கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொன்று புதைப்பு…!!
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 27). இவர் கங்கைகொண்டானில் உள்ள டயர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த ஜூன் மாதம் 21–ந்தேதி மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்ற இவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து 23–ந்தேதி ஆறுமுகத்தின் தாய் லட்சுமி தாழையூத்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ராஜவல்லிபுரம் காட்டு பகுதியில் ஓய்வு பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கந்தன் என்பவருக்கு சொந்தமான கிணற்றை சுத்தப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது கிணற்றுக்குள் மோட்டார் சைக்கிள் கிடப்பது தெரியவந்தது.
உடனே இதுபற்றி தாழையூத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து கிணற்றில் இருந்து மோட்டார் சைக்கிளை வெளியே எடுத்தனர். அதில் இருந்த ஆவணங்களை வைத்து விசாரித்தபோது அந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போன ஆறுமுகத்திற்கு சொந்தமானது என தெரியவந்தது.
இதனால் ஆறுமுகம் கொலை செய்யப்பட்டு மோட்டார் சைக்கிளுடன் கிணற்றுக்குள் வீசப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து பாளை தீயணைப்பு படையினர் உதவியுடன் போலீசார் கிணற்றில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உள்ளே உடல் எதுவும் இல்லை என தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
காணாமல் போன ஆறுமுகம் கொலை செய்து புதைக்கப்பட்டது தெரியவந்தது. ஆறுமுகத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மனைவி பட்டு என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாம். கண்ணன் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்து விட்டு துபாயில் வேலை செய்து வந்தார். பட்டு குழந்தைகளுடன் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இதை சாதகமாக பயன்படுத்தி ஆறுமுகம் அடிக்கடி பட்டுவின் வீட்டிற்கு சென்று வந்தாராம். இது கண்ணன் குடும்பத்தாருக்கு தெரியவந்தது. இந்த நிலையில் கண்ணனின் தம்பி இசக்கிமுத்து மற்றும் சிலர் சேர்ந்து ஆறுமுகத்திடம் தகராறு செய்தனர். தகராறு முற்றியதில் ஆறுமுகத்தை அடித்து கொலை செய்துள்ளனர்.
பின்பு ராஜவல்லிபுரம் ஊரின் வெளியே ஆறுமுகம் உடலை புதைத்து விட்டு அவரது பைக்கை கிணற்றில் போட்டுள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இசக்கிமுத்து உள்ளிட்ட 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ஆறுமுகம் கொன்று புதைக்கப்பட்ட இடத்தை இசக்கிமுத்து அடையாளம் காட்டினார். அந்த இடத்தில் ஆறுமுகம் உடலை தோண்டி எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இன்று பிற்பகலில் ஆறுமுகம் உடல் தோண்டி எடுக்கப்பட உள்ளது. இந்த கொலை சம்பவம் தாழையூத்து பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating