மகாத்மா காந்தியின் ஜனன தினம் இன்று..!!
“மகாத்மா” எனவும் “காந்தித்த தாத்தா” எனவும் அன்புடன் அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1869 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி பிறந்தார்.
சத்தியாக்கிரகம் ஊடாக அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு, வழிகாட்டியாக அமைந்தவர் காந்தி என்றால் மிகையில்லை.
கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தனது தகுதிக்கேற்ற வேலைக்காக 1893 ஏப்ரல் மாதம் தென்னாபிரிக்க பயணத்தை இவர் மேற்கொண்டார். இந்த பயணமே இவரது வாழ்வினைத் திருப்பிப் போட்டது.
தென்னாபிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் ஏற்படுத்திய மாற்றமே விடுதலைப் போராட்டத்தில் காந்தி ஈடுபடுவதற்கு உந்து சக்தியாக அமைந்தது.
இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதுடன், 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் ஒத்துழையாமையை இயக்கம் 1922 ஆம் ஆண்டு காந்தியால் ஆரம்பிக்கப்பட்டது.
1930 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலே திருப்புமுனையாக அமைந்த ஆண்டாகும்.
பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்ததை கடுமையாக எதிர்த்த காந்தியடிகள், 1930 மார்ச் 02 ஆம் திகதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார்.
இறுதியில் 23 நாள் பயணத்திற்குப் பிறகு தண்டியை வந்தடைந்த அவர், அங்கிருந்த கடல் நீரில் உப்பு காய்ச்சி ஆங்கில சட்டத்திற்கு எதிராக அதை விநியோகித்தார்.
இந்த நிகழ்வு இந்தியாவில் பல இடங்களில் பரவியது மட்டுமல்லாமல், போராட்டம் தீவிரம் அடைந்து காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆனால், போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்த நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம்.
1942 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 8 ஆம் திகதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஓகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார்.
காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது. ஆனால், இந்திய – பாகிஸ்தான் பிரிவினை காந்தியை பெரிதும் பாதித்தது.
அகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மகாத்மா காந்தி அவர்கள், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த நாள் இந்தியாவில் தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகின்றது.
இவரது சுயசரிதையான சத்திய சோதனை உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய பொக்கிசமாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating