(படங்கள்) இடிந்து விழும் நிலையில் ஹற்றன் பொஸ்கோ கல்லூரி! மாணவர்கள் வெளியேற்றம்…!!
ஹற்றன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் ஆரம்பப்பிரிவு கட்டிடமானது இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்படக் கூடிய அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டப் பட்டதையடுத்து இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
சுமார் 60 வருடங்களுக்கு மேல் பழமையான இந்த கட்டிடத்தின் அபாயத்தன்மை குறித்து, கடந்த காலங்களில் பாடசாலை நிர்வாகம் மற்றும் பழைய மாணவர் சங்கம் ,பெற்றோர்கள் ஆகியோரால்,
மத்திய மாகாண முதலமைச்சர், மாகாண கல்வி அமைச்சர் என பலருக்கும் அறிவித்தும் இது வரையில் இதற்கு தீர்வு பெற்றுத்தரப்படவில்லையென விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,நேற்று பெய்த கடும் மழையினால் இக்கட்டிடத்தின் பாதுகாப்பு சுவர் சேதமடைந்து உடைந்து விழும் அபாயம் இருப்பதாக கல்லூரி நிர்வாகத்தினால் உடனடியாக பிரதேச கிராம அதிகாரி மற்றும் ஹற்றன் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
கட்டிடத்தின் பின்புறமாக உள்ள மண் மேடு சரிந்து விழும் அபாயம் இருப்பதுடன் முன்பக்கம் பள்ளத்தாக்காக இருப்பதால் அந்த இடமும் சரியும் அபாயம் இருப்பதாக அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து மாணவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களை அங்கிருந்து வெளியேற்றும்படி அறிவுறுத்தப்பட்டது.
தற்போது மாணவர்களுக்கு தற்காலிக விடுமுறையை கல்லூரி நிர்வாகம் ஹற்றன் வலயக்கல்வி பணிப்பாளரின் அனுமதிக்கு அமைய வழங்கியுள்ளது.
எனினும் போதிய கட்டிட வசதிகள் இல்லாத காரணத்தினால் இங்கு கல்வி பயிலும் சுமார் 400 மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை எங்கு மேற்கொள்வது என கேள்வி எழுந்தபோது,
இது குறித்து கல்லூரி நிர்வாகம் பழைய மாணவர் சங்கம் மற்றும் பெற்றோர்களின் கலந்துரையாடல்களின் பின்னர் அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் ஒரு கட்டிடத்தில் வகுப்புகளை நடத்த அனுமதி கோருவது என முடிவு செய்யப்பட்டது.
அதன் படி அதற்கு பொறுப்பாக இருக்கும் அமைச்சர் திகாம்பரத்திடம் இது குறித்து எடுத்துக்கூறப்பட்டபோது அமைச்சின் செயலாளர் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொண்ட அவர் 05.10.2015 அன்று அதற்கான அனுமதி கடிதத்தை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கின்றது.
கடந்த வருடம் மேற்படி கட்டிடத்தின் பின்புற மண்மேடு சரிந்து விழுந்ததில் கட்டிடத்தின் சுவர் சேதமுற்றது. அச்சந்தர்ப்பத்தில் சிவனொளிபாதமலை யாத்ரிகர்கள் தங்கும் மண்டபத்திலேயே ஆரம்பப்பிரிவு மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹற்றன் நகரின் பிரபல பாடசாலையான புனித ஜோன் பொஸ்கோ கல்லூரிக்கு போதிய கட்டிட வசதிகளை பெற்றுக்கொடுப்பதில் கடந்த காலங்களில் அரசியல் ரீதியாக எவரும் அக்கறை காட்டாமலிருப்பது குறித்து இப்பிரதேச பெற்றோர் மற்றும் பழைய மாணவர் சங்கம் என்பன தமது அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளன.
Average Rating