31 மலேசியத் தமிழர்கள் மீதான வழக்கு வாபஸ் – ஜாமீனில் விடுதலை

Read Time:3 Minute, 43 Second

கோலாலம்பூரில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திக் கைதாகி, கொலை முயற்சி வழக்கை சந்தித்த 31 தமிழர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மலேசிய அரசு தலைமை வக்கீல் திரும்பப் பெற்றார். இதையடுத்து 31 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.மலாய் இனத்தவர்களுக்கு சமமாக கல்வி, வேலை வாய்ப்பில் சம உரிமை வழங்க வேண்டும் என்று இந்து உரிமைகளுக்கான நடவடிக்ைகக் குழு (ஹிண்ட்ராப்) என்ற தமிழர் அமைப்பு கோரிக்கை விடுத்து வருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியும், தங்களது இன்றைய நிலைக்கு இங்கிலாந்துதான் காரணம் என்று கூறி கடந்த மாதம் 25ம் தேதி இங்கிலாந்து தூதரகம் நோக்கி ஹிண்ட்ராப் அமைப்பின் சார்பில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடந்தது. இதையடுத்து 200க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றம் விடுவித்தது. இருப்பினும் 31 தமிழர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது காவல்துறை அதிகாரியைக் கொலை செய்ய முயற்சித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து ஜாமீன் கூட வழங்கப்படாமல் 31 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான டத்தோ சாமிவேலு மற்றும் 13 தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள், 31 தமிழர்கள் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என மலேசிய பிரதமர் படாவியிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதைப் பரிசீலித்த பிரதமர் படாவி, 31 தமிழர்களும் தூண்டி விடப்பட்டு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்பதால் அவர்கள் மீது தான் அனுதாபப்படுவதாகவும், அவர்கள் மீதான வழக்கைத் திரும்பப் பெற அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் நேற்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அரசு தலைமை வழக்கறிஞர் கனி படாய்ல், நீதிமன்றத்தில் 31 பேர் மீதான குற்றச்சாட்டுக்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இதைக் கேட்டதும் 31 தமிழர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் உற்சாகக் குரல் எழுப்பி வரவேற்றனர். இந்த 31 பேரில் 5 பேர் மாணவர்கள் ஆவர்.

பின்னர் அனைத்துத் தமிழர்களும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் விசாரணை வருகிற 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து அரசு தலைமை வழக்கறிஞர் படாய்ல் கூறுகையில், நாட்டின் நலன் கருதியும், பொது அமைதி கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விஜய், அஜித், சூர்யா, மாதவன் கூட்டணி
Next post தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கனடாசெல்ல விஸா இல்லை!