விடுதலைப் புலிகளுடன் தமிழர்களுக்குத் தொடர்பு – மலேசியா புகார்
கோலாலம்பூரில் போராட்டம் நடத்திக் கைதான தமிழர்களுக்கும், இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) நிர்வாகிகளுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக மலேசிய அரசு குற்றம் சாட்டியுள்ளது. மலாய் இனத்தவருக்கு சமமாக கல்வி, வேலைவாய்ப்பில் தங்களுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று மலேசியத் தமிழர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக இங்கிலாந்து தூதரகத்தில் புகார் கொடுக்க அவர்கள் சென்றபோது போலீஸாரால் கடுமையாக தாக்கப்பட்டனர். மலேசியாவில் சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு மிகப் பெரிய அளவில் தமிழர்கள் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் 31 தமிழர்களை, காவல்துறை அதிகாரியைக் கொல்ல முயன்றதாக கூறி மலேசிய அரசு கைது செய்துள்ளது. அவர்களுக்கு கோலாலம்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. இதனால் வழக்கு முடியும் வரை அவர்கள் சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மலேசியத் தமிழர்கள் மீது அந்நாட்டு அரசு தினசரி ஒரு புகாரைக் கூறி வருகிறது. இந்த நிலையில் தற்போது ‘விடுதலைப் புலிகள்’ அஸ்திரத்தை மலேசிய அரசு கையில் எடுத்துள்ளது. ஹிண்ட்ராப் அமைப்பினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டு கைதான தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அது கூறியுள்ளது.
இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி மூசா ஹசன் கூறுகையில், ஹிண்ட்ராப் அமைப்பினருக்கு உள்ளூர் தீவிரவாதிகள், கலகக்காரர்கள் ஆகியோருடன் தொடர்பு உள்ளது. மேலும், விடுதலைப் புலிகளும் இவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் உதவியையும் இவர்கள் கேட்டுள்ளனர்.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இவர்கள் தங்களுக்கு ஆதரவு கோரி வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
அவதூறான குற்றச்சாட்டு – ஹிண்ட்ராப்:
மலேசிய அரசின் இந்த குற்றச்சாட்டு அபாண்டமானது, தமிழர்களை, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மலேசிய அரசு திட்டமிடுவதையே இது காட்டுகிறது என்று ஹிண்ட்ராப் அமைப்பு கூறியுள்ளது.
அமைப்பின் தலைவர் வேதமூர்த்தி இதுகுறித்துக் கூறுகையில், தீவிரவாதிகளின் ஆதரவை நாங்கள் பெற முயற்சிப்பதாக மலேசிய அரசு கூறுவது மிகவும் அபாண்டமானது. சிறிதளவும் உண்மை இல்லாத புகார் இது.
எங்களை மிகக் கடுமையான உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மலேசிய அரசு முயற்சிக்கிறது. அதன் ஒரு கட்டமே இந்த அபாண்டப் புகார் என்று கூறியுள்ளார்.
இந்தியா மீது டத்தோ சாமிவேலு புகார்:
இந்த நிலையில், இந்தியாவில் உள்ள சில அமைப்புகள்தான் மலேசிய வம்சாவளி இந்தியர்களைத் தூண்டி விட்டு வருவதாக மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான டத்தோ சாமிவேலு குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவில் உள்ள சிலர், சில அமைப்புகள், மலேசியாவில் உள்ள சில எதிர்க்கட்சிகள் ஆகியோர்தான் இந்தியர்களைத் தூண்டி விட்டு போராட்டம் நடத்த வைத்துள்ளனர்.
மலேசியாவில் இந்தியர்கள் நல்ல வசதியுடன்தான் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள தேசிய சராசரி வருமானத்தை விட இந்தியர்களின் வருவாய் அதிகமாகவே உள்ளது என்று கூறியுள்ளார் டத்தோ.