.

இந்த மண்ணில் எவ்வளவு கொடூரம் நிகழ்ந்தபோதும், உங்கள் குடும்பத்தில் சாவு வீடுகளுக்கு மாதக்கணக்கில் இடைவெளிகள் ஆவது உண்டு.

ஆனால், எங்கள் குடும்பத்தில், எமது அன்றாட விடுதலை இயக்கத்தில்-சாவு அன்றாடம் நடக்கிறது. ஆனாலும் நாம் அழவில்லை. நமது கடமையை விடாப்பிடியாகத் தொடர்கிறோம். இந்த இழப்புக்கள் எதிரியால் ஏற்பட்டவை.

ஆனால், எமது இயக்கம் என்ற ரீதியில் பார்த்தால்கூட தோழர் றேகன்.. தோழர் அமீன்.. தோழர் பிரதாப்.. இவர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்கள்.

இன்று தோழர்கள் டேவிற்சன், ரமேஷ்; மீது துப்பாக்கிப் பிரயோகம்.. இதுவும் புலிகளால்..

மக்களே! இப்போது நீங்களே தீர்மானியுங்கள்.” என்று தொடர்ந்தது பிரசுரம்.

ஆர்ப்பாட்ட ஊர்வலம்

ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் தயாரிக்கப்பட்ட மாகாணசபைகள் திட்டத்தை ஈழப்போராளி அமைப்புக்கள் நிராகரித்திருந்தன.

தமிழர் விடுதலைக் கூட்டணி, இ.தொ.கா. குமார் பொன்னம்பலம் ஆகியோர் மாகாணசபை திட்டத்தை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

மாகாணசபை திட்டத்தை எதிர்த்து 14.7.86 அன்று யாழ்ப்பாணத்தில் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடைபெற்றன.

கூட்டணி செயலதிபர் அமிர், இ.தொ.கா.தலைவர் தொண்டமான், குமார் பொன்னம்பலம் ஆகியோர் மீது கண்டனம் தெரிவிக்கும் சுலோக அட்டைகளும் காணப்பட்டன.

“ஈழமே ஒரே தீர்வு. அரைகுறைத் தீர்வுகள் வேண்டாம்.” என்பதுதான் பிரதான கோஷம்.
பூசா முகாம்

சந்தேகத்தின்பேரில் பெருந்தொகையாகக் கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்களை காலியில் உள்ள பூசா முகாமில் தடுத்து வைத்தது ஜே.ஆர். அரசு.

ஐயாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

ஜெர்மனில் ஹிட்லர் காலத்தில் இருந்த மனிதவதை முகாம்களோடு பூசா முகாம் ஒப்பிடப்பட்டது.

ஜே.ஆர் கண்டனங்களையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளவில்லை. பூசா முகாமில் இளைஞர்களை அடைப்பது தொடர்ந்தது.

இடநெருக்கடி, சுகாதாரக் கேடு போன்றவற்றால் பூசா முகாமில் தொற்று நோய்கள் பரவின.

பாதிரியார் படுகொலை

யாழ்ப்பாணத்தில் உள்ள தோலகட்டிப்பகுதியில் புகுந்த இராணுவத்தினர் அங்குள்ள கத்தோலிக்க மதகுரு ஒருவரை சுட்டனர்.

20.6.86 அன்று இச் சம்பவம் நடைபெற்றது.

வண.வின்சென்ட் லோஸ்ட் என்னும் மதகுருவே சுட்டுக்கொல்லப்பட்டவராவார்.

அவருக்கு வயது 65. இந்தியா பெங்க@ரைச் சேர்ந்தவர். வசாவிளானில் இருந்து பலாலி நோக்கி சென்று கொண்டிருந்த இராணுவத்தினரே மதகுருவை சுட்டனர்.

இதனையடுத்து தோலகட்டிப் பகுதியில் நிலைகொண்டிருந்த படையினர் மீது புலிகள் தாக்குதல் நடத்தினார்கள். இராணுவத்தினர் திரும்பிச் சென்றனர்.

முகாம் தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டம் கிரானில் இருந்த புலிகளது முகாம் ஒன்றை இராணுவத்தினர் தாக்கினார்கள். மாங்கேணி இராணுவ முகாமில் இருந்து சென்ற இராணுவத்தினரே தாக்குதலில் ஈடுபட்டனர்.

அத்தாக்குதலுக்கு காரணமான மாங்கேணி இராணுவமுகாமைத் தாக்கத் திட்டமிட்டனர் புலிகள்.

5.7.86 இரவு 11.55 மணி. புலிகளது கெரில்லா அணி தாக்குதலை ஆரம்பித்தது.
இராணுவத்தினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

புலிகள் தமது தாக்குதல் நடவடிக்கைக்கு ஆர்.பி.ஜி தாக்குதலையே பிரதானமாக நம்பியிருந்தனர். ஆர்.பி.ஜி இயங்க மறுத்து பொறுத்த நேரத்தில் கைவிட்டது.

எனவே-தாக்குதலை நிறுத்திவிட்டு திரும்பியது புலிகளது அணி.

மாங்கேணி தாக்குதலுக்கு முன்பாக பனியங்கேணி, காயல்கேணி ஆகிய பாலங்கள் புலிகளால் தகர்க்கப்பட்டன.

மாங்கேணி இராணுவ முகாமுக்கு உதவிகள் வருவதைத் தடுப்பதற்காகவே பாலங்கள் தகர்க்கப்பட்டன.

ஆனாலும் மாங்கேணி இராணுவ முகாம் தாக்குதல் புலிகளுக்கு வெற்றியாக அமையவில்லை.

20 பேர் பலி

அனுராதபுரத்திலிருந்து மன்னாருக்கு சிங்கள மக்களை கொண்டுவந்து குடியேற்ற திட்டமிட்டது ஜே.ஆர். அரசு.

அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க காணிக்குடியேற்ற மேலதிகாரிகள் மன்னாருக்குச் சென்றார்கள்.

மேலதிகாரிகள் ஐந்து பேரும் ஜீப் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது கண்ணி வெடி வெடித்தது. ஐந்து பேரும் பலியானார்கள்.

கண்ணிவெடித் தாக்குதலை நடத்தியது புலிகள் இயக்கத்தினர்.

திருக்கோணமலையில் குமரேசன் கடவை என்னும் தமிழ் கிராமம் ‘கோமாங்கடவ’ என்று பெயர் மாற்றப்பட்டது.
அக்கிராமத்தில் குடியேறியிருந்த சிங்கள மக்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு மாறிய நாள்:(மார்ச் 11- 1918)
Next post களத்துக்கு வெளியே, குஸ்தி போடும் சீமான்.. -தெய்வீகன்…!!