செல்போன் ஒலித்ததால் 46 பேர் கைது – நீதிபதி டிஸ்மிஸ்
வழக்கு விசாரணையின்போது அதைப் பார்வையிட வந்திருந்த பார்வையாளர்களின் செல்போன் மணி ஒலித்ததால் கடுப்பான அமெரிக்க நீதிபதி, கூடியிருந்த பார்வையாளர்கள் 46 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷன், அந்த நீதிபதியை டிஸ்மிஸ் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைக் கண்டுள்ளது என்று பராசக்தியில் சிவாஜி கணேசன் ஒரு வசனம் பேசியிருப்பார். அதேபோன்ற ஒரு விசித்திரமான வழக்கை அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம், நயாகரா நீர்வீழ்ச்சிப் பகுதி நீதிமன்றம் சந்தித்துள்ளது. இந்த சம்பவம் நடந்தது 2005ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி. அன்றைய தினம் நீதிபதி ராபர்ட் ரெஸ்டெய்னோ என்பவர் வீட்டுக் கொடுமை தொடர்பான ஒரு வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் வரிசையிலிருந்து ஒரு செல்போனிலிருந்து மணி ஒலித்தது. இதைக் கேட்டதும் நீதிபதி எரிச்சலடைந்தார். உடனடியாக அனைவரும் தங்களது செல்போன்களை ஆப் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அனைவரையும் ஒரு வாரம் சிறையில் அடைக்க உத்தரவிடுவேன் என கோபத்துடன் கூறினார்.
ஆனால் அதை யாரும் சட்டை செய்தது போலத் தெரியவில்லை. இதனால் மேலும் கோபமடைந்த நீதிபதி, தான் சொன்னதை தீர்ப்பாக வழங்கி பார்வையாளர் வரிசையில் இருந்த 46 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி அவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் அப்போது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நியூயார்க் மாநில நீதித்துறைக் கமிஷன் இதுகுறித்து விசாரணை நடத்தியது.
இந்த விசாரணையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி ரெஸ்டெய்னோவின் செயல் மிகவும் வரம்பு மீறியது, நீதிபதி பதவிக்குரிய அதிகாரத்தை அவர் துஷ்பிரயோகம் செய்து விட்டார் என்று கூறியுள்ள கமிஷன், அவரை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது.
ரெஸ்டெய்னோவின் செயலை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. தனக்குக் கொடுக்கப்பட்ட சட்ட அதிகாரத்தை அவர் தேவையில்லாமல் மீறியுள்ளார்.
யார் செல்போனிலிருந்து மணி ஒலித்தது என்பதைக் கண்டறிந்து அவரை மட்டும்தான் அவர் வெளியேற்றியிருக்க வேண்டும் அல்லது எச்சரித்திருக்க வேண்டும். அதை விடுத்து, அனைவரையும் தண்டித்தது நியாயமற்றது.
மேலும் யார் செல்போனிலிருந்து மணி ஒலித்தது என்று நீதிமன்ற அறையில் இருந்த யாரிடமும் அவர் விசாரணை நடத்தவில்லை. முறையான விசாரணை இன்றி அனைவரையும் அவர் தண்டித்துள்ளார் என்று கமிஷனின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், தனது வீட்டில் நிலவி வந்த சில பிரச்சினைகளால் ஏற்பட்ட மன உளைச்சலில் இதுபோல நடந்து கொண்டு விட்டதாக நீதிபதி ரெஸ்டெய்னோ விளக்கம் அளித்திருந்தார்.
எப்படியோ, ஒரு செல்போனால், ஒரு நீதிபதியின் பதவி காலியாகி விட்டது.