தோலில் ஏற்பட்ட சுருக்கத்தை நீக்குவதற்கு பிளாஸ்திக் சத்திரசிகிச்சை செய்த பிரேஸில் அழகுராணி 28 வயதில் மாரடைப்பால் மரணம்…!!
முகத்தில் ஏற்பட்ட தோல் சுருக்கத்தை நீக்குவதற்காக பிளாஸ்திக் சத்திரசிகிச்சை செய்துகொண்ட பிரேஸில் அழகுராணி ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
ரெக்கல் சான்டோஸ் எனும் இந்த யுவதி 28 வயதில் திடீரென கடந்த வாரம் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மொடலாக பணியாற்றிய ரெக்கல் சான்டோஸ், உள்ளூர் அழகுராணி போட்டிகளில் வெற்றியீட்டியபின், பிரேஸி லின் மிகப் பெரிய அழகுராணி போட்டிகளில் ஒன்றான “முஸா டோ பிரேஸில்” போட்டிகளின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருந்தவர்.
தனது வாயைச் சுற்றியுள்ள தோலில் ஏற்பட்ட சுருக்கங்களை நீக்குவதற்கு சான்டோஸ் விரும்பினார்.
இதற்காக பிளாஸ்திக் சத்திரசிகிச்சை செய்துகொள்வதற்கு தீர்மானித்தார்.
கடந்த 11 ஆம் திகதி இரவு இப்பிளாஸ்திக் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதன்பின் சில மணித்தியாலங்களில் மாரடைப்புக்குள்ளான ரெக்கல் சான்டோஸ் உயிரிழந்துள்ளார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
முன்னிலை மொடல்களில் ஒருவரான ரெக்கல் சான்டோஸ் 28 வயதில் திடீரென உயிரிழந்துள்ளமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரெக்கல் சான்டோஸின் கணவரான ஜில்பெர்டோ அஸெவெடோ இது தொடர்பாக கூறுகையில், ரியோ டி ஜெனைரோ நகருக்கு அருகிலுள்ள நிட்டேரி எனும் நகரிலுள்ள வைத்தியசாலையில் இந்த பிளாஸ்திக் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன்பின் சான்டோஸ் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டதாகவும் அவரின் இதயத்துடிப்பில் திடீர் மாற்றம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
சான்டோஸின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் நிட்டேரி நகரிலுள்ள மற்றொரு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எனினும் அங்கு அவர் உயிரிழந்துவிட்டார் என அவரின் கணவர் ஜில்பெர்டோ அஸெவெடோ தெரிவித்துள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி பிரேஸிலின் சாவோ பௌலோ நகரில் புதிய மொடலிங் பணியில் ஈடுபடவிருந்த நிலையிலேயே அவர் 11 ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
ரெக்கல் சான்டோஸின் திடீர் மரணம் குறித்து “முஸோ டோ பிரேஸில்” அழகுராணி போட்டி ஏற்பாட்டாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
“அவரின் கனவு இடையூறுக்குள்ளானமை குறித்து நாம் ஆழ்ந்த கவலையடைகிறோம்.
எம்மைப் போன்று இப்போட்டியில் பங்குபற்றும் அனைத்து யுவதிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்” என “முஸோ டோ பிரேஸில்” அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சான்டோஸின் நண்பி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ரெக்கல் சான்டோஸ் தனது தோற்றம் குறித்து தீவிர கரிசனை கொண்டிருந்தார்.
பிளாஸ்திக் சத்திரசிகிச்சைகளிலும் அவர் ஆர்வம் கொண்டிருந்தார் “ என்றார்.
ரெக்கல் சான்டோஸின் உடல் கடந்த செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்யப்படவிருந்தது. எனினும் மரணத்துக்கான காரணத்தை உறுதிப்படுத்துவதற்காக ரியோ டி ஜெனைரோ பொலிஸார் சடலத்தை மேலதிக பரிசோதனைகளுக்கு உட்படுத்த உத்தரவிட்டனர்.
கடந்த புதன்கிழமை பிரேத பரிசோதனை நடவடிக்கை பூர்த்தியடைந்தன. எனினும் வார இறுதிவரை அவரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating