தடையை மீறி பேரணி நடத்த முயன்ற பெனாசிருக்கு மீண்டும் வீட்டுக்காவல்: ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நள்ளிரவில் கைது
தடையை மீறி பேரணிக்கு செல்ல முயன்ற பெனாசிர் மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவரது கட்சி தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோரும் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானில் கடந்த 3-ந் தேதி அதிபர் முஷரப் நெருக்கடி நிலையை பிறப்பித்தார். எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 9-ந் தேதி, நெருக்கடி நிலையை எதிர்த்து பேரணி நடத்துவதற்காக இஸ்லாமாபாத் வந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளின் வற்புறுத்தலால் பெனாசிர், சில மணி நேரங்களிலேயே விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று அவர் மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். நேற்று லாகூரில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் வரை 300 கி.மீ. தூரத்துக்கு நீண்ட பேரணி நடத்த பெனாசிர் திட்டமிட்டு இருந்தார். இது 3 நாட்கள் பேரணி ஆகும். நெருக்கடி நிலையை ரத்து செய்யக்கோரியும், நவம்பர் 15-ந் தேதிக்குள் ராணுவ தளபதி பதவியில் இருந்து விலகும்படி அதிபர் முஷரப்பை வற்புறுத்தியும் இந்த பேரணி நடைபெறுவதாக இருந்தது. இந்த பேரணிக்காக, பெனாசிர் நேற்றுமுன்தினம் லாகூர் வந்தார். அங்கு தனது பாகிஸ்தான் மக்கள் கட்சி மூத்த தலைவர் லத்தீப் கோசாவின் வீட்டில் தங்கி இருந்தார். அவர் போலீஸ் பாதுகாப்புடன் லாகூருக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்ல போலீசார் அனுமதி கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு திடீர் திருப்பம் ஏற்பட்டது. பெனாசிர் தங்கியிருந்த வீட்டை சுற்றிலும் சுமார் 600 போலீசார் முற்றுகையிட்டனர். வீட்டை சுற்றிலும் தடுப்புகளை அமைத்தனர். துப்பாக்கியால் குறி பார்த்து சுடும் வீரர்கள், பக்கத்து வீட்டின் உச்சியில் நிறுத்தப்பட்டனர். பேரணிக்கு தடை விதிப்பதாக போலீசார் அறிவித்தனர்.
மீண்டும் வீட்டுக்காவல்
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த பெனாசிர், `என்னை போலீசார் கைது செய்தாலும், செய்யாவிட்டாலும் பேரணி திட்டமிட்டபடி நடக்கும். பாகிஸ்தானை பாதுகாப்பதற்காக பேரணி நடைபெறுகிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.
தடையை மீறி பேரணிக்கு செல்வதற்கான ஏற்பாடுகளில் பெனாசிர் ஈடுபட்டார். இதையடுத்து, அவர் ஒரு வார காலம் வீட்டுக்காவலில் வைக்கப்படுவதாக போலீசார் அறிவித்தனர். நள்ளிரவை தாண்டி, நேற்று அதிகாலையில் இதை அறிவித்தனர். இதற்கான உத்தரவை லாகூர் போலீஸ் அதிகாரி அப்தாப் சீமா, பெனாசிர் கட்சி நிர்வாகிகளிடம் வழங்கினார். ஆனால் அவர்கள் உத்தரவை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். இதனால் பெனாசிரின் உதவியாளர் நகீத் கானிடம் உத்தரவை காட்டி விட்டு, அதை வீட்டு கதவில் போலீசார் ஒட்டினர்.
மனித வெடிகுண்டுகள் ஊடுருவல்
தடையை மீறி பேரணிக்கு செல்ல முயன்றால், சட்டம் தனது கடமையை செய்யும் என்று போலீஸ் அதிகாரி அப்தாப் சீமா எச்சரிக்கை விடுத்துள்ளார். பெனாசிர் பேரணிக்கு செல்ல அனுமதி கிடையாது என்று பாகிஸ்தான் தகவல்துறை மந்திரி தாரிக் அசீம் கூறினார்.
பெனாசிரை வீட்டுக்காவலில் வைப்பதற்கான உத்தரவை, பஞ்சாப் மாகாண அரசு பிறப்பித்து இருந்தது. பெனாசிரை கொலை செய்வதற்காக, லாகூரில் மனித வெடிகுண்டுகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்து இருப்பதாகவும், எனவே, பாதுகாப்பு கருதி பெனாசிர் வீட்டுக்காவலில் வைக்கப்படுவதாகவும் பஞ்சாப் மாகாண அரசு கூறியுள்ளது.
39 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில்தான் பெனாசிரின் தந்தை அலி பூட்டோ, அப்போதைய அதிபர் முகமது அïப்கானால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொண்டர்கள் கைது
பெனாசிர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டவுடன், அவரது கட்சியினருக்கு எதிராக போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். இரவோடு இரவாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக, லாகூர்-இஸ்லாமாபாத் பேரணியின்போது, நடுவழியில் பெனாசிர் எங்கெங்கு பேசுவதாக அறிவிக்கப்பட்டு இருந்ததோ, அங்கெல்லாம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், பெனாசிர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள வீட்டுக்கு முன்பு நேற்று காலை திரண்ட தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.
முஷரப் விலக வேண்டும்
இதற்கிடையே, அதிபர் முஷரப் பதவி விலக வேண்டும் என்று முதன்முறையாக பெனாசிர் கோரிக்கை விடுத்துள்ளார். வீட்டுக்காவலில் உள்ள அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பாகிஸ்தானில் சர்வாதிகார காலம் முடிந்து விட்டது. ஜனநாயகம் திரும்ப வேண்டிய காலம் வந்து விட்டது. எனவே, முஷரப் பதவி விலக வேண்டும். எனது ஆதரவாளர்கள் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பின்லேடன் மறைவிடத்தை கண்டுபிடிக்க வேண்டிய போலீசார், எனது ஆதரவாளர்களை தேடுவதிலேயே கவனமாக உள்ளனர்.
என்னை ராணுவ விமானத்தில் கராச்சிக்கு கொண்டு செல்லப்போவதாக எனக்கு எந்த தகவலும் வரவில்லை. ஆனால் அப்படி நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு பெனாசிர் கூறினார்.
பேரணி தொடங்கியது
இந்நிலையில், பெனாசிர் கட்சியினர், திட்டமிட்டபடி நேற்று லாகூரில் இருந்து பேரணியை தொடங்கினர். பெனாசிர் இல்லாததால், மூத்த தலைவர் ஷா முகமது குரேஷி, பேரணிக்கு தலைமை தாங்கினார். 110 வாகனங்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பேரணியாக இஸ்லாமாபாத் நோக்கி புறப்பட்டனர்.