காட்டுமிராண்டித்தனத்துக்கு பெயர்போன ஆப்கானிஸ்தானில் கணவனால் மூக்கறுபட்டு, மூளியான பெண்ணின் பரிதாப நிலை…!!
தலிபான்கள் மற்றும் பழமைவாதிகளின் வெறியாட்டத்தால் கற்காலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் கொலைவெறி கணவனால் மூக்கறுபட்டு சிகிச்சை பெற்றுவரும் பெண்ணின் பரிதாப நிலையை அந்நாட்டு ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
உலகிலேயே பெண் குழந்தைகள் பிறப்பதற்கும், பெண்களாக வாழ்வதற்கும் தகுதியற்ற நாடாக கருதப்படும் ஆப்கானிஸ்தானின் பர்யாத் மாகாணத்தில் உள்ள ஷர்ஷர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ரேஸா குல்(20) என்பவரின் கணவனான முஹம்மது கான்(25) அண்டைநாடான ஈரானில் வேலை செய்து வருகிறார். மாமனார் வீட்டில் கைக்குழந்தையுடன் தங்கியுள்ள ரேஸாவை அவரது மாமியாரும், நாத்தனார்களும் மிகக் கொடூரமான முறையில் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
ஆண்டுக்கு ஓரிருமுறை குடும்பத்தாரை பார்க்க ஆப்கானிஸ்தானுக்கு வந்துபோகும் முஹம்மது கானிடம் தனது துயரநிலையைப்பறி ரேஸா பலமுறை முறையிட்டும் அது செவிடன் காதில் ஊதிய சங்காக – எந்தப் பலனுமின்றிப் போனது. இதற்கிடையே, முஹம்மது கான் தனது மாமாவின் ஏழுவயது மகளை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்துகொள்ள தீர்மானித்துள்ளதாக அறியவந்த ரேஸா, கடந்த வாரம் அவர் ஆப்கானிஸ்தானுக்கு வந்தபோது, இதுதொடர்பாக தட்டிக்கேட்டு வாக்குவாதம் செய்தார்.
இதனால், ஆத்திரமடைந்த முஹம்மது வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியின் முகத்தில் வெட்ட ரேஸாவின் மூக்கு துண்டாகி கீழே விழுந்தது. ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை கொன்றுவிடும் நோக்கத்தில் முஹம்மதுவும் அவரது சகோதரரும் மோட்டார் சைக்கிளில் அமர்த்தி கடத்திச் செல்ல முயன்றனர்.
அப்போது அங்கு கூடியிருந்த சிலர் அதற்கு இடமளிக்காமல் விரட்டிக்கொண்டு வந்ததில் ரேஸாவை கீழே தள்ளிவிட்டு முஹம்மது தப்பியோடி விட்டார். துண்டிக்கப்பட்ட மூக்குடன் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட ரேஸாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவரது துண்டிக்கப்பட்ட மூக்கை மீண்டும் பொருத்தும் வசதி தங்களிடம் இல்லை என்று கைவிரித்து விட்டனர்.
இதுதொடர்பான, செய்திகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியானதும் ரேஸாவின் நிலையைக் கண்டு மனமிறங்கிய பர்யாப் மாகாண கவர்னர் அவரை அண்டைநாடான துருக்கிக்கு அனுப்பி வைத்து உயர்தர சிகிச்சை மூலம் செயற்கை மூக்கு பொருத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
இதற்கிடையே, மகளுக்கு நேர்ந்த இந்த அவலநிலையை கண்டு மனம்கொதித்துப்போன ரேஸாவின் தாயார் ஜர்கோனா என்பவர் துண்டிக்கப்பட்ட மூக்கை கையில் எடுத்துகொண்டு உள்ளூர் தலிபான் தலைவர்களிடம் நீதிகேட்டு போராடியுள்ளார். தலைமறைவாக இருக்கும் முஹம்மது கானை போலீசார் ஒருபுறம் தேடிவர, மற்றொருபுறம் தலிபான் கோர்ட்டில் அவரை நிறுத்தி தண்டனை வழங்குவதற்காக தலிபான் தீவிரவாதிகளும் தேடிவருகின்றனர்.
ஏற்கனவே, அவரை கைது செய்துள்ள தலிபான் தீவிரவாதிகள் முஹம்மதுவை ரகசிய இடத்தில் அடைத்துள்ளதாகவும் உறுதிப்படுத்த இயலாத தகவல் வெளியாகியுள்ளது. எது, எப்படியோ..? ரேஸாவைப் போன்ற பெண்களை அங்குள்ள ஆணாதிக்கவாதிகள் எப்படி நடத்துகிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒருசோற்றுப் பதமாக அமைந்துள்ளது.
Average Rating