தேர்தலுக்கு முன்னர் நவாஸ் ஷெரீப் மீண்டும் பாகிஸ்தான் திரும்புவார்?

Read Time:3 Minute, 20 Second

நாடு கடத்தப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் மீண்டும் நாடு திரும்பும் முயற்சிகளை மேற்கொள்வாரென அவரது கட்சி தெரிவித்துள்ளது. நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் அறிவிப்பும் பொதுநலவாய அமைப்பிலிருந்து பாகிஸ்தான் இடைநிறுத்தப்பட்டதும் முஷாரப்புக்கெதிராக தோன்றியுள்ள புதிய சவால்களாக கருதப்படுகிறது. ஜனவரியில் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில் நவாஸின் வருகை முஷாரப்புக்கு அதிகளவான எதிர்ப்பலைகளை தோற்றுவிக்குமெனவும் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக காத்திருக்கும் மேற்குலக சார்பாளரான பெனாசிர் பூட்டோவுக்கு பெரும் சவாலாக விளங்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது. இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு முஷாரப்புக்கு சவாலாக விளங்கிய இறுதி வழக்கினையும் உயர்நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே நவாஸ் ஷெரீப்பின் இத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பரில் நாடு திரும்பிய ஷெரீப்பை பாகிஸ்தான் அரசு விமான நிலையத்தில் வைத்து உடனடியாக சவூதி அரேபியாவுக்கு நாடு கடத்தியமை குறிப்பிடத்தக்கது.

இவ் அறிவிப்பு தொடர்பில் முஷாரப்பின் பேச்சாளர் எவ்வித கருத்தையும் கூற மறுத்துள்ள அதேவேளை முஷாரப்பின் கட்சியின் தலைவர் சௌத்திரி சுஜாத் ஹுசைன் நவாஸை எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாகவும் அவர் பாராளுமன்ற தேர்தலில் மக்களை எதிர்கொள்ளட்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவர் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை சவூதி அரேபியா மேற்கொண்டு வருவதாக கருத்துக்கள் நிலவுகின்றன.

தேர்தலில் கட்சியை வழிநடத்துவதற்காக ஷெரீப் நாடு திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ள அவரது கட்சி அவர் தேர்தலை பகிஷ்கரிப்பதற்கு அழைப்புவிடுத்திருந்ததாகவும் ஆனால் பெனாசிரின் கட்சியும் ஏனைய கட்சிகளும் பகிஷ்கரிப்பு தொடர்பான எந்த முடிவையும் மேற்கொள்ளாததினால் அவர் தனது தீர்மானத்தை மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பிரான்ஸில் துக்ளக் இதழுக்கு தீவைத்து மகிழ்ந்த புலிப்பினாமிகள்..!
Next post மனைவி சுட்டுக்கொலை; சந்தேகத்தில் புத்தளம் இராணுவ கட்டளைத்தளபதி கைது