மொனராகலைப் பகுதியில் 10 வயதிற்கு மேற்பட்ட தமிழர்களின் புகைப்படங்களை சமர்ப்பிக்க பணிப்பு
மொனராகலைப் பகுதியில் வாழும் 10 வயதிற்கு மேற்பட்ட தமிழர்களின் புகைப்படங்களையும் மொனராகலை காவல்நிலைய குற்றப்புலனாய்வுத் துறையிடம் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டிருப்பது அப்பட்டமான இன ஒடுக்குமுறையும், பகிரங்க மனித உரிமையை மீறும் செயல் என்று ஊவா மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் ஊவா மாகாண அமைப்பாளருமாகிய அ. அரவிந்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது; மொனராகலைப் பகுதியிலுள்ள முப்பனாவள்ளி, மரகல, குமாரதொல, நக்கல,உலந்தாவ ஆகிய தோட்டங்களில் வசிக்கும் 10வயதிற்கு மேற்பட்ட சகல தமிழர்களின் புகைப்படங்களையும் தமது சுயவிபரத்தோடு மொனராகலை காவல் நிலைய குற்றப்புலனாய்வு துறையினரிடம் காலதாமதமின்றி ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்டவர்களினால் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. இதில் சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள்,முதியோர் என பாரபட்சமின்றி அனைவரும் புகைப்படங்களை ஒப்படைக்க வேண்டுமெனவும் அவ்வாறு செய்ய தவறின் கடுமையான தண்டனைக்கு ஆளாக வேண்டிவரும் எனவும் அச்சுறுத்தப்பட்டிருப்பதாகவும் அங்குள்ள தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர். ஒன்றும் அறியாத அப்பாவி சின்னஞ் சிறார்கள் கூட இந்த அவலத்திற்கு உள்ளடக்கப்பட்டிருக்கின்றார்கள். இது தமிழ் இனத்தையே கேவலப்படுத்தும் செயல் மாத்திரமல்லாது உளரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மறைமுகமான அடக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.
குற்றப்புலனாய்வு துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட புகைப்படப்பிடிப்பாளர்கள் தோட்டவாரியாக சென்று நபர் ஒருவருக்கு தலா ரூபா. 60/= கட்டணம் அறவிடப்படுவதாகவும் தோட்டத்தில் தொழில்புரியும் குடும்பத்தவரிடம் இருந்துஅவர்களின் மாதாந்த வேதனத்திலிருந்து அறவிடப்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது.
வருமானமின்றி பொருளாதார சுமையில் சிக்குண்டிருக்கும் தோட்டப்புற மக்களுக்கு இது சுமக்க முடியாத சுமை என்றும் தமிழ்மக்கள் மாத்திரம் இவ்வாறு வேறாக அடையாளமிடப்பட்டிருப்பது பெரும்பான்மை இனமக்கள் மத்தியில் வாழும் தமக்கு பெரும் அசௌகரியத்தையும் அவர்கள் தங்களை சந்தேகக்கண்ணோடு பார்க்கும் நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அங்கு வாழும் சிங்கள, முஸ்லிம் இனத்தவர்களுக்கு இவ்வாறான அவலம் இல்லையெனவும் தம்மை பயங்கரவாதிகள் என அடையாளப்படுவதற்கான ஒரு முனைப்பே தவிர இதில் வேறெதுவும் இல்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் கிழமைகளில் மொனராகலை பகுதியின் பாராவில மற்றும் கும்புக்கன் தோட்டத்தில் வாழும் சுமார் 1500 நபர்களின் புகைப்படங்களை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. தமிழன் என்றால் எதையும் செய்யலாம். கேட்பதற்கு ஆளில்லை என்ற எதேச்சதிகாரி போக்கையே இது வலியுறுத்துகின்றது. மேலும், இவ்வாறான செயற்பாடுகள் இதுவரையிலும் மலையகத்தில் ஏற்படவில்லை.
இது ஏனைய பகுதிகளுக்கும் ஒரு கசப்பான முன் உதாரணமாக இருக்கப்போகிறது என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்திருக்கின்றது. மொனராகலை மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் தமிழர்கள் வாழ்ந்தாலும் இவர்கள் அனைவரும் அரசியல் அநாதைகளாக வாழ்கின்றனர்.
இவர்களை காப்பது நம் அனைவரினதும் தார்மீக கடமையாகும். எனவே, இவ்விடயம் தொடர்பாக அனைத்து மலையக தலைமைகளும் அரசியல் தொழிற்சங்க வேறுபாடுகளை மறந்து எமது சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் இவ் அவலத்தை போக்க உடனடியான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
சுற்றிவளைப்புகள், அநாவசிய கைதுகள், போன்றவற்றோடு ஒப்பிடுகையில், அவர்களுக்கு ஏற்படும் தாக்கத்தைவிட இது வித்தியாசமாகவுள்ளது. இது முழு இனத்துக்கும் ஒரு அழுத்தத்தை கொடுத்து, உளரீதியாக அவர்களை முடக்கும் ஒரு திட்டமாகவே இதை கருதவேண்டியுள்ளது. எவராலும் நியாயப்படுத்த முடியாத இச் செயற்பாட்டை மேற்கொண்டுள்ளமை அப்பட்டமான இன ஒடுக்கலாகும்.