சென்னையில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் கடைசி நிமிடங்கள்…!!
சென்னை வாசிகளின் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் அடியோடு புரட்டிப்போட்டு விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் கனமழை… ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கும் பாதிப்புகளை பார்த்தால் கண்களில் கண்ணீர் பொங்குகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து சேர்த்த பணத்தில் வீட்டில் வாங்கிப் போட்டிருந்த அத்தனை பொருட்களும்… குப்பை மேட்டுக்கு போய் விட்ட நிலையில்… அடையாறு ஆற்றங்கரையோரமாக வசித்து வரும் பெரும் பாலானவர்கள் புதிய வாழ்க்கையை எப்படி எங்கிருந்து தொடங்குவது என்று தடுமாற்றத்துடனேயே காணப்படுகிறார்கள்.
இப்படி எண்ணில் அடங்காத அளவுக்கு மிகுந்த பொருட் சேதங்களை ஏற்படுத்திய பெருவெள்ளம் பல உயிர்களையும் காவு வாங்கி விட்டே அடங்கி இருக்கிறது.
எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளம் பகுதியில் அடையாறு ஆற்றில் ஓடிய வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்ற 3 சிறுவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனால் ஒரு வாரத்துக்கும் மேலாக அந்தப் பகுதியே சோகத்தில் மூழ்கி கிடந்தது. இவர்களை போலவே மழை வெள்ளத்தில் சிக்கியும், மின்சாரம் தாக்கியும் அவ்வப்போது உயிர்பலிகள் நடந்து கொண்டே இருந்தன.
புரசைவாக்கம் பகுதியில் காய்ச்சலால் அவதிப்பட்ட 1½ வயது குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்ற தொழிலாளி ஒருவர், மனைவியையும், குழந்தையையும் ஆஸ்பத்திரியில் நிற்க வைத்துவிட்டு மருந்து வாங்க சென்றார். பின்னர் அவரை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது. இப்படி வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கி பலியானவர்களின் சொந்தங்களின் பின்னால் சொல்ல முடியாத சோகம் நிறைந்தே காணப்படுகிறது.
அந்த வகையில் வீட்டுக்குள் புகுந்த மழை வெள்ளத்தில் இருந்து பத்திரமாக வெளியேற முடியாமல் மனைவியுடன் ராணுவ அதிகாரி ஒருவர் பலியான சம்பவம்… படுத்த படுக்கையாக காட்சி அளித்த மகளை காப்பாற்ற முடியாததால், மகனுடன் சேர்ந்து வெள்ளத்தில் மூழ்கிய தாய் மகளுடன் உயிரை விட்டது போன்ற சம்பவங்களும் அடிமனதை கலங்க வைப்பதாகவே உள்ளன.
சென்னை நெசப்பாக்கம் ராணுவ குடியிருப்பில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வெங்கடேசன் (72). தனது மனைவி கீதாவுடன் தனியாக வசித்து வந்தார்.
கடந்த 1–ந்தேதி அன்று சென்னைவாசிகள் கனவிலும் நினைத்துப் பார்த்திராத வகையில் கொட்டித் தீர்த்த பேய் மழையால் ஊரெல்லாம் வெள்ளக் காடானது. இதில் நெசப்பாக்கம் ராணுவ குடியிருப்பையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அனைவரும் அவசரம் அவசரமாக வெளியேறினர். பலர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இப்படி நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டே சென்ற மழை வெள்ளம் கீழ் தளங்களில் உள்ள வீடுகளை முற்றிலுமாக மூழ்கடித்து, முதல் தளத்தை தொட்டது. ராணுவ அதிகாரி வெங்கடேசனும், அவரது மனைவி கீதாவும் வசித்து வந்த வீட்டுக்குள்ளும் மழை நீர் புகுந்தது.
இரவு 10 மணி அளவில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த போது தான் வெள்ளம் வீட்டுக்குள் வந்ததை அறிந்து அலறியடித்துக் கொண்டு எழுந்தார் வெங்கடேசன். அடுத்த 1 மணி நேரத்துக்குள் எல்லாம் அந்த பகுதியில் கழுத்தளவுக்கு தண்ணீர் புகுந்துவிட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் இடத்தை காலி செய்து விட்டு சென்று விட்ட நிலையில் வயதான காலத்தில் வெங்கடேசன், கீதாவால் அவசரம் அவசரமாக வெளியில் ஓடி தப்பிக்க முடியவில்லை.
