பாட்டுப் பாடி, கடற்படையினர் மீது நடந்த அதிரடித் தாக்குதல்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 67) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”

Read Time:22 Minute, 9 Second

timthumb1986 மே மாதம் 5ம் திகதி, பிரிட்டன் தொலைக்காட்சியில் வீடியோ படம் ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அரைமணிநேரம் மட்டுமே ஒளிபரப்பப்பட்ட இந்தப் படத்திறகுப் பெயர்:

‘குழப்பம் நிறைந்த சொர்க்கபூமி’

படத்தை தயாரித்தவர் ஒரு பெண் நிருபர்: பெயர் அலிசன் போர்டியஸ்.

இலங்கைக்கு வந்து யுத்தப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்து கிட்டத்தட்ட 17 கஸட் ஃபிலிம்களில் படம்பிடித்தார்.

அலிசனோடு அவரது நண்பர் ரிம் கூப்பரும் இலங்கை வந்திருந்தார்.

யுத்தப்பிரதேசங்களில் வெளிநாட்டு நிருபர்கள் தகவல்களைத் திரட்டுவதை அரசாங்கம் விரும்பவில்;லை.

அலிசன் போர்டியஸையும், கூப்பரையும் பொலிசார் கைதுசெய்தனர். இருவரையும் ஏற்றிச் சென்ற டாக்ஸி சாரதி நையப் புடைக்கப்பட்டார்.

அந்தக் குழப்பத்தில் அலிசன் போர்டியஸ் ஒரு காரியம் செய்தார்.

தனது கமராவிலிருந்த கஸட் ஃபிலிமை கழற்றித் தனது பொக்கற்றுக்குள் போட்டுக்கொண்டார். பொலிஸ் நிலையத்தில் இருவரும் விசாரிக்கப்படடனர்.

தாங்கள் இருவரும் உல்லாசப் பயணிகள் என்று சாதித்தனர். வெளிநாட்டவர்கள் என்பதால் வேறு வழியில்லாமல் இருவரையும் விடுதலை செய்து அனுப்பியது பொலிஸ்.

அதன்பின்னர் தொடர்ந்து தங்கள் வேலையைக் காட்டினார்கள் அலிசன் போர்டியசும், ரிம் கூப்பரும்.

அதன் பயனாகத்தான் ‘குழப்பம் நிறைந்த சொர்க்கபூமி’ பிரிட்டன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

பிரிட்டனிலுள்ள இலங்கைத்தூதரகம் அரண்டு போனது. அந்தப் படத்தில் ‘காண்பிக்கப்பட்டவை உண்மையில்லை’ என்று தூதரக அறிக்கை தெரிவித்தது.

‘தி கஸட்’ என்ற பிரிட்டி~; பத்திரிகையில் அலிசன் போர்டியல் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். அக்கட்டுரையில் ஒரு இடத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“ஆயுதங்கள், சாதனங்கள் வசதிக் குறைவாக இருந்தாலும் தமிழ் தீவிரவாதிகள் தொடர்ந்து போராடுவதற்கு உறுதி பூண்டுள்ளனர்.”

வெளிநாட்டு நிருபர்கள்

வெளிநாட்டு நிருபர்கள் தொடர்பாக ஒரு விடயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவர்களுக்கு சூடான செய்திகள் தேவை: பரபரப்பான தகவல்கள் தேவை.

தங்கள் பேனாக்களோடும், கமராக்களோடும் அவர்கள் புறப்பட்டுவிடுவார்கள். எங்கெங்கு மோதல்கள், சண்டைகள் எல்லாம் நடக்கின்றனவோ ஆங்கெல்லாம் பறந்து போய்விடுவார்கள்.

உள்நாட்டு யுத்தங்கள், அரசுகளுக்கு எதிராக கலகங்கள் என்பவை நடைபெறும் நாடுகளில் உள்ள அரசுகள் பத்திரிகையாளர்களைக் கண்டு பயப்படுகின்றன.

