அமெரிக்காவில் இரட்டைக் கொலை: இந்தியர்கள் அதிர்ச்சி
அமெரிக்காவில் பி.எச்டி., படித்து வந்த இரண்டு ஆந்திர மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மூன்று கறுப்பின இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த இரட்டை கொலை அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இறந்த மாணவர்களில் ஒருவரின் தந்தை ஆந்திராவில் பிரபல எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் லுசியானா மாகாண பல்கலைக்கழம் உள்ளது. பாட்டன் ரக் என்ற இடத்தில் இந்த பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரத்து 468 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள். ஆந்திராவை சேர்ந்த சந்திரசேகர் ரெட்டி கோமா(31), கிரண் குமார் ஆலம்(33) ஆகியோர் பி.எச்டி., படித்து வந்தனர். சந்திரசேகர் உயிரியல் துறை சார்ந்த படிப்பும், கிரண் குமார் வேதியல் துறை சார்ந்த படிப்பும் படித்து வந்தனர். இதில் சந்திரசேகருக்கு ஒன்பது மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது. பல்கலைக்கழகத்தில் திருமணமானவர்கள் தங்கும் எட்வர்டு கே காம்ப்ளக்ஸ் என்ற குடியிருப்பில் தங்கி வந்தனர். நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு கிரண் குமாரின் கர்ப்பிணி மனைவி வீடு திரும்பினார். அப்போது கதவுக்கு அருகில் சந்திரசேகர் உடலும், கம்ப்யூட்டர் மேஜை அருகே கிரண் குமாரின் உடலும் ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி இருந்தன. இருவரின் தலையிலும் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்து இருந்தன. கிரண் குமாரின் மனைவி உடனே அவசர சிகிச்சை பிரிவுக்கு போன் செய்து உதவி கேட்டார். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பார்த்த போது, இரண்டு பேரும் இறந்து கிடந்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது.
வாஷிங்டனில் உள்ள இந்திய துõதரகத்தில் இருந்து முதல் செயலாளர் அலோக் பாண்டே மற்றும் ஹூஸ்டனில் உள்ள இந்திய துõதரக அலுவலகத்தில் இருந்து துõதரக அதிகாரி கே.பி.பிள்ளை ஆகியோர் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டனர். அமெரிக்காவுக்கான இந்திய துõதர் ரோனென் சென் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியும் அளித்துள்ளனர்.
இந்திய மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தினால் அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்தியர்களும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். போலீசாரும் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையை துவக்கியுள்ளனர். இந்திய மாணவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு சற்று ஒதுக்குபுறத்தில் உள்ளது. இங்கு அதிகளவில் குற்றங்கள் நடக்கும். அந்த குடியிருப்பு பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு மூன்று கறுப்பின இளைஞர்கள் அவசர அவசரமாக வெளியேறியுள்ளனர். அங்கு இருந்த காரில் அவர்கள் ஏறி தப்பி சென்று விட்டனர். அந்த காரை ஓட்டிய நபர் மற்றும் மூன்று கறுப்பின இளைஞர்கள் என நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் தெரியவில்லை.