நடிகை காவேரியும், வைத்தியும் சமரச தீர்வு மையத்தில் ஆஜர்
நடிகை காவேரியும், ஒளிப்பதிவாளர் வைத்தியும் நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் 1 1/2 மணி நேரம் விசாரணை நடந்தது. போலீசில் புகார் நடிகை காவேரி போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். சினிமா ஒளிப்பதிவாளர் வைத்திக்கும், எனக்கும் திருமணம் நடந்தது என்றும், அதை மறைத்துவிட்டு வைத்தி 2-வது திருமணம் செய்ய முயற்சித்துள்ளார் என்றும், காவேரி அந்த புகாரில் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து வைத்திக்கும், அவரது மாமா மகளுக்கும் கீரனூரில் நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வைத்தி தலைமறைவானார். காவேரி கொடுத்த புகார் தொடர்பாக போலீசார் தன்னை கைது செய்தால் முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்று, சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். காவேரிக்கும், தனக்கும் திருமணம் நடக்கவில்லை என்றும், சினிமாத்துறையில் வளர்ந்து வரும் தன்னை பழிவாங்கும் நோக்குடன் வேண்டுமென்றே பொய் புகார் கொடுத்துள்ளார் என்றும் வைத்தி தனது மனுவில் கூறியிருந்தார்.
காவேரி மனு
வைத்தி தாக்கல் செய்த மனுவோடு, தன்னையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று காவேரி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். கடந்த மாதம் 29-ந் தேதி எனக்கும், வைத்திக்கும் சென்னை, மேற்கு முகப்பேரில் உள்ள எங்கள் வீட்டில் வைத்து திருமணம் நடந்தது என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
ஆனால், 2-வது திருமணம் செய்ய அவர் முயற்சித்துள்ளார் என்றும், அவருடைய குடும்பத்தினர் அவரை தற்போது சட்டவிரோதமாக அடைத்து வைத்திருக்கிறார்கள் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆகவே, எனது பிரச்சினையை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி வைத்து இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஐகோர்ட்டு உத்தரவு
இந்த வழக்கை கடந்த 27-ந் தேதி நீதிபதி ஆர்.ரகுபதி விசாரித்தார். காவேரிக்கும், வைத்திக்கும் திருமணம் நடக்கவில்லை என்று, வைத்தி தரப்பு வக்கீல் வாதாடினார். ஆனால், காவேரி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் பலரிடம் விசாரித்ததில் காவேரிக்கும், வைத்திக்கும் திருமணம் நடந்தது உண்மை என்று அரசு வக்கீல் வாதாடுகையில் குறிப்பிட்டார்.
வக்கீல் வாதத்திற்கு பிறகு இரு தரப்பு சம்மதத்தின்பேரில் வைத்தியும், காவேரியும் சமரச தீர்வு மையத்தில் 30-ந் தேதி ஆஜராகவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இருவரும் ஆஜர்
காவேரியும், வைத்தியும் தனது வக்கீல்களுடன் நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு சமரச தீர்வு மையத்தில் ஆஜரானார்கள். சமரச தீர்வாளர் ஜவாத் விசாரணையை மேற்கொண்டார். இருவரையும் தனித்தனியாகவும், ஒன்றாகவும் வைத்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையின்போது நிருபர்களோ, பார்வையாளர்களோ உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இந்த விசாரணை 1 1/2 மணி நேரம் நடைபெற்றது. 1 1/2 மணி நேரம் விசாரணை செய்தும் விசாரணை முழுமையாக முடியவில்லை. ஆகவே, விசாரணையை வரும் 6-ந் தேதிக்கு தீர்வாளர் தள்ளி வைத்தார். அன்றைய தினம் இருவரும் மீண்டும் ஆஜராகவேண்டும் என்று சமரச தீர்வு மையம் உத்தரவிட்டுள்ளது. சமரச தீர்வு மையத்துக்கு செல்லும்போதும், வெளியே வரும்போதும் காவேரி அழுது கொண்டே சென்றார்.