அதனால் பத்திரிகையாளர்களோடு – குறிப்பாக வெளிநாட்டு பத்திரிகையாளர்களோடு ஒத்துழைக்க மறுக்கின்றன. இடையூறுகளை விளைவிக்கின்றன.

அதன்பலனாக வெளிநாட்டு நிருபர்கள் மத்தியில் ஒரு வன்மம் ஏற்பட்டுவிடுகிறது.

“தடுக்கவா பார்க்கிறாய்? உன் தடையை மீறிக் காட்டுகிறோம் பார்” என்று தீர்மானித்து விடுகிறார்கள்.

அதன் விளைவு, அரசாங்கத்திற்கு எதிராகப் போராடும் அமைப்புக்கள் பக்கம் அவர்கள் சாய்ந்து விடுகிறார்கள்.

அதுமட்டுமல்ல, அரசாங்கத்திற்கு எதிராகப் போராடும் இயக்கங்கள், சாகசங்கள், புகைப்படங்கள் என்பவைதான் புதிய ஆச்சரியமான தகவல்கள்.

வெளிநாட்டுப் பத்திரிகைகளுக்குத் தேவையானவை அவைதான்.

இலங்கை ஒரு சொர்க்கபூமியாக இருந்தால் உல்லாசப் பயணிகள் வந்து குவிந்திருப்பார்கள். ஆனால் பத்திரிகையாளர்கள் வரமாட்டார்கள்.

குழப்பபூமியாக மாறியதால்தான் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் படையெடுக்கத் தொடங்கினார்கள்.

இந்திய நிருபர்கள் சிலர் இயக்கங்களின் படகுகளில் ஏறி யாழ்ப்பாணம் வந்து தகவல் சேகரித்தனர்.

தமிழ்நாடடில் இருந்து படகுமூலமாக முதன் முதலாக வந்த பத்திரிகையாளர் பகவான்சிங். ரெலோ இயக்கத்தினர்தான் அவரை அழைத்து வந்திருந்தார்கள்.

படகில் அவர் வரும்போது கடற்படைப்படபால் அவர் வந்த படகு துரத்தப்பட்டது, கடலுக்குள் தன் கதை முடிந்தது என்றுதான் நினைத்தார் பகவான்சிங். ஆனால் கடற்படைப் படகால் ரெலோ படகை பிடிக்க முடியவில்லை. பகவான்சிங் தப்பினார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியா திரும்பியதும் தனது அனுபவங்களை விபரித்து பல பத்திரிகைகளுக்கு எழுதினார்: பிரபலமாகியும் விட்டார்.

‘துக்ளக்’ சஞ்கிகையிலும் பகவான் சிங்கின் இலங்கைப் பயணக் கட்டுரை வெளியானதாக ஞாபகம்.
ஜெர்மன் பத்திரிகையாளர்

அதேபோல் ஜெர்மன் பத்திரிகையாளர் ஒருவரையும் தமிழ்நாட்டிலிருந்து படகு மூலமாக யாழ்ப்பாணம் அழைத்து வந்தது ரெலோ.

வெள்ளையினத்தவரான அந்தப் பத்திரிகையாளருக்கு ஒரே குஷி வீடியோக் கமரா, புகைப்படக் கமராக்கள் சகிதம் இயக்கங்களின் நடவடிக்கைகளை சுட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார்.

அவருக்காகவே ரெலோ உறுப்பினர்களும் அதிகப்படியாகவே ஆக் ஷன் போஸ்களில் நின்று படமாகிக் கொண்டிருந்தார்கள்.

கோட்டையில் இருந்து ஷெல் தாக்குதல், படையினர் முன்னேற முயல்வதும், இயக்கங்களின் பதில் தாக்குதல் நடத்தி படையினரை திருப்பி அனுப்புவதும் போன்ற காட்சிகளை ஓடியோடிப் படமாக்கினர்.

ரெலோ முகாமிலேயே தங்கியிருந்தார். திடீரென்று ஒருநாள் ரெலோமீது புலிகள் தாக்குதல் தொடுத்ததும் அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.

