300 பவுன் நகை கொள்ளை

Read Time:4 Minute, 22 Second

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து ஓட்டல் அதிபர் வீட்டில் 300 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்த துணிகரக்கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது: சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர், விக்னேஸ்வரா நகர் முதல் தெருவில் வசிப்பவர் ரமேஷ். இவர் தனது வீட்டின் முதல் மாடியை பால்ராஜ் (வயது 52) என்பவருக்கு வாடகைக்குவிட்டிருக்கிறார். பால்ராஜ் பழைய மகாபலிபுரம் சாலை செம்மஞ்சேரியில் அனிதா பார்க் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். மனைவி சுகந்தியுடன் மேற்படி வீட்டில் பால்ராஜ் வசித்து வருகிறார். ஒரே மகளான அனிதாவுக்கு திருமணமாகி அவர் பாலவாக்கத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் உறவினர் ஒருவரது திருமணத்துக்கு செல்வதற்காக கடந்த 24ந் தேதி வங்கி லாக்கரில் இருந்த நகைகளை வீட்டுக்கு எடுத்து வந்தார் பால்ராஜ். இதற்கிடையே பால்ராஜின் மகள் அனிதாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பால்ராஜ் வீட்டை பூட்டி கொண்டு மருத்துவமனைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. பால்ராஜின் வீட்டுக்கு வேலைக்காரி வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்ததை கண்டார். உடனே அவர் வீட்டின் உரிமையாளர் ரமேஷிடம் தெரிவித்தார். அவர் வந்து பார்த்து, பால்ராஜுக்கு தகவல் கொடுத்தார்.

அதிர்ச்சி அடைந்த பால்ராஜ் உடனடியாக வீட்டுக்கு விரைந்து வந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளை யடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக பால்ராஜ் போலீசுக்கு தகவல் கொடுத்தார். துணை கமிஷனர் சேஷசாயி, உதவி கமிஷனர் லாயிட் சந்திரா, துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

நள்ளிரவில் கொள்ளையர்கள் வீட்டின் முதல் மாடிக்கு வந்து அங்கிருந்த பூட்டை உடைத்து, உள்ளே சென்று, அங்கு மாட்டப் பட்டிருந்த பீரோ சாவியை எடுத்து அதனை திறந்து, அதில் இருந்த 300 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளின் மதிப்பு ரூ. 25 லட்சம் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியுள்ள ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்பட்டது. அது சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்றது. வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இந்தியர்களை தாக்கிய ஜெர்மானியர்களுக்கு அபராதம்
Next post தடையை மீறி பேரணி நடத்த முயன்ற பெனாசிருக்கு மீண்டும் வீட்டுக்காவல்: ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நள்ளிரவில் கைது