ஜெனிவா தீர்மானம் – தமிழர் தரப்பின் குழப்பம்…!!
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான அமெரிக்கத் தீர்மானம், தமிழர் தரப்புக்குள் ஒரு தெளிவற்ற நிலையைத் தோற்றவித்துள்ளது என்றே கூறலாம்.
ஒரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில், அதன் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வெளியிட்ட கருத்துக்கள், இந்த தீர்மானம் சாதகமானது போன்ற கருத்தை தோற்றுவிக்க முனைகிறது.
மறுபக்கத்தில், கூட்டமைப்பில் உள்ள ஏனைய பங்காளிக் கட்சிகளும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ் சிவில் சமூகமும், இந்த தீர்மானம் குறித்து ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளன.
இதுபோலவே, புலம்பெயர் சமூகத்திலும், உலகத் தமிழர் பேரவை, தீர்மானத்தை வரவேற்க, ஏனைய பல அமைப்புகள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
போரின் போது தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றின் மூலமே தீர்வு கிட்டும் என்றே தமிழர் தரப்பு முழுமையாக நம்புகிறது.
அதற்காகவே, சர்வதேச விசாரணைப் பொறிமுறை அமைய வேண்டும் என்ற கருத்தை, தமிழர் தரப்பு எல்லாத் தளங்களிலும் வலியுறுத்தி வந்தது.
ஆனால், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையும் சரி, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையிலும் சரி, கலப்பு நீதிமன்றத்தை அமைத்து விசாரிக்க வேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டது.
உள்நாட்டு, சர்வதேச நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்குத்தொடுனர்களை உள்ளடக்கியதாக, இந்தக் கலப்பு நீதிமன்றம் தொடர்பான பரிந்துரை முன்வைக்கப்பட்ட போது, அதனை ஏற்றுக் கொள்ளத் தமிழர் தரப்பு பெரும்பாலும் தயாராகவே இருந்தது.
அமெரிக்கா முன்வைத்த முதலாவது தீர்மான வரைவும் கூட, கலப்பு நீதிமன்றம் மூலமான விசாரணை நடத்தப்படுவதையே வலியுறுத்தியது.
ஆனால், ஜெனிவாவில் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் போது, இலங்கை, இந்தியா, சீனா, ரஷ்யா, கியூபா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் கொடுத்த அழுத்தங்களினால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா சமர்ப்பித்த தீர்மான வரைவு மேலும் நலிந்து போனது.
சர்வதேச என்ற பதம் முற்றுமுழுதாக நீக்கப்பட்டது. கொமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுனர்கள், விசாரணையாளர்களின் பங்களிப்புடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டது.
அதாவது கலப்பு விசாரணை என்று அடையாளப்படுத்தும் வகையிலான பகுதிகள் தீர்மான வரைவில் இருந்து நீக்கப்பட்டன.
இது தமிழர் தரப்பை மேலும் அதிருப்தி கொள்ள வைத்தது.
ஒரு பக்கத்தில், ஐ.நாவில் முன்வைக்கப்பட்ட தீர்மான வரைவு, நீர்த்துப் போகச் செய்யப்பட்ட அதேவேளை, உள்நாட்டில் அரச தரப்பினர் வெளியிட்ட கருத்துக்கள் தமிழ் மக்களை இன்னும் குழப்பமடைய வைத்தது.
நடக்கப்போவது சர்வதேச விசாரணையோ, கலப்பு விசாரணையோ அல்ல, உள்நாட்டு விசாரணை தான் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெளிவாக கூறியிருக்கிறார்.
அத்துடன் இதில் வெளிநாட்டுத் தலையீடுகள் இருக்காது என்றும், தேவைப்பட்டால் மாத்திரமே, வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்படும் என்றும் அரசாங்கத் தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
சர்வதேச சமூகம், தமது கண்காணிப்பு மற்றும் பங்களிப்புடன் கூடிய விசாரணைகளே நடக்கும் என்கிறது.