இராணுவத்தினர்தான் முகாமைவிட்டு வெளியேறி யாழ்ப்பாணத்திற்குள் புகுந்து விட்டார்களோ என்று நினைத்தார்.

இயக்க மோதல் என்பதை அவர் விளங்கிக்கொண்டபோது அதிர்ச்சியடைந்துவிட்டார். அவரைப் பாதுகாக்கக்கூடிய நிலையிலும் ரெலோ இருக்கவில்லை.

இறுதியில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பிடம் போய்ச் சேர்ந்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். படகுமூலமாக தமிழ்நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஜெர்மன் திரும்பியதும் தனது அனுபவங்களை புகைப்படங்களோடு வெளியிட்டார்.

ஈழம் முத்திரையும் தபாற் சேவையும்.. ஈழம் முத்திரை

1986 இல் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பால் ‘ஈழம் முத்திரை’ வெளியிடப்பட்டது.

பணநோட்டு, முத்திரை இரண்டும் மிக முக்கியமான விடயங்கள்.

‘முத்திரை’ வெளியிட்டு அதனைவைத்து தபால்சேவை நடத்துவது என்பது வடக்கில் தனியான அரசு ஒன்று இயங்குவதற்கான அடையாளமாகிவிடும்.

முத்திரை வெளியிட்டால் அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியுமா என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். யாழ் பிராந்தியக் கமிட்டிக்கு சந்தேகம்.

ஈழம் முத்திரை வெளியிடும் யோசனையை கொண்டுவந்தவர் டேவிற்சன். அதனை நடைமுறைப்படுத்தமுடியும் என்று பொறுப்பெடுத்தவர் ரமேஷ்.

புலிகளும் தனி முத்திரை வெளியிடும் திட்டத்தோடு இருந்தனர். திலீபன், கிட்டு ஆகியோர் அதற்கான யோசனையில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எஃப். முந்திக் கொண்டது.

‘ஓஃப்செட்’ முறையில் அச்சிட்டால்தான் முத்திரை அழகாகவரும். யாழ்ப்பாணத்தில் இருந்தது ஒரே ஒரு ஓஃப்செட் பிரஸ்தான்.

விஜயா ஓஃப்செட் பிரஸ் என்று பெயர் இருந்ததாக ஞாபகம். புலிகளுக்கு அந்த அச்சகத்தோடு தொடர்பு இருந்தது.

அங்குதான் ‘ஈழம் முத்திரை’ அச்சிடப்படடது. முதல் கட்டமாக பதினைந்தாயிரம் முத்திரைகள் அச்சிடப்பட்டன. முத்திரை வடிவமைப்பு டேவிற்சன்தான் உருவாக்கியிருந்தார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள நாவலர் மண்டபத்தில் ‘ஈழம் முத்திரை வெளியீட்டு விழா’ நடைபெற்றது.

விழாவுக்கு டேவிற்சன் தலைமை தாங்கினார். பிரதம பேச்சாளராக கலந்துகொண்டவர் எச்.என். பெர்னான்டோ. அவர் பிரபல தொழிற்சங்கவாதி. சிங்கள முற்போக்காளர்.

தென்னிலங்கையில் பொலிசார் அவரை வலைபோட்டுத் தேடிக்கொண்டிருந்தார்கள்.

அவர் யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பினருடன் தங்கியிருந்தார்.

ஈழம் முத்திரை விழாவில் கலந்து கொண்ட எச்.என்.பெர்னான்டோ சிங்களத்தில் உரையாற்ற, அதனை தமிழில் மொழி பெயர்த்தார் சிவதாசன்.

“தமிழர்கள் ஒரு தேசிய இனம். அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கிறது. பிரிந்து செல்ல அவர்கள் விரும்பினால் அதனைத் தடுக்க முடியாது.” என்று பேசினார் எச்.என்.பெர்னான்டோ.

அவரது பேச்சுக்கு மண்டபம் அதிரும் கரவொலி எழுந்தது.

