எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு : தூதராக இருப்பதில் பெருமை: கமல் உருக்கம்
சிகரெட், சோப்பு, ஷாம்பு போன்ற பொருட்களின் விளம்பர தூதராக இருப்பதை விட எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிமைகளை பெற்றுத் தருவதற்கான தூதராக இருப்பதை பெருமையாக கருதுகிறேன். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசார துவக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில், எய்ட்ஸ் விழிப்புணர்வு விளம்பர துாதராக அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் கமலஹாசன் பேசியதாவது: எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்கள் சமுதாயத்தில் அனைத்து உரிமைகளையும் பெறத் தகுதியுள்ளவர்கள். அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் போது, அதை காக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. எனது துறையில் என்னால் முடிந்தவரை இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். எய்ட்ஸ் நோய் தாக்குதலுக் குள்ளனவர்களை பள்ளிகளில் சேர்க்க மறுப்பது, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பது போன்ற மனித உரிமை மீறல்கள் இங்கு நடக்கின்றன. எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்களை என் சகோதர, சகோதரிகளாக கருதுகிறேன்.
இந்நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் பாதிப் பேர்தான் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் உள்ளவர்கள் பயத்தின் காரணமாகவும், வெட்கத்தாலும் சிகிச்சைக்கு வர மறுக்கின்றனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க மாணவர்களாகிய நீங்கள் உதவ வேண்டும்.எய்ட்ஸ் நோய் தாக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வும் தேவையாய் உள்ளது.
இந்த நோய் குறித்த விளம்பரங்களில் நடிக்கவும், சினிமாக்களை எடுக்கவும் பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். சிகரெட், சோப்பு, ஷாம்பு போன்ற பொருட்களின் விளம்பர தூதராக இருப்பதை விட எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிமைகளை பெற்றுத் தருவதற்கான தூதராக இருப்பதை பெருமையாக கருதுகிறேன்.இவ்வாறு கமலஹாசன் பேசினார்.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் சுப்ரியா சாகு பேசினார். ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பாளர் பிளட்டர் புல்ட், எஸ்.ஐ.இ.டி., கல்லூரி முதல்வர் சஞ்சிதா ஹாரீஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
முன்னதாக, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரிய திரையில் மாணவிகள் கையெழுத்திட்டனர். `இனி ஒரு விதி செய்வோம்’ என எழுதி கையெழுத்திட்டு நடிகர் கமலஹாசன் அதனை துவக்கி வைத்தார்.
`தசாவதாரம்’ தாமதம் : நிகழ்ச்சி முடிந்ததும், `தசாவதாரம்’ படம் ரிலீஸ் குறித்து கமலஹாசனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கமல், `படத்தின் கடைசி கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் இன்னும் முடியாத காரணத்தால் ஜனவரியில் படம் ரிலீஸ் ஆகாது’ என்று தெரிவித்தார். பொங்கலுக்கு `தசாவதாரம்’ படம் ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் கமல் இதனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.