இலங்கை அரசாங்கமோ யாருடைய தலையீடும் இல்லாத தமது சொந்த விசாரணைகளே நடக்கப் போகிறது என்கிறது.
இவ்வாறான செய்திகள், தமிழ் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால், ஜெனிவா தீர்மானத்துக்கு அமைய உருவாக்கப்படும், விசாரணைப் பொறிமுறை எத்தகையது- அது எவ்வாறு செயற்படவுள்ளது- அதில் வெளிநாட்டு நீதிபதிகள் நிபுணர்களின் பங்களிப்பு எவ்வாறானதாக இருக்கும் என்ற கேள்விகள் தமிழ் மக்களிடையே எழுந்திருக்கின்றன.
இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு சில தலைவர்கள் புதிய விசாரணைக் கட்டமைப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்ற நம்புவதாகத் தெரிகிறது.
ஆனால், வேறு சிலரோ அவ்வாறு நம்பிக்கை கொள்ளவில்லை.
கடந்த கால அனுபவங்கள் தமிழ் மக்களுக்கு மோசமானதாகவே இருந்திருக்கின்றன.
இலங்கையில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களும் விசாரணைக் குழுக்களும் நியாயமானதாக செயற்பட்டிருக்கவில்லை. அவை மக்களின் நம்பிக்கையீனத்தையே சம்பாதித்திருக்கின்றன.
இதன் காரணமாகவே உள்நாட்டு விசாரணைகளை தமிழ் மக்கள் அடியோடு எதிர்க்கின்றனர்- வெறுக்கின்றனர்.
இப்படியான நிலையில், உள்நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைய உருவாக்கப்படவுள்ள பொறிமுறை மூலம், எவ்வாறு தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கப் போகிறது என்ற கேள்வி வலுப்பெற்றிருப்பதில் நியாயங்கள் உள்ளன.
இந்த விசாரணைகள் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளத் தவறினால், ஒட்டுமொத்த முயற்சிகளும் விழலுக்கிறைத்த நீராகிவிடும்.
இந்த நல்லிணக்க, பொறுப்புக்கூறல் செயல்முறையில் தமிழ் மக்கள் தான் பிரதான பங்காளர்கள்.
அவர்களின் எதிர்பார்ப்பை, கருத்துக்களை கருத்தில் கொள்ளாமல் தான், வலுக்குறைந்த விசாரணைப் பொறிமுறையை உருவாக்க சர்வதேச சமூகம் அங்கீகாரம் அளித்திருக்கிறது.
இதில் கொமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு எந்தளவுக்கு வலுவானதாக இருக்கும் என்பதைப் பொறுத்தே, தமிழ் மக்களால் இதன் மீது நம்பிக்கை வைப்பதா இல்லையா என்று தீர்மானிக்கக் கூடிய நிலை இருக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பகுதியினர், இதற்கு ஆதரவளித்திருந்தாலும், அவர்களாலும் கூட, தமிழ் மக்களுக்கு இந்த விசாரணைக் கட்டமைப்பு நீதியைப் பெற்றுத் தரும் என்று உத்தரவாகம் அளிக்க முடியாது.
ஏனென்றால் அவர்களுக்கும் கூட இந்த விடயத்தில் உறுதியான நம்பிக்கை இருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது.
ஒருவேளை, ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இந்த உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை ஏற்றுக்கொள்ளத் தயங்கினால் அல்லது மறுத்தால், இது முழுமையாக தோல்வியில் தான் முடியும்.
ஆனால், தமிழர் தரப்பு இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இப்போதைய தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்படும் விசாரணைப் பொறிமுறையை புறக்கணிப்பதால் அல்லது, இதற்கு ஒத்துழைக்க மறுப்பதால், இதற்கு மேலான ஒரு பொறிமுறைக்குச் செல்லும் வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும்.
அத்தகையதொரு வாய்ப்பு இல்லாத ஒரு சூழல் இருக்குமேயானால், கிடைத்திருக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனமானது.