தபாற் சேவை

ஈழம் முத்திரைகளை யாழ்குடாநாடு முழுக்க விற்பனை செய்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

‘ஈழம் தபால் சேவை’ என்று தனியான மஞ்சள் நிற வாகனமொன்று நடமாடும் முத்திரை விற்பனை நிலையமாகச் செயற்பட்டது.

ஈழம் முத்திரைகளோடு யாழ் பிரதம தபாலகத்தில் கடிதங்கள் மலைபோலக் குவிந்தன.

‘ஈழம் முத்திரை’ ஒட்டப்பட்;ட கடிதங்களை தனியாக எடுத்துவைக்குமாறு உயரதிகாரிகள் கூறிவிட்டார்கள். அதனையறிந்து ஈ.பி.ஆர்.எல்.எஃப். தபாலகத்திற்குள் சென்று, ஈழம் முத்திரைகள் மீது தபாலக சீல் அடிக்குமாறு உத்தரவிட்டது.

ஊழியர்களுக்கு உள்ளூர சந்தோசம்தான்.

அதேவேளை ஈழம் முத்திரைக்கு சீல் அடிக்கக்கூடாது என்று தடைவிதித்த சில உயரதிகாரிகள் எச்சரிக்கப்பட்டனர்.

ஈழம் முத்திரை விடயத்தில் மற்றொரு வேடிக்கையும் நடந்தது.

யாழ்ப்பாணத்தில் வாங்கிய ஈழம் முத்திரையை கொழும்பில் இருந்த நண்பருக்கு அனுப்பியிருந்தார் ஒருவர்.
அந்த நண்பர் என்ன செய்தார் தெரியுமா? முத்திரை அனுப்பிய நண்பருக்கு ஒரு கடிதம் எழுதி, அதிலே ஈழம் முத்திரையை ஒட்டி அனுப்பிவிட்டார்.

கொழும்பு தபாலக சீலுடன் யாழ்ப்பாண முகவரிக்கு சென்றடைந்தது கடிதம். ஈழம் முத்திரைகள் ஒட்டி கடிதங்கள் போடுவதில் யாழ்ப்பாண மக்களுக்கு அலாதிப்பிரியம்.

திட்டமிட்ட செயற்பாடு காரணமாக கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக ஈழம் முத்திரையும், தபால்சேவையும் அரச தபால் சேவை மூலமாக சிறப்பாக நடைபெற்றன.

ஒழுங்கு நடவடிக்கைகள்

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்குள் ஏற்பட்டிருந்த உட்பிரச்சளைகள் பற்றி பேச்சு நடத்த டக்ளஸ் தேவானந்தா தமிழ்நாடு சென்றார்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத் தலைமைப் பீடத்தில் கடும் முரண்பாடு எழுந்திருந்த நேரம் அது.

தலைமைப்பீடத்தில் முரண்பாடு என்பதை தெரிந்துகொண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப். இராணுவப்பிரிவு உறுப்பினர்கள் சிலர் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொள்ளத் தொடங்கினார்கள்.

யாழ்ப்பாணம் ஆரியகுளத்தைச் சேர்ந்த மதன் என்னும் உறுப்பினர் ஒருவர் தனியார் கொள்ளைகளில் ஈடுபடுவதாக கண்டுபிடிக்கப்பட்டது.

இயக்கத்தின் ஆயுதத்ததைப் பயன்படுத்தி பல தனியார் கடைகளில் கொள்ளையிட்டிருந்தார்.

அவருக்கு ரமேஷன் சம்மத்தோடு மரண தண்டனை கொடுத்துவிட்டார்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இராணுவப்பிரிவினர்.

இன்னொரு உறுப்பினர் ரவி. அவரும் இயக்கப் பெயரைப் பயன்படுத்தி கொள்ளைகளில் ஈடுபட்டார்.

அவரைப்பிடித்து வந்து தடுத்துவைத்தனர். அவர் தப்பியோடினார். துரத்திப் பிடித்துக் கொண்டுவந்து அடித்தபோது உயிர் போய்விட்டது.

