போர்க்கப்பல்களில் வந்த நிவாரண பொருட்களை வினியோகம்: பாதிக்கப்பட்ட பகுதிகளில் படை வீரர்கள் நேரடியாக வழங்குகிறார்கள்..!!
சென்னையில் மழை வெள்ளத்தில் தவிப்பவர்களுக்காக போர்க்கப்பல்களில் வந்த வெள்ள நிவாரண பொருட்கள் வினியோகிக்கும் பணி நடக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்று படை வீரர்கள் நேரடியாக வழங்கினர்.
வரலாறு காணாத மழையால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகளை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பெரும்பாலானோர் வீடுகளின் உள்ளேயும், மொட்டை மாடியிலும் தவித்து வருகின்றனர்.
மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளிட்ட மத்திய- மாநில அரசுகளை சேர்ந்த பல்வேறு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர் தமிழகத்துக்கு 2-வது தவணையாக ரூ.1,000 கோடி வழங்கப்படும் என்றும், மேலும் தேவையான நிவாரண பொருட்கள் மத்திய அரசு சார்பில் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதன்படி இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். ஐராவத், ஐ.என்.எஸ். சக்தி, ஐ.என்.எஸ். சஹாயாத்ரி ஆகிய போர்க்கப்பல்கள் 120 டன் நிவாரண பொருட்களுடன் சென்னை துறைமுகத்துக்கு வந்தன. கப்பலில் இருந்து நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ‘சமுத்ரா பஹரேதார்’ மற்றும் ‘விக்ரஹா’ ஆகிய போர்க்கப்பல்கள் தமிழகத்துக்கு வெள்ள நிவாரண பொருட்களுடன் விசாகப்பட்டிணத்தில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டன. நேற்று இந்த போர்க்கப்பல்கள் சென்னை துறைமுகத்தை வந்தடைந்தன.
போர்க்கப்பல்களில் அரிசி, பருப்பு, கோதுமை, பிஸ்கட், பால் பவுடர், சத்து மாவு, ரொட்டி உள்பட 11 ஆயிரத்து 200 கிலோ நிவாரண பொருட்களும், 60 ஆயிரம் தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் 3 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பாட்டில்கள், அவசர தேவைக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு மருந்துகளும் கொண்டுவரப்பட்டன.
இதுதவிர 2 போர்க்கப்பல்களிலும் மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தும் வகையில் 15-க்கும் மேற்பட்ட ரப்பர் படகுகள், தண்ணீரை வெளியேற்றும் மோட்டார்கள், மிதவை சட்டைகள், மீட்பு பணிக்காக தண்ணீரில் மூழ்கி மீட்பு பணிகளில் ஈடுபடும் திறமை படைத்த சிறப்பு தனித்துவம் வாய்ந்த வீரர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஐ.என்.எஸ். சக்தி போர்க்கப்பலில் கொண்டுவரப்பட்ட வெள்ள நிவாரண பொருட் களை கடற்படை வீரர்கள் துறைமுகத்தில் இறக்கி, லாரிகளில் ஏற்றினர். இதனை இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய தளபதி சதீஷ் சோனி பார்வையிட்டார்.
ஐ.என்.எஸ். சக்தி, கடலோர காவல் படைக்கு சொந்தமான ‘சமுத்ரா பஹரேதார்’ மற்றும் ‘விக்ரஹா’ போர்க்கப்பல்களில் கொண்டு வரப்பட்ட வெள்ள நிவாரண பொருட் களை கடற்படை, கடலோர காவல் படை, விமானப்படை உள்பட பல்வேறு படை பிரிவுகளை சேர்ந்த வீரர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் வழங்கினர்.
ஐ.என்.எஸ். சக்தி, போர்க்கப்பலில் சதீஷ் சோனி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆகாய மார்க்கமாக பார்வையிட்ட பின்னர் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் உள்பட அதிகாரிகளை சந்தித்து பேசினேன். மாநில அரசு நிர்வாகமும் முழுவீச்சில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மாநில அரசு அளித்த பாதிக்கப்பட்ட பகுதிகளில், இந்திய கடற்படையும் நேரடியாக நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
தற்போது நிவாரணப் பொருட்களை ஏற்றிவந்த 3-வது கப்பலில் 25 ரப்பர் படகுகள், ஜெனரேட்டர்கள், 70 டன் அரிசி, 7 லட்சம் லிட்டர் குடிநீர், மருந்து பொருட்கள், 108 நீச்சல் வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உள்பட 100 டன் நிவாரண பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக குடிநீர், பிஸ்கட்டுகள் வழங்கும் பணிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். மழை வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை மீட்பதற்காக கடந்த ஒரு வாரமாக நாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். அரக்கோணம் ராஜாளி கடற்படை தளம் உள்ள பகுதிகளில் அதிக பாதிப்பு இல்லாததால், அங்குள்ள கடற்படை வீரர்களும் இணைந்து வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபடுகின்றனர்.
சமூக வலைதளங்கள் மூலம் உதவி கோருபவர்களுக்கும் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தப்பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். தற்போது இதுவரையிலும் கப்பல் படைக்கு சொந்தமான3 போர்க்கப்பல்களில் 150 டன் எடையில் நிவாரணப்பொருட்களை கொண்டு வந்து வினியோகித்துள்ளோம்.
தேவைப்பட்டால் கூடுதலான கப்பல்களில் நிவாரணப் பொருட்களும், கடற்படை வீரர்களையும் அழைத்து வர தயாராக இருக்கிறோம். மாநில அரசும் வெள்ள மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மழை வெள்ளத்தில் தத்தளித்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை எங்கள் படை வீரர்கள் மீட்டுள்ளனர்.
மாநில அரசுடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். உள்ளூர் மக்களும் மீட்பு பணிக்கு தானாக முன்வந்து உதவி செய்கிறார்கள். இது பாராட்டத்தக்கது. கார்கள், படகுகள் செல்ல முடியாத இடங்களில் ஆகாய மார்க்கமாக ஹெலிகாப்டரில் சென்று உதவி செய்யப்பட்டு வருகிறது. கடலூர் பகுதியில் ஆய்வு செய்து நிவாரண பொருட்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating