ஈரானிலிருந்து சடலமாக அனுப்பிவைக்கப்பட்ட கலகிரிய தோட்ட இளம் பணிப்பெண்..!!
வீட்டுவேலைக்கு பிள்ளைகளை அனுப்புவதாலும், அதேபோன்று வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்புவதாலும் ஏற்படும் பிரச்சினைகள், கொடுமைகள், உயிரிழப்புக்கள்பற்றி பத்திரிகைகளில் அடிக்கடி செய்திகள் வெளிவருகின்றன. இவை மக்களிடம் தெளிவை ஏற்படுத்தும் நோக்கிலேயே வெளியிடப்படுகின்றன. ஆனாலும், மக்கள் தெளிவடைவதாக இல்லை. தொடர்ந்தும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.
மலையகத்தில் இதுதொடர்பான விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை என்பதனையே இது குறிப்பதாக உள்ளது. அண்மையில் கண்டி மாவட்டத்தில் இதுபோன்றதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதுபற்றி தெரியவருவதாவது,
கண்டி, பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை, கலகிரிய தோட்டத்தைச் சேர்ந்த ராமகிருஸ்ணன் செல்வி என்ற (வயது 20) பெண் அண்மையில் சடலமாக ஈரான் நாட்டிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி உயிரிழந்த பெண்ணின் தாயாரான மாயழகு தீபாம்பாள் கூறுகையில், எனது கணவன் ஆறு வருடங்களுக்கு முன் காலமாகிவிட்டார். இந்தநிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் வறுமை காரணமாக எனது மகளை (மூன்றாவது மகள்) கொழும்பு தெஹிவளை பிரதேசத்தில் வசித்த ஈரான் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் வீட்டுக்கு வீட்டு பணிப்பெண்ணாக வேலைக்கு அனுப்பினேன். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் குறித்த ஈரான் நாட்டு தொழிலதிபர் மூன்று மாத சுற்றுலா வீசாவில் தனது நாட்டுக்கு எனது மகளையும் அழைத்துச் செல்வதாக தொலைபேசி மூலம் கூறினார்.
எனது மகளின் எதிர்காலத்தை கருதி நான் அதற்கு உடன்பட்டேன். அதன் பிறகு மாதா மாதம் இலங்கையில் உள்ள உறவினர்கள் ஊடாக மகளின் சம்பளப் பணம் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அத்தோடு அடிக்கடி தொலைபேசி வாயிலாக எனது மகள் என்னோடு தொடர்புகளை பேணிவந்தாள்.
இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் எனது மகள் கடுமையாக சுகயீனமடைந்துள்ளதாக எனக்கு அறிவித்தனர். ஆனால், அப்போது தொடக்கம் எனது மகளிடமிருந்து தொடர்புகள் குறைவாகவே இருந்து வந்தன. இந்தநிலையில், கடந்த வாரம் எனது மகள் இறந்து விட்டதாக வீட்டுக்காரர்கள் எனக்குத் தகவல் வழங்கியதுடன், அதனை மிகவும்; வேதனையுடன் பகிர்ந்து கொண்டனர். மகளின் சடலத்தையும் அனுப்பிவைத்துள்ளனர் என்றார்.
விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டிருந்த சடலத்தைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள் கடந்த சனிக்கிழமை தோட்ட மயானத்தில் அடக்கம் செய்தனர்.
இம் மரணம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதுடன், இதுதொடர்பாக கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம், வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு ஆகியவற்றில் எழுத்து மூலமான முறைப்பாடுகளையும் செய்துள்ளனர்.
உயிரிழந்த பெண் 17 வயதில் வெளிநாட்டுக்கு (ஈரான்) அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இவரை ஈரானுக்கு அழைத்துச் செல்வதற்கு பெற்றோரிடத்தில் (தாய்) ஒப்புதல் பெற்றிருக்கவில்லையென்று கூறப்படுகிறது. பெண்ணின் பெயரில் பெறப்பட்ட கடவுச்சீட்டில் பிறந்த திகதி 7.10.1993 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாத மேற்படி பெண்ணுக்கு போலியான அடையாள அட்டை (இலக்கம் 937817266V) பெறப்பட்டு, அந்த இலக்கம் கடவுச்சீட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரின் பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தில் பிறந்த திகதி 07.10.1995 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே போலியான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு ஈரானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
எனவே, உயிரிழந்த பெண் தொடர்பில் நீதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று குடும்பத்தினர் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
இன்று அழுது புரண்டு துக்கத்தை வெளிப் படுத்துவதன் மூலம் அப்பாவிப் பெண்ணின் உயிரை மீட்டெடுக்க முடியுமா? ஓவ்வொரு பெற்றோரும் இதை உணரவேண்டும். அப் போது தான் இவ்வாறான உயிரிழப்புகளை தடுக்கலாம்.
Average Rating