இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினம் – டிசம்பர் 26 வடக்கு மாகாணசபையால் பிரகடனம்..!!
வடமாகாண இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினமாக டிசம்பர் 26ஆம் திகதியை வடக்கு மாகாணசபை பிரகடனப்படுத்தி உள்ளது.
வடக்கு மாகாணசபையின் 41ஆவது அமர்வின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (16.12.2015) வடக்கு சுற்றாடல் அமைச்சர் இது தொடர்பான பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றியிருந்தார்.
அவர் தனது உரையில்,
இயற்கையின் சீற்றங்கள் புதியன அல்ல. பூமியில் வாழ்கின்ற உயிரினங்கள் பூமியில் தாங்கள் தோன்றிய காலம் முதல் எரிமலைக் குமுறலாகவும்;, நிலநடுக்கமாகவும், கடற்கோளாகவும், காட்டுத்தீயாகவும், பெருவெள்ளமாகவும் ஏதோ ஒருவகையில், ஏதோ ஒருபரிமாணத்தில் இயற்கையின் சீற்றங்களை அனுபவித்தே வந்திருக்கின்றன. ஆனால், அண்மைக்காலமாக இயற்கைச் சீற்றங்கள் உலகையே உலுக்கும் பேரிடர்களாக உருவெடுத்து வருகின்றன.
பூமியில் ஏற்பட்டுவரும் வெப்பநிலை உயர்வு பூகோள ரீதியாகக் காலநிலையில் எதிரும் புதிருமான பல மாற்றங்களைக் கடுகதியில் ஏற்படுத்தி வருகிறது. ஒருபுறம் மழையால் வளம்கொழித்திருந்த பல பிரதேசங்கள் வரட்சியால் காயத்தொடங்க, இன்னொரு புறம் வரண்டிருந்த பல பிரதேசங்களை மழை வெள்ளம் மூழ்கடித்துக்கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் சிங்காரச் சென்னை பெரு வெள்ளத்தால் சீரழிந்தமை இதற்கு ஒரு உதாரணம்.
காலநிலை மாற்றங்களால் வருங்காலத்தில் இலங்கையும் பேரிடர்களைச் சந்திக்கும் என்று ஆய்வாளர்களால் எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, வடக்கின் தலைப்பகுதியான யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கடல் காவுகொள்ளும் என்றும் எச்சரிக்கப்படுகின்றது.
இயற்கையின் சீற்றம் தவிர்க்கமுடியாததொன்று. ஆனால், இயற்கைக்கு முரணான, எதிரான எமது நடவடிக்கைகளைத் தவிர்த்துக்கொள்வதன் மூலம் இயற்கையின் சீற்றத்தைத் தணிவித்துப் பேரழிவுகளிலிருந்து எம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.
அவ்வாறு தணிப்பதற்குப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசரமான அவசியம் ஆகும். இதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக வடமாகாணத்துக்கென இயற்கைப்பேரிடர் தணிப்புத்தினம (யேவரசயட னுளையளவநச ஆவைபையவழைn னுயல) ஒன்றைப் பிரகடனப்படுத்தி, ஆண்டுதோறும் கடைப்பிடிப்பது காலப்பொருத்தமானது எனக் கருதுகிறேன்.
எம் தலைமுறையில் நாம் பார்த்திராத, வரலாறுகளில் மட்டுமே நாம் படித்திருந்த கடற்கோள் இயற்கைப் பேரழிவாக 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி அதிகாலை இலங்கையைத் தாக்கியது. கடல், இலங்கையின் கரையோர மாவட்டங்களில் புகுந்து திரும்பியதில் ஒரு மணித்தியாலயத்துக்குள் 40,000 மனித உயிர்கள் வரையில் அநியாயமாகப் பலியாகின. எமது வடக்குக் கிழக்கின் கரையோரங்கள் பெரும் உயிர்ச்சேதங்களையும் சொத்தழிவுகளையும் சந்தித்தது.
கடற்கோள் தாக்கிப் பதினொரு ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் அது ஏற்படுத்திய வலி இன்னமும் ஆறவில்லை. ‘இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய்’ என்று இயற்கை எமக்கு உரத்துப் போதித்த, கடற்கோள் தாக்கிய தினமான டிசம்பர் 26ஆந் திகதியை வடமாகாண இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினமாகப் பிரகடனப்படுத்துவதற்கு இந்த உயரிய சபையின் அங்கீகாரத்தைக் கோருகின்றேன் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து பிரேரணையைச் சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது.
Average Rating