இதனால் தண்ணீர் வருகையை கட்டுப்படுத்துவதற்காக வெங்கடேசன் வீட்டை உள்பக்கமாக பூட்டிவிட்டு, ஜன்னல் வழியாக வெளியில் பார்த்து அபயகுரல் எழுப்பினார். ஆனால் கண்ணுக்கு எட்டியதூரம் வரையிலும் கடல் போல தண்ணீர் சூழ்ந்திருந்தது. கூப்பிட்ட குரலுக்கு உதவி செய்ய உடனடியாக யாராலும் செல்ல முடியவில்லை. இதனால் தனது மகள் அனிதாவுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாக வெங்கடேசன் தகவல் அனுப்பினார்.
‘‘கழுத்தளவு தண்ணீரில் தத்தளிக்கிறோம்… எப்படியாவது எங்களை காப்பாற்றும்மா’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இதனால் பதறிப்போன அவர் உடனடியாக போலீஸ் மற்றும் மீட்பு படையினருக்கு நண்பர்கள் உதவியுடன் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து 1–ந்தேதி அன்று நள்ளிரவு 11 மணி அளவில் நெசப்பாக்கம் போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று வெங்கடேசனையும், அவரது மனைவி கீதாவையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இதற்கு பலன் கிடைக்கவில்லை. மறுநாள் (2–ந்தேதி) கணவன்–மனைவி இருவரையும் பிணமாகத்தான் மீட்க முடிந்தது.
கீதாவுக்கு அன்று பிறந்தநாள். அந்த நல்ல நாளிலேயே அவரது வாழ்க்கையும் முடிந்து போனது. இது அவரது உறவினர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல நெசப்பாக்கத்தில் வங்கி ஊழியர் குடியிருப் பில் மழை வெள்ளத்தில் உயிர் போவதற்கு முன்னால் வீட்டுக்குள் நடந்த பாசப்போராட்டமும் கலங்க வைக்கிறது.
அங்குள்ள ஒரு வீட்டில் சுசிலா (50), இவரது மகள் விஜயலட்சுமி (34), மகன் வெங்கடேசன் (21) ஆகியோர் வசித்து வந்தனர். இவர்களில் விஜயலட்சுமி நோய் வாய்ப்பட்டு நீண்ட நாட்களாகவே படுத்த படுக்கையாகவே காணப்பட்டார். இவர்கள் வசித்த வீட்டிலும் வெள்ளம் புகுந்து விட…. சுசிலாவும், வெங்கடேசனும் உயிர் பிழைக்க போராடியுள்ளனர்.
ஆனால் அவர்களால் படுத்த படுகையாக வீட்டில் கட்டிலில் கிடந்த விஜயலட்சுமியை விட்டு விட்டு செல்ல முடியவில்லை. மகளை காப்பாற்ற சுசிலாவும், அக்காவின் உயிரை காக்க வெங்கடேசனும் அங்கு மிங்கும் ஓடினர்.
ஆனால் பரபரப்பான அந்த அவசர காலத்தில் இவர்களின் அபயக் குரல் யாருடைய காதிலும் விழவில்லை. விஜயலட்சுமியை அப்படியே கட்டிலில் போட்டு விட்டு சென்றிருந்தால் சுசிலாவும், வெங்கடேசனும் உயிர் பிழைத்திருப்பார்கள்.
ஆனால் பாசத்துக்கு முன்னால் இவர்களுக்கு உயிர் துச்சமாகவே போய்விட்டது என்றே கூறலாம். இதனால், சுசிலாவும், வெங்கடேசனும் உயிர் போனாலும் பரவாயில்லை என்று வெளியில் வராமலேயே விஜயலட்சுமியுடன் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டனர்.
வீட்டை மூழ்கடித்த வெள்ளம் 3 பேரின் உயிரையும் ஒன்றாகவே குடித்து விட்டது.
இப்படி வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்னும் கண்ணுக்கு தெரியாமல் எவ்வளவோ சோகங்கள் புதைந்து கிடைக்கின்றன.
2004–ம் ஆண்டு டிசம்பர் 26–ந்தேதி அன்று சுனாமி ஏற்படுத்திய வடுக்கள் இன்னுமும் எப்படி மாறாமல் இருக்கிறதோ… அதைப் போலவே மழை வெள்ளம் ஏற்படுத்திவிட்டு சென்றிருக்கும் பாதிப்புகளும் நம் மனதை விட்டு எப்போதும் அகலாது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.
இனியும் வேண்டாம்… இதுபோன்ற துயரங்கள்….
Average Rating