இரவோடு இரவாக உடலை கொண்டு போய் ஆரியகுளம் சந்தியில் உள்ள மின்கம்பத்தில் கட்டிவிட்டு துப்பாக்கியால் சுட்டார்கள்.

“எமது இயக்கத்தில் இருந்து மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதால் மரண தண்டனை வழங்கப்படுகிறது.” என்று ஒரு அட்டையில் எழுதி கழுத்தில் கட்டிவிட்டு வந்துவிட்டார்கள்.

இராணுவப்பிரிவில் இருந்து கொண்டு மக்கள் மத்தியில் அத்துமீறல்களில் ஈடுபட்ட உறுப்பினர்கள் பத்துப்பேர்வரை மொட்டை அடிக்கப்பட்டு மின்கம்பத்தில் கட்டிவைக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார்கள்.

இராணுவப்பிரிவில் இருந்து விலக்கப்பட்ட உறுப்பினர்களது பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த நடவடிக்கை ஈ.பி.ஆர்.எல்.எஃப். யாழ் பிராந்திய கமிட்டிக்கு பிடிக்கவில்லை.

மரண தண்டனைகள் வழங்குவது முறையல்ல என்று கமிட்டி உறுப்பினர்கள் பலர் அபிப்பிராயம் தெரிவித்தனர்.

“நடவடிக்கைகள் அவசியமானவை. இயக்கம் உருவாக்கிவிடும் ஒரு நபர், மக்கள் விரோதியாக மாறும்போது தண்டிக்கவேண்டிய பொறுப்பு இயக்கத்திற்கு இருக்கிறது. அதனைத் தான் செய்திருக்கிறோம்.” என்று விளக்கம் அளித்தார் ரமேஷ்;.

யாழ் பிராந்திய கமிட்டியில் ரமேஷ், மோகன் இருவர் மட்டுமே மரண தண்டனைகள், ஒழுங்கு நடவடிக்கைகள் கடுமையாக மேற்கொள்வது தவிர்க்க முடியாதது என்று வாதிட்டனர்.

கடலில் நடந்த அதிரடித் தாக்குதல்.. கடலில் கைது

ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்க முரண்பாடுகள் காரணமாக வெளியேறியவர்களில் இருவர் கடல்வழியாக தனியார் படகொன்றின் மூலம் தமிழ்நாடு நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

ஒருவர் தயாபரன், இன்னொருவர் சுதன். குருநகரில் இருந்து புறப்பட்டது படகு.

தமிழ் நாட்டுக்குச் செல்லப் புறப்பட்ட அகதிகளும் படகில் இருந்தனர்.

இரணைதீவு என்னுமிடத்தில் வைத்து படகு கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டது. “நாங்கள் எல்லாம் அகதிகள்” என்று கூறினார்கள் படகில் இருந்தவர்கள்.

படகோடு அவர்களை தலைமன்னார் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

தயாபரன் முன்னரே பொலிசாரால் தேடப்பட்டவர். லெபனானில் இராணுவப் பயிற்சி எடுத்தவர். அகதி என்று நடித்துக் கொண்டிருந்தார்.

தலைமன்னார் கடற்படை முகாமில் படகில் வந்தவர்கள் அனைவரும் ஒரு இரவு முழுவதும் தங்கவைக்கப்பட்டனர்.

விஷயமறிந்து அவர்களை பார்வையிட வந்தனர் இரண்டு பௌத்த குருமார்.

கடற்படை வீரர்களை தனியே அழைத்து அவர்களில் ஒருவர் சொன்னார்: “இவர்களை விட்டுவிடாதீர்கள்”. அவர் சொன்னது தயாபரனின் காதில் விழுந்தது. அவருக்கு சிங்களம் தெரியும்.

எனவே, எப்படியாவது தப்ப வேண்டும் என்று சுதனுக்குச் சொல்லி உஷார்படுத்தினார்.

