கேரள பெண்ணின் குழந்தையை கடத்திய குமரி தம்பதி கைது..!!
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் சந்தோஷ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரீத்தா.
இந்த தம்பதிக்கு 1½ மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று சந்தோஷ் வேலைக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் செல்வதற்காக பிரீத்தா தனது கணவருக்கு போன் மூலம் தகவல் கொடுத்தார்.
அவர் மனைவியை திருச்சூர் பஸ் நிலையத்திற்கு வந்துவிடும்படியும் தான் அங்கு வந்து ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறினார். இதனால் குழந்தையுடன் பிரீத்தா திருச்சூர் பஸ் நிலையத்திற்குச் சென்றார்.
அங்கு வைத்து குழந்தை தொடர்ந்து அழுதுக் கொண்டே இருந்தது. இதைப்பார்த்த ஒரு தம்பதி பிரீத்தாவிடம் நைசாக பேசி அவர் குழந்தையுடன் அங்கு நிற்பதற்கான காரணத்தை தெரிந்து கொண்டனர்.
பிறகு அந்த தம்பதி அவர் ஆஸ்பத்திரிக்கு செல்ல தாங்கள் உதவுவதாக கூறினார்கள். ஆனால் அவர்களுடன் செல்ல பிரீத்தா தயங்கினார். இதனால் அந்த தம்பதி, பிரீத்தாவிடம் கணவரிடம் போனில் பேசி திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை வர சொல்லும்படி கூறினார்கள்.
உடனே பிரீத்தா கணவரிடம் இந்த தகவலை கூறி விட்டு குழந்தையுடன் அந்த தம்பதி ஏற்பாடு செய்த ஒரு ஆட்டோவில் ஏறி திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்குச் சென்றார்.
அங்கு கணவர் வராததால் தனது குழந்தையை ஆட்டோவில் இருந்த தம்பதியிடம் கொடுத்து விட்டு ஆட்டோவில் இருந்து கீழே இறங்கி தனது கணவருக்கு போன் செய்து தான் ஆஸ்பத்திரிக்கு வந்துவிட்ட தகவலை தெரிவித்து கொண்டிருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அந்த தம்பதி குழந்தையுடன் ஆட்டோவின் தப்பிச் சென்றுவிட்டனர். இதை பார்த்து பதறிப்போன பிரீத்தா அலறி துடித்தார். அவரது கூச்சல் கேட்டு அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர்.
பிரீத்தாவின் குழந்தை கடத்தப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது பற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து அனைத்து சோதனை சாவடிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.
திருச்சூர் கோணிமுக்கு என்ற இடத்தில் நடந்த வாகன சோதனையில் ஆட்டோவில் குழந்தையை கடத்திய அந்த தம்பதி போலீஸ் பிடியில் சிக்கினார்கள்.
அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது அவர்கள் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த ஜெகன்– ஈஸ்வரி என்பது தெரிய வந்தது.
திருச்சூரில் தங்கி இருந்து கூலிவேலை செய்து வந்த இந்த தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இதனால் பிரீத்தாவின் குழந்தையை தாங்கள் வளர்ப்பதற்காக கடத்தியதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். மேலும் குழந்தையை மீட்டு பிரீத்தாவிடம் ஒப்படைத்தனர். இந்த தம்பதி வேறு குழந்தைகள் எதையும் கடத்தினார்களா? இவர்களது பின்னணியில் குழந்தை கடத்தும் கும்பல் உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating