இலங்கை-இந்திய உடன்படிக்கை கைச்சாத்திட்ட 2 மாதத்தில் பிரபாகரனை கொல்லுமாறு ராஜீவ் உத்தரவிட்டார்
இலங்கை இந்திய உடன்பாடு கைச்சாத்திடப்பட்டு இரு மாதங்களுக்குள் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்று விடுமாறு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கூறியதாகவும் எனினும் இதற்கு இந்திய படை மறுத்து விட்டதாகவும் இந்திய அமைதிப்படையின் (ஐ.பி.கே.எவ்.) தளபதி மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் கூறியுள்ளார். 1987 ஜூலை மாதம் 27 ஆம் திகதி இலங்கை-இந்திய உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டு 2 ஆம் நாள் (29 ஆம் திகதி) இந்திய அமைதிப் படை இலங்கையில் தரையிறங்கியது. அமைதிப் படையின் தளபதியாக மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் நியமிக்கப்பட்டார். தற்போது ஓய்வு பெற்றுள்ள ஜெனரல் ஹர்கிரத் சிங், இலங்கையில் இந்தியப் படையின் பணி குறித்து புத்தகமொன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார். தனது புத்தகத்தில் இது குறித்து மேலெழுந்தவாரியாக குறிப்பிட்டிருந்தாலும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை `இந்தியா டுடே’ சஞ்சிகையின் `மெயில் டுடே’ க்கு வழங்கிய பேட்டியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேட்டியில் ஜெனரல் ஹர்கிரத் சிங் கூறுகையில்;
பிரபாகரனைக் கொன்று விடுமாறு ராஜீவ்காந்தி விடுத்த உத்தரவை அப்போதைய இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஜே.என். டிக்ஷிற் எனக்குத் தெரிவித்தார்.
1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி நள்ளிரவு இந்திய இராணுவத்தின் விசேட தொலைத்தொடர்பு கட்டமைப்பினூடாக டிக்ஷிற் என்னுடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.
வடக்கு, கிழக்கில் இடைக்கால நிர்வாக சபை அமைப்பது தொடர்பாக செப்டெம்பர் 16 ஆம் திகதி பலாலி இராணுவத் தலைமைகத்திலுள்ள ஐ.பி.கே.எவ். தளபதியின் அலுவலகத்திற்கு உத்தியோகபூர்வ சந்திப்பை (வெள்ளைக் கொடி சந்திப்பு) நடத்த பிரபாகரன் வரும்போது அவரைக் கொன்றுவிட வேண்டுமென ராஜீவ் காந்தி விரும்புவதாக டிக்ஷிற் தெரிவித்தார்.
எந்தவொரு அரச இராணுவமும் வெள்ளைக் கொடியுடனான சந்திப்புக்கு எதிராளியை அழைத்துவிட்டு கொல்லும் வழக்கமில்லையென்பதால் டிக்ஷிற் இவ்வாறு கூறியதால் அதிர்ச்சியடைந்து பின்வாங்கினேன்.
அதேநேரம், இலங்கையில் ஐ.பி.கே.எவ். இன் அனைத்து நடவடிக்கைகளுக்குமான கட்டளைத் தளபதியான லெப்.ஜெனரல் டிபேந்தர் சிங்குடன் இது குறித்து ஆலோசிக்க வேண்டுமென்பதால் டிக்ஷிற் இடம் சிறிது கால அவகாசம் கேட்டேன்.
அத்துடன், எனது பொஸ்ஸான லெப். ஜெனரல் டிபேந்தர் சிங்குடன் இது பற்றி பேசிய போது; அவர் இவ்வாறானதொரு கொலையைச் செய்ய விரும்பவில்லை.
அவருடனான உரையாடலையடுத்து கொழும்பிலிருந்த டிக்ஷிற்டுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டேன்.
உங்கள் உத்தரவுக்கு என்னால் அடிபணிய முடியாதென அவரிடம் அமைதியாகக் கூறினேன்.
அத்துடன், முக்கியமானதொரு சந்திப்புக்காக பலாலியிலுள்ள எனது அலுவலகத்திற்கு வருமாறு பிரபாகரனை அழைத்து விட்டு சாதாரண ஒரு காரணத்திற்காக அவரைக் கொல்லமாட்டேனென்றும் டிக்ஷிற்றிடம் கூறினேன்.
மேலும் சிறந்த இராணுவம் தனது எதிரியை பின் முதுகில் சுடாது எனவும் தெரிவித்தேன்.
இதனால் சீற்றமடைந்த டிக்ஷிற் என்னை மிரட்டினார். ராஜீவ்காந்தி இந்த அறிவுறுத்தலை எனக்கு வழங்கியுள்ளதால் இராணுவம் அதிலிருந்து விலக முடியாது. நீங்கள் ஐ.பி. கே.எவ். வின் கட்டளைத் தளபதியென்பதால் இது உங்களது பொறுப்பென்றும் டிக்ஷிற் கூறியதாகவும் தெரிவித்தார்.
டிக்ஷிற்றின் உத்தரவை ஏற்க மறுத்த ஜெனரல் ஹர்கிரத் சிங் உடனடியாக இடமாற்றத்துடன் ஓய்வு பெறும்வரை பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
இதேநேரம் டிக்ஷிற்றின் உத்தரவை ஜெனரல் ஹர்கிரத் சிங் மறுத்த மறுநாள் காலை டில்லியிலிருந்து அவருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட இந்திய இராணுவத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்குமான கட்டளையதிகாரி லெப். ஜெனரல் பி.சி.ஜோஷி அவரது இந்த முடிவுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.