மறுநாள் காலையில் படகில் இருந்து கைது செய்யப்பட்ட அனைவரையும் மீண்டும் அதே படகில் ஏற்றினார்கள்.

படகுக்குள் இரண்டு இராணுவத்தினர் ஆயுதங்களோடு காவலுக்கு ஏறிக் கொண்டார்கள்.

மற்றொரு கடற்படைப் படகில் கடற்படையினர் 9 பேர் அகதிகள் படகுக்கு பின்னால் வந்து கொண்டிருந்தனர். தள்ளாடி இராணுவ முகாமை நோக்கி இரண்டு படகுகளும் சென்றுகொண்டிருந்தன.

காரியப்பாட்டு

பாதிவழியில் இராணுவ வீரர்கள் இருவரையும் பழக்கம் பிடித்துக் கொண்டனர் தயாபரனும், சுதனும்.

பாட்டுப் பாடச் சொல்லிக் கேட்டனர் இராணுவத்தினர். பாடத்தொடங்கினார்கள்.

எப்படியாவது தப்பிக் கொள்ள வேண்டும். தள்ளாடி முகாமுக்கு சென்றால் மீட்சி இல்லை என்று தயாபரனுக்கும், சுதனுக்கும் உறுதியாக தெரிந்துவிட்டது.

பாடலின் மத்தியில் பாட்டாலேயே பேசிக்கொண்டார்கள் இருவரும்.
“நான் மடக்குவேன், நீ செய்வியா கண்ணே கலைமானே லல்லல்லா.. லல்லல்லா இப்போது விட்டால் தொலைந்தோமடா லல்லல்லா…….”

உடனே அடுத்தவர் பாடினார். சோளஞ்சோறு பொங்கட்டுமா, நான் பொங்கட்டுமா? முடியட்டும் பாடி முடியட்டும், பொங்குமாமா………”

இராணுவ வீரர்கள் விஷயம் புரியாமல் பாடலை இரசித்துக்கொண்டிருந்தார்கள்.

பாடல் முடியப்போகிறது. படகில் இருந்த ஏனையோருக்கு ஏதோ நடக்கப்போகிறது என்று தெரிந்துபோனது.
எல்லோருக்கும் திக், திக்,

பாடல் முடிந்தது.

ஒரே பாய்ச்சல்

இரண்டு இராணுவ வீரர்களும் அதனை எதிர்பார்க்கவில்லை.

இராணுவ வீரரின் துப்பாக்கியைப் பறித்து சுட்டுத்தள்ளினார் தயாபரன். இராணுவ வீரர்கள் இருவரும் படகுக்குள் விழுந்தனர்.

பின்னால் வந்த கடற்படைப் படகு, ஏதோ அசம்பாவிதம் என்று விரைந்து அருகில் வந்தது. தயாபரனும், சுதனும் அப்படகு மிக அருகில் வரும்வரை காத்திருந்தனர்.

அருகே வந்தது படகு

இருவரும் துப்பாக்கிகளை இயக்கி ரவைகளைப் பொழிந்தனர்.

சூடுபட்ட கடற்படையினர் சிலர் கடலில் விழுந்துகொண்டிருக்க, படகு தப்பியோடத் தொடங்கியது.

படகைச் செலுத்திய கடற்படைவீரர் தவிர படகில் இருந்த எட்டு கடற்படை வீரர்களும் பலியானார்கள்.

முதல் படகில் கொல்லப்பட்ட இரு இராணுவத்தினரோடு சேர்த்து மொத்தம் 10 படையினர் பலியானார்கள்.

உண்மையாகவே துணிகரமான தாக்குதல்தான். இது நடந்தது 1986 ஜுன் மாதம் 19ம் திகதி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணமங்கலம் அருகே மாற்று சான்றிதழ் கேட்டு கல்வி அதிகாரி காலில் விழுந்து கெஞ்சிய பெண்…!!
Next post மீண்டுமொரு பிரபாகரன்; பிரபாகரன்களை உருவாக்குதல்!! –புருஜோத்தமன்…!!