இப்போதைய நிலையில், ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலான விசாரணைப் பொறிமுறையை ஆதரிப்பது அல்லது ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது என இரண்டு வழிகள் தான் தமிழர் தரப்புக்கு உள்ளது.
இதனை முற்றாக நிராகரிப்பதான ஒரு வழிமுறையை தெரிவு செய்வதற்கு முன்னர், அதனால் ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகள் அனைத்தையும் தெளிந்த சிந்தனையுடனும், நடுநிலையுடனும் ஆராய வேண்டியது தமிழர் தரப்பிலுள்ள அனைவரதும் கடமையாக இருக்கும்.
ஏனென்றால் அத்தகையதொரு முடிவு சர்வதேச சமூகத்துடன் ஒட்டுமொத்தமாக முரண்படும் நிலையை ஏற்படுத்தும்,
அத்தகையதொரு நிலை, ஒட்டுமொத்த உலகமும், தமிழர்களை நிர்க்கதியாக நிற்க வைக்கும் நிலைக்கு கொண்டு சென்றாலும் ஆச்சரியமில்லை.
அதேவேளை, ஜெனிவா தீர்மானத்துக்கு அமைய உருவாக்கப்படும் விசாரணைப் பொறிமுறைக்கு ஆதரவளிப்பதானாலும், அதற்காக அவசரப்பட வேண்டியதில்லை.
அவ்வாறு ஏற்படுத்தப்படக் கூடிய விசாரணைப் பொறிமுறைக் கட்டமைப்பை எவ்வாறு வலிமையானதாக- நடுநிலையானதாக- நம்பகமானதாக மாற்றலாம் என்று ஆராய வேண்டும்.
இங்கும் ஒரு பேரம் பேசும் ஆற்றலை தமிழர் தரப்பு கைக்கொள்ளலாம்
எல்லாவற்றையும் நாடாளுமன்றத்தின் மூலமே உருவாக்கப் போவதாக அரசாங்கம் கூறுகிறது.
அதற்கு மூன்றில் இரண்டு ஆதரவு தேவை. மூன்றில் இரண்டு ஆதரவுக்கு கூட்டமைப்பின் தயவு கண்டிப்பாகத் தேவை.
எனவே, அரசாங்கம் தான்தோன்றித்தனமாகவோ, நியாயமற்ற வகையிலோ முடிவுகளை எடுக்க முடியாமல் கட்டுப்படுத்தும் வாய்ப்புகளும் இருக்கின்றன.
தமிழ் மக்கள், இந்த தீர்மானத்துக்கு அமைவாக உருவாக்கப்படும் பொறிமுறையை எவ்வாறு கையாளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே, அவர்களின் எதிர்காலம் தங்கியிருக்கிறது.
மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியாது. கிடைத்துள்ள வாய்ப்பை நழுவவிடாமல் நீதியைப் பெறுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒருவேளை, இத்தகைய விசாரணை செயல்முறை நம்பகமான முறையில் இடம்பெறவில்லை என்று தமிழ் மக்கள் உணர்ந்தாலும் கூட, அடுத்த கட்டமாக அந்த நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்த முடியும்.
சர்வதேச சமூகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை எதிர்பார்க்கிறது. அவர்களின் காயங்கள் ஆற்றப்பட வேண்டும் என்று கருதுகிறது.
தாம் முன்மொழிந்து உருவாக்கிய விசாரணைப் பொறிமுறைகள் இலங்கை அரசாங்கம் சரிவரப் பயன்படுத்த தவறினால், சர்வதேச சமூகம் தமிழருக்குச் சார்பாக மீண்டும் ஒரு முறை திரும்பக் கூடும்.
இப்போதே, தமிழர் தரப்பு ஒத்துழைக்கத் தவறினால் அத்தகைய வாய்ப்பு மீண்டும் கிட்டுமா என்பது சந்தேகம் தான்.
Average Rating