தற்கொலை செய்து கொண்ட காதலியின் பிணத்தை பார்க்க சென்ற காதலன் அடித்துக் கொலை..!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள தட்டப்பாறை கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மேகநாதன், விவசாயி. அவரது மனைவி மோகனாம்பாள். இவர்களது மகன் ஆனந்தன் (வயது 26), பி.எஸ்சி., பி.எட். படித்து விட்டு, குடியாத்தத்தில் உள்ள அரசு கல்லூரியில் எம்.எஸ்சி. படித்து வருகிறார்.
இவர்களின் கிராமத்திற்கு அருகே உள்ள சின்னாளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கோபால். அவரது மகள் சங்கவி (18). குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சங்கவி பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
ஆனந்தனுக்கும், சங்கவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி சங்கவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் சங்கவியை கண்டித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த சங்கவியை திடீரென்று காணவில்லை.
பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடியபோது அருகில் உள்ள கிணற்றில் சங்கவி பிணமாக கிடந்தார்.
குடியாத்தம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று சங்கவியின் உடலை மீட்டனர். போலீசாரின் விசாரணையில் காதலுக்கு எதிர்ப்பால் சங்கவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும் சங்கவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், சங்கவி தற்கொலை செய்து கொண்ட சிறிது நேரத்தில் ஆனந்தனுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதன் மூலம், சங்கவி தற்கொலை செய்து கொண்ட தகவல் ஆனந்தனுக்கு தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவர் தனது நண்பன் அழைப்பதாக வீட்டில் சொல்லி விட்டு, காதலியின் உடலை பார்க்க மோட்டார் சைக்கிளில் கிளம்பி சென்றார். சங்கவி உடலை மீட்கும் பணி நடந்தது. அங்கு விரைந்து சென்ற ஆனந்தன் கிணற்றின் அருகே சென்று கண்கலங்கியபடி காதலியின் பிணத்தை பார்த்தார்.
ஆனந்தன் கிணற்றின் அருகே நிற்பதை கண்ட சங்கவியின் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். உன்னால் தான் இப்படி நடந்து விட்டது எனக்கூறி ஆவேசத்துடன் ஆனந்தனை தாக்க தொடங்கினர். ஆனந்தன் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. மாறி மாறி அடித்து ஆனந்தனை தரையில் சாய்த்தனர்.
ரத்த வெள்ளத்தில் ஆனந்தன் துடிதுடித்தார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ஆனந்தனை மீட்டு, குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர், வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, ஆனந்தன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆனந்தனின் தந்தை மேகநாதன் குடியாத்தம் போலீசில் புகார் கொடுத்தார். அதில், தற்கொலை செய்து கொண்ட சங்கவியின் சகோதரர்களான கார்த்திகேயன், உதயகுமார், ராஜ்குமார் உள்பட 4 பேர் ஆனந்தனை தாக்கியதாக குறிப்பிட்டு இருந்தார்.
அதன்மூலம், இறந்து போன காதலியின் உடலை பார்க்கச் சென்ற ஆனந்தன் அடித்து கொலை செய்யப்பட்ட விவரம் தெரியவந்தது. ஆனந்தன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இதை கொலை வழக்காக மாற்றி கார்த்திகேயன், உதயகுமார், ராஜ்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த கொலை சம்பந்தமாக அவர்களது உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஆனந்தன் கொல்லப்பட்டதால் அந்த பகுதியில் மேற்கொண்டு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜேந்திரன், தாலுகா இன்ஸ்பெக்டர் சுப்பையா, டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜனார்த்தினி ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Average Rating