குமரிமுத்து மரணம்: கருணாநிதி–மு.க.ஸ்டாலின் இரங்கல்…!!

Read Time:4 Minute, 35 Second

905f840a-edd6-439d-8fd6-0b3da2ccca49_S_secvpfகுமரிமுத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருப்பதாவது:–

தி.மு.க.வின் கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைத் துணைத் தலைவரும், சிறந்த நகைச்சுவைப் பேச்சாளரும், குணச்சித்திர நடிகருமான குமரிமுத்து இன்று காலையில் மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து திடுக்கிட்டேன்.

ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் குடும்பத்தினருடன் என்னை வந்து சந்தித்து, மருத்துவ மனையிலிருந்து உடல் நலம் பெற்று வீடு திரும்பி விட்டதாகவும், மருத்துவ மனையில் சிகிச்சை பெற உதவியதற்காக நன்றி தெரிவித்துவிட்டும் சென்றார்.

2014–ம் ஆண்டு செப்டம்பர் திங்களில் நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில், என் பெயரால் வழங்கப்படும், கலைஞர் விருது குமரிமுத்துவுக்கு வழங்கப்பட்டது. தன்னுடைய இளம் வயதிலேயே பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவினைக் கேட்டு, கழகத்தின் அபிமானியாக மாறியவர் இவர். திரைத்துறையில் புகழ் பெற்று விளங்கிய நடிகர் நம்பிராஜனின் உடன்பிறந்த தம்பி என்பதால் நடிகவேள் எம்.ஆர்.ராதா தனது நாடகக் குழுவில் இவரைச் சேர்த்துக் கொண்டார்.

இவருடைய சிரிப்பே இவரது புகழை அதிகப்படுத்தியுள்ளது. திரைப்படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதால் “கலைமாமணி”, “கலைச் செல்வம்”, ஆகிய விருதுகளைப் பெற்றவர்.

பகுத்தறிவுப் பாசறையாம் திராவிடர் கழகம் இவருக்கு “பெரியார் விருது” வழங்கி கவுரவித்துள்ளது.

குமரி முத்துவின் மறைவினால் வருந்தும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், கழக உடன் பிறப்புகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:–

கலையுலகில் கழகத்தின் கொள்கை முழக்கமாக விளங்கிய நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவின் மரணம் ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. கலைவாணர் என்.எஸ்.கே.வைப் போலவே குமரி மாவட்டத்திலிருந்து கலைத்துறைக்கு வந்த குமரி முத்தும் கலைவாணர் போலவே சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவையை நமக்கு வழங்கியவர். தன் வாழ்நாளின் இறுதி வரை உறுதிமிக்க தி.மு.க.காரராக வாழ்ந்தவர்.

எவ்வித எதிர்பார்ப்புமின்றி கலைஞரின் தொண்டராக கழகத்தின் பிரச்சார ஆயுதமாக மேடைதோறும் முழங்கியவர். குறிப்பாக, தேர்தல் காலங்களில் தலைமை வகுத்தளிக்கும் பிரச்சார நிகழ்ச்சிகளின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர் குமரிமுத்து.

தனது அதிர்வேட்டுச் சிரிப்பால் நம்மையெல்லாம் ஈர்த்த அவர் இன்று இல்லை என்கிற செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கும் அவரது திரையுலக நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நகைச்சுவை முரசாக ஒலித்த நடிகர் குமரிமுத்துவின் சிரிப்பும் சிந்தனையும் நம் கழகத்தின் பயணத்தில் என்றும் துணை நிற்கும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இங்கிலாந்தில் இன வெறியால் வாலிபர் கைவிரல் துண்டிப்பு…!!
Next post பாகிஸ்தான் கவர்னரை கொன்றவர் இன்று தூக்கிலிடப்பட்டார்..!!