புலிகளின் படுகொலைகள் மூலம் நாட்டில் சமானத்தை உருவாக்க முடியாது! -மூன்று தமிழ் அமைப்புக்கள் கூட்டாக அறிக்கை

Read Time:3 Minute, 30 Second

படுகொலைச் சம்பவங்கள் மூலம் நாட்டில் ஒருபோதும் சமாதானத்தை கட்டியெழுப்ப முடியாதென தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.-பத்மநாபா) ஆகியன கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அண்மையில் கொழும்பில் புலிகள் மேற்கொண்ட குண்டுத் தாக்குதல்களைக் கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை நிகழ்ந்து சில மணித்தியாலங்களுக்குள் ஊனமுற்றவர் போல நடித்த ஒரு தற்கொலை குண்டுதாரிப் பெண்ணை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் சமூக சேவைகள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை இலக்கு வைத்து புலிகள் அனுப்பியிருந்தனர். இச்சம்பவத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் பொது ஜன தொடர்பு அதிகாரியான ஸ்டீபன் பீரிஸ் படுகொலை செய்யப்பட்டார். அவரது மெய்பாதுகாவலர்கள் அடங்கலாக நால்வர் படுகாயமடைந்தனர். காலையில் நிகழ்ந்த இத் தாக்குதலின் பின்னர் மாலை வேளையில் சனசந்தடிமிக்க நுகேகொடை துணிக்கடை தொகுதியொன்றில் பார்சல் குண்டொன்றை வெடிக்க வைத்தனர். இதில் 18 பொது மக்கள் உடனடியாகவே உயிரிழந்தனர். 40 பேர்வரை கடுமையான காயங்களுக்குள்ளாயினர்.

வன்னியில் கிளிநொச்சியின் மையத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஐயங்குளத்தில் நவம்பர் 27 ஆம் திகதியன்று பாடசாலை மாணவர்கள் உட்பட 11 பேர் கிளேமோர் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டனர்.

நவம்பர் 26 இல் அநுராதபுரம் மாவட்டத்தில் சேனைப் பயிர் செய்கை செய்யும் ஒரு பெண் உட்பட விவசாயிகளான நால்வர் கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவ்வகைப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் ஜனநாயக சமூகத்தில் சகித்துக் கொள்ளப்பட முடியாதவை. இத்தகைய தாக்குதல்கள் இந்த நாட்டில் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு எவ்விதத்திலும் உதவாது.

தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா) ஆகிய அமைப்புக்களைச் சேர்ந்த நாம் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறோம் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post ‘தசாவதாரம்’ ஆடியோ விழாவில் ஜாக்கிசான்