தவசிகுளம் கொலைவழக்கில் வேப்பங்குளம் இராணுவத்தினர் கைது செய்யப்படும் சாத்தியம்

Read Time:4 Minute, 47 Second

வவுனியா தவசிகுளம் ஐவர் கொலை வழக்கில், கொல்லப்பட்ட ஒருவரது மரண வாக்கு மூலத்தின் அடிப்படையில் வேப்பங்குளம் இராணுவத்தை கைது செய்வதற்கான சாத்தியக் கூறுகள் உண்டாவென வன்னிப் பிராந்திய இராணுவத் தளபதிக்கும் வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார். மேற்படி கொலை வழக்கு வெள்ளிக்கிழமை வவுனியா மாவட்ட நீதிமன்றில், நீதிபதி எம்.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது வவுனியா பொலிஸார் இதுவரை மேற்கொண்ட புலனாய்வு விசாரணை அறிக்கை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி பின்வருமாறு கட்டளை பிறப்பித்தார். இந்தச் சம்பவத்தில் இறந்த யதுகரன் இறப்பதற்கு முன்னர் தனது மனைவியிடம் தெரிவித்ததை அவர் நீதிமன்றில் சாட்சியமளிக்கையில் பின்வருமாறு கூறினார். எனது கணவரை `வேப்பங்குளம் ஆட்களே’ கொலை செய்தனர். என்னுடன் அவர் சனிக்கிழமை மாலை 6 மணிக்கும் 6.30 மணிக்குமிடையில் கையடக்கத் தொலைபேசியில் கதைத்தார். வேப்பங்குளம் முகாம் இராணுவத்தினர் தன்னை வரும்படி கூறுவதாகத் தெரிவித்தார். என்னுடன் கணவர் தொலைபேசியில் கதைத்த போது, `யாரிடம் பேசுகிறா’யென இராணுவத்தினர் சிங்களத்தில் கேட்டனர். அவர்கள் கேட்ட கேள்விக்கு, மனைவியுடனேயே கதைப்பதாக எனது கணவர் அவர்களிடம் கூறியது எனக்கு தொலைபேசியூடாகக் கேட்டது. அப்படிக் கூறிய கணவர் மனைவியுடன் கதைக்கப் போகிறீர்களா எனக் கேட்டார், எனினும் அவர்கள் என்னுடன் கதைக்கவில்லை.

என்ன பிரச்சினை, உங்களை யார் மறிக்கிறார்களென கணவனிடம் நான் கேட்டேன். அவர்கள் கூப்பிடுகிறார்கள் கதைத்துவிட்டு வருவதாக கணவர் கூறினார்.

சாதாரணமாக, வேப்பங்குளம் படையினரை `வேப்பங்குளம் ஆட்கள்’ என்று தான் கணவர் கூறுவார். இராணுவ முகாமினுள் நின்றே எனது கணவர் கதைத்தார் என மனைவி கூறிய சாட்சியம், சான்றுக் கட்டளைச் சட்டம் பிரிவு -32 இன்படி மரண வாக்கு மூலமா? என்ற சட்ட வினாவை முன்வைத்த நீதிபதி, அரசு எதிர் முதலிகாமி, வழக்கையும், அரசு எதிர் மாஷல் அப்புகாமி வழக்கையும், இந்திய வழக்கான பாகல நாராயண சுவாமி எதிர் அரசு வழக்கையும் சுட்டிக்காட்டி, இந்த மூன்று தீர்ப்புக்களின் படி இறந்த யதுகரனின் கூற்று மரண வாக்கு மூலமாகும்.

எனவே 03.11.2007 மாலை 6 மணிக்கும் 6.30 மணிக்குமிடையில் வேப்பங்குளம் இராணுவ முகாமில் வாயில் கடமையிலிருந்த படையினரை இந்த மரண வாக்கு மூலத்தின் அடிப்படையில் கைது செய்யும் சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் எனவே, சட்டத்தின் படியும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் படியும் வேப்பங்குளம் இராணுவத்தினரை கைது செய்வதற்கான சாத்தியக் கூறை பரிசீலிக்குமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வேப்பங்குளம் இராணுவத்தினரை கைது செய்வது சம்பந்தமாக உதவியும் ஒத்துழைப்பும் நல்குமாறு வன்னிப் பிராந்திய இராணுவ கட்டளைத் தளபதிக்கும் வவுனியா தளபதிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு தொடர்பான கடிதங்கள் வன்னிப் பிராந்திய தளபதிக்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் உடனடியாக எழுத்து மூலம் கையளிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மாதவனுக்கு ஜோடி ஸ்ருதி ஹாசன்!!
Next post ஊடகத்தின் அச்சக எரிப்பைக் கண்டித்து கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம்