வித்தியா படுகொலை: யார் இந்த பத்தாவது சந்தேகநபர்? சுவிஸ்குமாரின் தாயார் என்ன சொல்கிறார்? வழக்கின் நிலையென்ன? -நேற்றைய விசாரணையின் முழுமையான தொகுப்பு..!!
வித்தியா படுகொலை: யார் இந்த பத்தாவது சந்தேகநபர்? சுவிஸ்குமாரின் தாயார் என்ன சொல்கிறார்? வழக்கின் நிலையென்ன? -நேற்றைய விசாரணையின் முழுமையான தொகுப்பு-
**புங்குடுதீவு மாணவி வித்தியா வழக்கில் நடைபெற்றவை…**
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கடந்த மே மாதம் 13ம் திகதி வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதும், இதன் காரணமாக சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதும் நீங்கள் அறிந்ததே.
வழமைபோல் நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிபதி எஸ்.லெனின்குமார் தலைமையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்கு முன்னர் சிறைச்சாலை வாகனத்தில் வழமையாக இவ்வழக்குடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களுடன் புதிதாக மற்றுமொரு பத்தாவது சந்தேகநபர் என சந்தேகிக்கப்படும் நபரும் அழைத்து வரப்பட்டிருந்தார்.
இச்சந்தேகநபர் சிறைச்சாலை வண்டியில் இருந்து நீதிமன்ற வளாகத்திற்கு வருவதற்கு முன்னர் சுவிஸ் குமார் அப்பகுதியில் செய்தி சேகரிக்க சென்றிருந்த “அதிரடி” இணைய ஊடகவியலாளரிடம் “பத்தாவது சந்தேகநபர் ஒருவரும் வந்துள்ளதாக” நகைத்துக் கொண்டே அறிவித்து விட்டு சென்றார்.
தொடர்ந்து மன்றிற்கு சந்தேக நபர்களின் உறவினர்கள் சிலரும் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாயாரும் அண்ணனும் வந்திருந்தனர்.
இறந்த மாணவியின் சார்பாக சட்டத்தரணி மணிவண்ணன், சட்டத்தரணி ராஜ்குமார் ஆஜராகியதுடன், சந்தேகநபர் சார்பாக வழமையாக ஆஜராகும் சட்டத்தரணி சரத் வல்கமுவ மன்றிற்கு சமூகமளிக்கவில்லை.
இதேவேளை அவ்விடத்தில் நின்றிருந்த சந்தேகநபர்களில் ஒருவரான சுவிஸ்குமாரின் தாயார் “பேப்பர்காரங்கள் தான் எனது பிள்ளைகளை குற்றவாளியாக்கினம் எனவும், எங்கள் தரப்பு கருத்துக்களை, அவர்கள் எழுதுவது இல்லையெனவும்” தெரிவித்தார்.
உடனேயே அவ்விடத்தில் வைத்தே “உங்களின் (சுவிஸ்குமாரின் தாயாரின்) கருத்துக்களை சொன்னால், நாம் பதிவிடுவோம்” எனக்கூறி, அவரை புகைப்படம் எடுக்க முற்பட்ட போது, “தன்னை புகைப்படம் எடுக்க வேண்டாமென” கேட்டுக் கொண்டு, தனது கருத்துகளை தெரிவித்தார்.
“தனது பிள்ளைகள் அப்பாவிகள் எனவும், இச்சம்பவத்துக்கும் (மாணவி வித்தியாவின் சம்பவத்துக்கும்) எனது பிள்ளைகளுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை எனவும்” சுவிஸ்குமாரின் தாயாரினால் எம்மிடம் தெரிவிக்கப் பட்டது.
“அப்படியானால், நீங்கள் எதுக்கு சட்டத்தரணியை வைக்கவில்லை? உங்கள் பிள்ளைகள் தரப்புக் கருத்துக்களை நீங்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமே தவிர, ஊடகங்கள் மீது வீணாக பழிசுமத்தக் கூடாதென” நாம் தெரிவித்ததும்,
இவ்விடயம் தொடர்பாக சுவிஸ் குமாரது அம்மா தகவல் தருகையில் “சட்டத்தரணிக்கு கிட்டத்தட்ட 1 இலட்சம் செலவு செய்யப்படுவதாகவும் தங்குமிடம், பிரயாண செலவு உள்ளிட்டவை இதில் உள்ளடங்குவதாகவும் இத்தடவை அவசியம் இல்லை என்ற காரணத்தினால் அவரை அழைக்கவில்லை” என சுட்டிக் காட்டினார்.
பத்தாவது சந்தேக நபரை பிணையில் விடுவிப்பதற்காக சட்டத்தரணி ஜோய் மகாதேவா வருகை தந்திருந்ததுடன் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கு தொடர்பான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி குமார் குணரட்னம் “இப்படுகொலை தொடர்பில் மேலதிகமாக விசாரணையை முன்னெடுக்க வழக்கின் 5 ஆம், 6 ஆம்,10 ஆம் சந்தேக நபர்களை கொழும்பில் உள்ள மகசீன் சிறைச்சாலைக்கு மாற்றி அங்கு வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்க வேண்டும்” என நீதிவானிடம் விண்ணப்பம் செய்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிவான் “கொழும்பில் விசாரிப்பதற்கான காரணம் ஏன்?” என கேட்ட நிலையில் “வவுனியா சிறைச்சாலை அதிக தூரம், அசௌகரியம் இருப்பதாக” மன்றில் சுட்டிக் காட்டப்பட்டது.
