தீக்கிரையாக்கப்பட்ட மகாத்மாகாந்தி மண்டப கட்டிடத்தை மீளக்கட்டியெழுப்பும் பணி ஆரம்பம்

Read Time:3 Minute, 36 Second

1983 ஆம் ஆண்டின் இன வன்செயலின் போது முற்றாக தீக்கிரையாக்கப்பட்ட மாத்தளை மகாத்மாகாந்தி ஞாபகார்த்த மண்டபத்தை மீளக்கட்டியெழுப்பும் பணி கடந்த வியாழக்கிழமை காலை மகாத்மாகாந்தி ஞாபகார்த்த சபைத் தலைவரும் களுதாவளை ஸ்ரீ ஏழுமுக காளியம்மன் தேவஸ்தான தலைவரும் தொழிலதிபருமான எஸ்.சந்திரசேகரன் தலைமையிலான சபையினரால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மகாத்மாகாந்தி 1927 ஆம் ஆண்டு மாத்தளைக்கு விஜயம் செய்து மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியதை ஞாபகமூட்டும் வகையில் 1948 ஆம் ஆண்டு மகாத்மாகாந்தி ஞாபகார்த்த சபை ஆரம்பிக்கப்பட்டு மாத்தளை மாநகரசபையிடம் 80 ஏக்கர் காணி 99 வருட குத்தகைக்கு பெறப்பட்டு இம்மண்டபம் அமைக்கப்பட்டது. சமய சமூக நிகழ்வுகள் இடம் பெற்றுவந்த இம்மண்டபம் 1983 ஆம் ஆண்டில் இனவாதசெயலின் போது முற்றாகக் தீக்கிரையாக்கப்பட்டதையடுத்து அன்று முதல் இன்று வரை இம் மண்டபத்தை மீளக் கட்டியெழுப்ப பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்துள்ளது. இறுதியாக இச்சபையின் தற்போதைய தலைவர் எஸ்.சந்திரசேகரம், மாத்தளை மாநகரபிதா முகம்மது ஹில்மி கமிக் அனுசரணையுடன் இலங்கைக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் திருமதி நிரூபமா ராவ் உள்ளிட்ட இந்தியத் தூதரக உயரதிகாரிகளைச் சந்தித்து பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தியதையடுத்து இம்மண்டபத்தை சர்வதேச மகாத்மாகாந்தி ஞாபகார்த்தமாக மீளக்கட்டியெழுப்ப இந்திய அரசாங்கம் 40 மில்லியன் ரூபாக்களை, அன்பளிப்பாக வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

இம்மண்டபத்தின் ஆரம்பக் (முதல்) கட்ட நிர்மாணப் பணிகளுக்கு ஆறுலட்சம் ரூபா தேவைப்படுவதாக மேற்படி சபையினர் தெரிவித்துள்ளனர். தற்போது காந்தி அபிமானிகளினதும் வர்த்தகப்பிரமுகர்களிடமிருந்தும் சேகரித்த நன்கொடைப் பணத்தைக் கொண்டே ஆரம்ப கட்டவேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஆரம்பக் கட்டவேலைகளை நிறைவு செய்ய நலன் விரும்பிகளிடமிருந்து நிதியுதவி எதிர்பார்க்கப்படுவதாகவும் நிதிஉதவி அல்லது பொருள் உதவி செய்ய விரும்புவோர் எஸ்.சந்திரசேகரம், தலைவர் மகாத்மாகாந்தி ஞாபகார்த்த சபை, இலக்கம் 258, பிரதான வீதி மாத்தளை என்ற முகவரியுடன் அல்லது 066-2222599 என்றதொலைபேசி இலக்கத்துடனே தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று மேற்படி சபையின் சார்பில் அதன் தலைவர் எஸ்.சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சென்னையில், பிரமாண்டமான விழா `தசாவதாரம்’ பட பாடல்களை ஜாக்கிசான் வெளியிடுகிறார், அமிதாப்பச்சன்-சாருக்கானும் கலந்து கொள்கிறார்கள்
Next post மலையக இளைஞர் யுவதிகளை தடுப்புக்காவல் உத்தரவின்றி விடுதலை செய்ய ஜனாதிபதி இணக்கம்