இளையோர் உலக கிண்ண இறுதிப்போட்டியில் 145 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது இந்தியா..!!
பங்களாதேசில் இடம்பெற்றுவரும் இளையோருக்கான உலக கிண்ணத்தின் இறுதிப் போட்டி இன்று இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பு முடிவை மேற்கொண்டது.
ஆரம்பம் முதலே சரிவை சந்தித்த இந்தியாவால் இறுதிவரை மீண்டு வரவே முடியாது போனது.34 ஓவர்கள் வரை வெறும் 4 பந்து வீச்சாளர்களே பயன்படுத்தப்பட்டனர். அந்தளவிற்கு அவர்களது பந்துவீச்சு கட்டுக்கோப்பாக இருந்தது.
இன்று சுழல பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தாமலே இந்தியாவை 145 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது மேற்கிந்தியதீவுகள்.
இந்திய துடுப்பாட்டத்தில் சப்ராஸ் கான் இந்த தொடரில் 5 வது அரைசதம் பெற்று 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
மற்றையவர்கள் யாரும் சொல்லும்படி துடுப்பாடாத நிலையில் இந்தியா 45.1 ஓவர்கள நிறைவில் 145 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்களையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவுகளுக்கு 146 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இந்த 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக கிண்ண இறுதிப் போட்டிகள் இவ்வாறான குறைந்த ஓட்ட எண்ணிக்கை பெறப்பட்டாலும் வெற்றி பெற்ற வரலாறுகள் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
2006 உலக கிண்ண இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 109 ஓட்டங்கள் பெற்றும் 38 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
2008 ம் ஆண்டு விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 159 ஓட்டங்கள் பெற்றும் டக்வோர்த் லூயிஸ் முறைமூலமாக 12 ஓட்டங்களாலும் வெற்றி பெற்றது.
இறுதியாக இடம்பெற்ற 2014 உலக கிண்ண இறுதிப் போட்டியிலும் பாகிஸ்தான் முதலில் துடுப்பாடி 131 ஓட்டங்களைப் பெற்றாலும் 43 வது ஓவரிலேயேதான் தென் ஆபிரிக்கா வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்றைய போட்டியும் விறுவிறுப்பாக இருக்கும் என்பது பலரது நம்பிக்கையாகும்.
இந்திய அணி 4 வது முறையாக உலக கிண்ணத்தை குறிவைத்துக் காத்திருக்கிறது.2000 ம் ஆண்டு இலங்கையில் நடந்த போட்டியில் மொஹமட் கைப் தலைமையிலும், 2008–ல் மலேசியாவில் இடம்பெற்ற போட்டிகளில் வீராட்கோலி தலைமையிலும், 2012 ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் உன்முக்ட் சந்த் தலைமையிலான அணியும் கிண்ணத்தை வென்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் ட்ராவிட் பயிற்றுவிப்பில் இஷான் கிசான் தலைமையில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை இறுதிப் போட்டியில் வெற்றிகொள்ளுமா என்பது இப்போது கேள்விக்குறியே.
இந்த இந்திய இளையோர் அணி தொடர்ச்சியான 16 வெற்றிகளையும் ட்ராவிட் பயிற்றுவிப்பாளராக பொறுப்பேற்ற பின்னர் தொடர்ச்சியான 13 வெற்றிகளையும், இந்த உலக கிண்ணப் போட்டிகளில் இதுவரை தொடர்ச்சியான 5 வெற்றிகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1983 க்கு பின்னர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகள் ICC உலக கிண்ண இறுதிப் போட்டியொன்றில் பங்கெடுக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்
Average Rating