அடுத்து பொலிஸாரிடம் “பத்தாவது சந்தேகநபரை கைது செய்ததது எவ்வாறு?” என நீதிவான் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பொலிஸார் “மாணவியின் உறவினரின் முறைப்பாட்டுக்கு அமைய, சந்தேகநபரை அராலி பகுதியில் தாம் கைது செய்ததாகவும், சில தினங்களிற்கு முன்னர் கைது செய்யப்பட்ட பிரியவர்த்தன ராஜ்குமார்(வயது-26) என்பவர் மாணவி வித்தியா வீடு சென்று சந்தேகத்திக்கு இடமாக நடமாடினார்” என மன்றில் தெரிவித்தனர்.
அத்துடன் “கைது செய்யப்பட்ட நபரின் வீட்டினை சோதனை செய்த போது, இரு கைத்தொலைபேசிகள் மற்றும் வித்தியா தொடர்பான ஆவணங்கள் என்பன மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட கைத்தொலைபேசி ஒன்றில் இருந்து சுவிஸ் குமாரது புகைப்படம், தொலைபேசி எண் என்பன காணப்பட்டதாகவும் இதனை அடிப்படையாக வைத்து கைது செய்ததாக” மன்றில் பொலிஸ் தரப்பு கூறியது.
இதன் போது பொலிஸாரின் கருத்துக்களை ஏற்க மறுத்த பத்தாவது சந்தேகநபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி திருமதி.ஜோய் மகாதேவா “பத்தாவது சந்தேகநபராக உள்ள எனது கட்சிக்காரர் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர். இவருக்கு பிறந்த காலம் முதல் வைத்தியம் நடைபெற்றது. ஆனால் 1997 ஆண்டு இடப்பெயர்வில் அவை தொலைந்து விட்டது” என நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இதனை செவிமடுத்த நீதிவான் “அதற்கு பின்னர் ஏன் மருத்துவ அறிக்கையை பரிசோதனை செய்து பெற்றுக் கொள்ளவில்லை?” என கேட்டார்.
இதற்கு பதிலளித்த சட்டத்தரணி “எனது கட்சிக்காரர் அதில் அசட்டையாக இருந்ததாகவும், பொலிஸார் வீண் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக” தனது வாதத்தில் தெரிவித்தார்.
இதன் போது குறுக்கிட்ட சட்டத்தரணி குமார் குணரட்ணம் “இச்சந்தேகநபரை விசாரிக்க குற்றப்புலனாய்வினர் விண்ணப்பம் செய்வதாகவும் அதற்காக அனுமதியை வழங்குமாறும்” கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து சந்தேகநபரது சட்டத்தரணி “எனது கட்சிக்காரர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவே நீதிமன்றத்தின் சார்பாக ஒரு வைத்திய பரிசோதனை செய்தால் அது தொடர்பாக அறிந்து கொள்ள முடியும்” என நீதிவானிடம் தெரிவித்தார்.
நீதவான் அதற்கு பரிசீலிப்பதாக தெரிவித்ததுடன் “குறித்த மாணவியின் வீட்டிற்கு மாத்திரம், பத்தாவது சந்தேகநபர் ஏன் செல்ல வேண்டும்?” என வினவினர்.
இதற்கு பதிலளித்த சட்டத்தரணி “அக்கொலை நடைபெற்ற போது அப்பகுதியில் எனது கட்சிக்காரர் கட்டட வேலையில் ஈடுபட்டதாகவும், எனவே தான் அப்பகுதிக்கு அவர் சென்றிருக்க வேண்டும்” என கூறினார்.
அடுத்து இவ்வழக்கில் ஏற்கனவே சந்தேகநபர்களாக உள்ள 5ஆம் சந்தேகநபர் தில்லைநாதன் சந்திரகாசன், 6ஆம் சந்தேகநபரான சிவதேவன் துசாந்தன், 10ஆவது சந்தேகநபரான பியவர்த்தன ராஜ்குமார் ஆகியோரை மேலதிக அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைக்கு உட்படுத்துமாறு மன்றில் உத்தரவிடப்பட்டது.
எனினும் வழக்கின் சந்தேக நபர்களிடம் இருந்து மீட்கப்பட்ட சான்றுப் பொருட்கள், மரபணு பரிசோதனை தொடர்பிலான எந்த அறிக்கையும் இதுவரை மன்றிற்கு சமர்ப்பிக்கப்படவில்லை. ஆனால் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் மயூரன் மன்றிற்கு காகித உறைகளுடன் சமூகமளித்திருந்தார்.
மன்றில் இருந்த எல்லோரது எதிர்பார்ப்பும் காகித உறையின் மீது தான் காணப்பட்டது. டி.என்.ஏ முடிவு வந்து விட்டதாகவே சிலர் எண்ணினர். ஆனால் பின்னர் அவ்வாறில்லை என மன்றில் தெரிவிக்கப்பட்டது.
