கோவையில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த என்ஜினீயர் கொலையில் மாணவர்–6 பேர் சிக்கினர்…!!
கோவை பாப்பநாயக்கன் பாளையம் செங்காடு பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. காங்கிரஸ் பிரமுகர். இவரது மகன் ராஜேஷ் குமார்(வயது 22). டிப்ளமோ என்ஜினீயர்.
இவரும், இவரது நண்பர் ஆனந்த் ஆகியோர் நேற்று மாலை ஆவாரம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அருகில் உள்ள நான்கு சாலை சந்திப்பில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த கும்பல் ராஜேஷ்குமாரை சுற்றி வளைத்து சரமாரியாக கத்தியால் குத்தியது. ராஜேஷ் குமார் அவர்களிடம் இருந்து தப்பி ஓட முயன்றார். எனினும் கும்பல் விடாமல் துரத்தி அவரை கத்தியால் குத்தியது. பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில்களில் ஏறி தப்பி ஓடினர்.
பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ரத்தவெள்ளத்தில் கிடந்த ராஜேஷ்குமாரை பொதுமக்கள் மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜேஷ் குமார் இறந்து விட்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில், பழையூரை சேர்ந்த ராம கிருஷ்ணன்(24), அஜித் குமார்(22), சுரேஷ்(23), சக்தி வேல்(23), கார்த்தி(24), அருண் பாண்டியன்(25), மூர்த்தி(25) ஆகிய 7 பேர் சேர்ந்து ராஜேஷ்குமாரை கொலை செய்தது தெரிய வந்தது. இதில் அஜித்குமார் கோவில்பாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். மூர்த்தி பட்டப்படிப்பு முடித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
கொலையாளிகளை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் ஜோதி, சுரேஷ், சப்–இன்ஸ்பெக்டர் பிரேமா ஆகியோர் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி ராம கிருஷ்ணன், உள்பட 7 பேரையும் மடக்கிப் பிடித்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
செங்காடு மற்றும் பழையூரை சேர்ந்த வாலிபர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் ஆரம்பித்த தகராறு பின்னர் தொடர் கதையாகி இரு தரப்பினரும் அடிக்கடி மோதி வந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி விழாவிலும் இரு தரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டு பேக்கரியை சூறையாடி உள்ளனர். மேலும், கடந்த 4 நாட்களுக்கு முன்பு ராஜேஷ் குமார் பழையூருக்கு சென்று அங்குள்ள வாலிபர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த விரோதத்தில் தான் கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்றும் விசாரித்து வருகிறோம் என்றார்.
இந்த கொலை தொடர்பாக ராஜேஷ்குமாரின் உறவினர் ரகுபதி கொடுத்த புகாரின்பேரில் ராமகிருஷ்ணன் உள்பட 7 பேர் மீதும் கொலை, ஆயுதங்களை காட்டி மிரட்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Average Rating