இலங்கை தயக்கத்துடன் எதிர்ப்பு
பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து பாகிஸ்தானை இடைநிறுத்தும் தீர்மானத்துக்கு இலங்கை எதிராகவே வாக்களிக்குமென்று வெளி விவகார பிரதி அமைச்சரான ஹுசைன் பைலா வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார். வியாழக்கிழமை உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டமொன்றில் பாகிஸ்தானை இடைநிறுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய பிரச்சினையை அடுத்தே அரசாங்க தரப்பிலிருந்து இந்த விவகாரம் பகிரங்கமாகியிருக்கிறது. பாகிஸ்தான் எப்போதுமே இலங்கைக்கு உதவியளித்து வந்த நாடு. ஒருபோதும் அதற்கெதிராக நாம் செயற்படக் கூடாதென முன்னாள் வெளிவிவகார அமைச்சரான லக்ஷ்மன் கதிர்காமர் சுட்டிக் காட்டி வலியுறுத்தியிருக்கின்ற போதிலும் தற்போதைய வெளிநாட்டமைச்சரான ரோஹித்த போகொல்லாகம பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து பாகிஸ்தானை இடைநிறுத்தும் தீர்மானத்துக்கு ஆதரவளித்திருக்கிறார். இது நாட்டுக்கு செய்த துரோகமாகும்” என்று லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் முகமாக பேசிய பிரதி அமைச்சர் ஹுசைன் பைலா; இப்படியானதொன்று நடைபெற்றிருக்கிறது கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது பொதுநலவாய நாடுகள் அமைப்பு உச்சி மாநாட்டில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாக்களிப்பதென்றே முடிவு செய்யப்பட்டது. அதாவது, பாகிஸ்தானை அவ் அமைப்பிலிருந்து நீக்கும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்பதென முடிவு செய்யப்பட்டது. எனினும், அமைச்சர் போகொல்லாகம நாட்டிலிருக்காததால் அவர் அதை அறிந்திருக்கவில்லை. இதனால் தான் அவர் அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.
எனினும், பிரதமர் தலைமையில் கூடிய அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி வாக்கெடுப்பின் போது பாகிஸ்தானை அமைப்பிலிருந்து நீக்கும் தீர்மானத்துக்கு இலங்கை எதிராக வாக்களிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. அது, அங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.
இது தொடர்பாக ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளேயிடம் வினவிய போது பிரதி வெளிவிவகார அமைச்சரின் கருத்தை உறுதிப் படுத்தியதுடன் கடந்த புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் போது வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம உகாண்டா சென்று விட்டதால் தீர்மானம் பற்றி அவர் அறிந்திருக்காததன் காரணமாகவே எதிராக வாக்களித்து விட்டார் என்றும் சுட்டிக்காட்டினார்.
எனினும், பிரதமர் தலைமையில் கூடிய அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாக்களிப்பதென்று எடுத்த தீர்மானம் உடனடியாக தொலைபேசி மூலம் உகாண்டாவிலிருக்கும் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் இதற்கமைய பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களது கூட்டத்தின் போது நடைபெறும் வாக்கெடுப்பில் இலங்கை பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்றும் அமைச்சர் பெர்ணான்டோபுள்ளே கூறினார்.