மன்றில் சந்தேகநபர்களை கூப்பிடும் போது புதிதாக கைது செய்யப்பட்ட பத்தாவது சந்தேகநபரான ராஜ்குமாரை, சுவிஸ்குமார் ஆச்சரியமாக மன்றில் வைத்து பார்த்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
மன்றில் உள்ள குற்றவாளிகூடு மற்றும் நீதிமன்ற தடுப்பு அறை என்பவற்றில் பத்தாவது சந்தேகநபரை, ஏனைய சந்தேகநபர்கள் “நீர் யார்?” எனப் புதிதாக குசலம் விசாரித்ததையும், அச்சந்தேகநபர் அவர்களிடம் இருந்து ஒதுங்கி சென்றதையும் காண முடிந்தது.
அதிலும் குறிப்பாக சுவிஸ்குமார் ஆச்சரியமாகவும், விநோதமாகவும் பத்தாவது சந்தேகநபரைப் பார்த்து நகைத்ததையும், அதேவேளை பத்தாவது சந்தேகநபர், சுவிஸ் குமாரை “நீயா அவன்?” எனும் தோரணையில் பார்த்ததையும் மன்றில் இருந்த அனைவரும் காணக் கூடியதாக இருந்தது.
வழக்கு விசாரணை நிறைவடைய முன்னர் சந்தேகநபர்களை நோக்கி நீதிவான் “ஏதாவது கூற விரும்புகின்றீர்களா?” என கேட்ட போது நான்காவது சந்தேகநபர் “ஊடகவிலாளர்கள் தம்மை சீண்டுவதாக” தெரிவித்தார். அத்துடன் ஐந்தாவது சந்தேகநபர் “சிறைச்சாலையில் பாரபட்சம் காட்டப்படுவதாக” முறையிட்டார்.
அதற்கு நீதவான் “கவனமாகவும், நேர்மையாகவும் சந்தேகநபர்களை அனுசரிக்குமாறு” சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் “பத்தாவது சந்தேகநபரின் சட்டத்தரணியின் விண்ணப்பத்திற்கு இணங்க சிறைச்சாலை நிர்வாக அதிகாரி ஊடாக, உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டவரா? இல்லையா?? என்கின்ற அறிக்கையை எதிர்வரும் விசாரணையில் சமர்ப்பிக்குமாறு” நீதிவான் கூறினார்.
பத்தாவது சந்தேகநபரான சுழிபுரம் வடக்கம்பராயை சேர்ந்த ராஜ்குமார் நீதிவானை நோக்கி “கதைக்கலாமா?” என கேட்டார். இதன்போது அனுமதித்த நீதிவானிடம், “நான் அப்பாவி, மிக நல்லவன்” என உரக்க கூறினார்.
இதனை அடுத்து நீதிவான் ராஜ்குமாரை நோக்கி சடுதியாக கேள்விகளை கேட்டார், இதன் போது அவர் பதிலளித்த விதமும், சட்டத்தரணி கூறிய விடயங்களும் வித்தியாசம் உணரப்பட்டது.
அடுத்து மேற்கூறிய மூன்று பேரையும் கொழும்பில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கிய நீதிவான் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மன்றில் விசாரணை நிறைவடைந்த பின்னர் கூட பத்தாவது சந்தேகநபர் வேறாகவும் ஏனைய 9 சந்தேகநபர்கள் வேறாகவும் சிறைச்சாலை அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அத்துடன் பத்தாவது சந்தேகநபரைப் புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ பொலிசார், ஊடகவியாளர் எவரையும் அனுமதிக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
**தொடர்புபட்ட செய்திக்கு…
வித்தியா கொலை திருப்பம்: பத்தாவது சந்தேகநபர் மனநிலை பாதிக்கப்பட்டவரா? மேற்படி சந்தேகநபரை சுவிஸ்குமார் காட்டி கொடுத்தாரா?? (“அதிரடி”யின் படங்கள் & வீடியோக்கள்) http://www.athirady.com/tamil-news/howisthis/708098.html
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை; 10 ஆவது சந்தேக நபர் கைது.. ஊடகவியலாளர்கள் ஏசுகின்றனரென, சந்தேகநபர்கள் முறைப்பாடு..! (“அதிரடி”யின் படங்கள் & வீடியோ) http://www.athirady.com/tamil-news/news/708082.html
புங்குடுதீவு மாணவி வித்தியா சந்தேகநபர்கள், சட்ட வைத்திய அதிகாரிக்கு கை காட்டினர்..; நக்கலா? நளினமா?? (“அதிரடி”யின் படங்கள்) http://www.athirady.com/tamil-news/news/708024.html
வித்தியா படுகொலை: பத்தாவது சந்தேகநபரை விநோதமாக குசலம் விசாரித்த, ஏனைய சந்தேக நபர்கள்.. நடப்பது என்ன?? (“அதிரடி”யின் படங்கள்) http://www.athirady.com/tamil-news/news/708276.html
அதிரடிக்கு நன்றிகள்…
Average Rating