கார் ஏறி 3 பேர் இறந்த வழக்கு: 15 வயது சிறுவனுக்கு வலை வீச்சு- காப்பாற்ற விஐபிக்கள் முயற்சி
சென்னை அயனாவரத்தில் சமீபத்தில் பிளாட்பாரத்தில் கார் ஏறியதிலும், மோட்டார் சைக்கிளில் வந்தவர் மீது மோதியதாலும் 3 பேர் இறந்த சம்பவத்தற்கு 15 வயது சிறுவனே காரணம் என்று தெரிய வந்துள்ளது. அந்த சிறுவன், தேசிய மின் சக்திக் கழக தலைவர் ரவி பிரகாஷ் கெம்காவின் மகன் ஆவார். கடந்த வாரம் வியாழக்கிழமை நள்ளிரவில் அயனாவரம் புது ஆவடி சாலையில், தாறுமாறாக வந்த ஒரு கார், மோட்டார் சைக்கிளில் போய்க் கொண்டிருந்த வாஞ்சிநாதன் என்பவர் மீது மோதியது. இதில் வாஞ்சிநாதன் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். பின்னர் அந்தக் கார் நிலை தடுமாறி பிளாட்பாரத்தின் மீது ஏறியது. அந்த பிளாட்பாரத்தில் திருவண்ணாமலையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர்.கார் ஏறியதில் 2 தொழிலாளர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந் நிலையில் 3 பேரைக் கொன்ற காரை ஓட்டி வந்தது 15 வயது சிறுவன் அச்சல் கெம்கா எனத் தெரிய வந்துள்ளது. இவன் சிங்கப்பூரில் 11ம் வகுப்பு படித்து வருகிறான். இவனுடைய தந்தை ரவி பிரகாஷ் கெம்கா. இவர் தேசிய மின் சக்திக் கழக (என்.இ.பி.சி) தலைவராக இருக்கிறார்.
விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸார் அச்சல் கெம்காவின் வீட்டுக்குச் சென்று அவனது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அச்சல், டெல்லிக்குப் போய் விட்டதாக பெற்றோர் கூறியுள்ளனர்.
சம்பவத்தன்று அச்சல் தான் காரை ஓட்டியுள்ளான். காரில் அவனது நண்பர்கள் இருந்துள்ளனர். அனைவரும் அன்றைய தினம் ஜாலி ரைடாக கிளம்பியுள்ளனர். சங்கம் தியேட்டருக்குப் போய் படம் பார்த்துள்ளனர். பின்னர் எலியட்ஸ் பீச்சுக்குச் சென்றனர். அங்கிருந்து ஹோட்டல் கிரசன்ட் வந்து சாப்பிட்டுள்ளனர். நகர் முழுவதும் சுற்றித் திரிந்த இவர்கள் புது ஆவடி சாலையில் வந்தபோதுதான் இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தை நேரில் பார்த்த அப்பகுதியில் தங்கியுள்ள குமரேசன் என்பவர் கூறுகையில், மோட்டார் சைக்கிளில்தான் முதலில் கார் மோதியது. இதையடுத்து கார் நிலை தடுமாறியது. அப்போது காரை ஓட்டி வந்தவர் தனது கார் கவிழ்ந்து விழுந்து சேதம் அடைந்து விடாமல் தடுப்பதற்காக பிளாட்பாரத்தில் ஏற்றினார். மனித உயிர்களைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாமல், காரைப்பற்றி மட்டுமே அவர் கவலையுடன் இருந்ததாக எனக்குத் தெரிகிறது என்றார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு வருமாறு கூறி அச்சல் கெம்காவின் பெற்றோருக்கு போலீஸார் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர்கள் வரவில்லை. எனவே இந்த வழக்கை தீவிரமாக எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக உதவி ஆணையர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.
பெரிய மனிதர்களின் நெருக்குதல்
இதற்கிடையே, விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்கு பெரிய இடங்களிலிருந்து நெருக்குதல்கள் வர ஆரம்பித்துள்ளதாம்.
தமிழக பாஜகவில் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒரு தலைவர், முன்னாள் தமிழக அரசு தலைமைச் செயலாளர், ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆகியோர் போலீஸாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த வழக்கில் தீவிரம் காட்ட வேண்டாம் என நெருக்கியுள்ளனராம்.
இருந்தாலும் இந்த நெருக்குதல்களைப் புறம் தள்ளியுள்ள போலீஸார் அச்சல் கெம்காவைப் பிடிக்க வலை விரித்துள்ளனர். அச்சல் கெம்காவின் பெற்றோரின் சொந்த ஊரான உ.பிக்கும், டெல்லிக்கும் தனிப் படைகள் விரைந்துள்ளன