வயிற்றில் இருப்பது பெண் சிசு என்பதற்காக கருவை கலைத்தால் ஆயுள் சிறை

Read Time:3 Minute, 29 Second

பெண் சிசுக்களை கருவிலேயே கொல்லும் செயலில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வருவது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. டெல்லியில் 12ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்று மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அன்புமணி கூறினார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் நிர்மலா தேஷ்பாண்டே எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அன்புமணி அளித்த பதிலில் கூறியதாவது: இந்தியாவில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் குறைந்து வருவதை தடுக்க அரசு பல்வேறு சட்டங்களை அமல்படுத்தி வருகிறது. பெண் சிசுக்களை கருவிலேயே அழிக்கும் கொடிய வழக்கம், பல ஆண்டுகளாக சமூகத்தின் ஆணிவேர் வரை புரையோடி இருக்கிறது. குறிப்பாக, செல்வ செழிப்புமிக்க பிரிவினரிடையே இந்த வழக்கம் அதிகமாக காணப்படுகிறது. சட்டங்களால் மட்டுமே இதை தடுத்து விட முடியாது. எனவே, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் பஞ்சாப், அரியானா, இமாசலப் பிரதேசம், புதுடெல்லி, குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் பெண் குழந்தை பிறப்பு சதவீதம் குறைந்து வருகிறது.

இதை தடுக்க, கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே அறிவதை தடுக்கும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை கண்காணிக்க மத்திய கண்காணிப்பு வாரியம் அமைக் கப்பட்டுள்ளது. இதேபோல், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங் களிலும் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய கண்காணிப்பு வாரியத்தின் கீழ் இவை செயல்படுகின்றன.

மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான மத்திய ஆலோசனைக் குழுவின் கூட்டம் டெல்லியில் 12ம் தேதி நடைபெறுகிறது. பெண் குழந்தைகளை கொல்வது, பெண் சிசுக்களை கருவிலேயே கொல்வது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை அளிப்பது பற்றி இந்தக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும்.

பெண் குழந்தை பிறப்பு சதவீதம் குறைவதை தடுக்கும் வகையில், பெண் குழந்தையை காப்பாற்றுங்கள் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

இவ்வாறு அன்புமணி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post புதிய வகை ராஜநாகம் கென்யாவில் கண்டு பிடித்துள்ளனர்.
Next post சேலம் சிறையில் தீவிர சோதனை : கைதியிடம் மொபைல்போன் பறிமுதல்