வேலை செய்யும் இடத்தில் ரூ.5.80 லட்சம் கைவரிசை: 3 பேர் கைது!!
வந்தவாசி தாலுகா தெள்ளாரில் வந்தவாசி–திண்டிவனம் சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது.
இதில் செய்யாறு அருகே உள்ள நெல்லியாங்குளம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் பெட்ரோல் பங்க் ஊழியராக வேலை செய்து வருகிறார். பங்க்கில் தினமும் வசூலாகும் பணத்தை இவர் வங்கியில் சென்று செலுத்துவது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் ரூ. 5 லட்சத்து 80 ஆயிரத்தை ஒரு கைப்பையில் எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வங்கிக்கு புறப்பட்டார்.
பெட்ரோல் பங்க்கிலிருந்து வெளியே வந்த சுரேஷை 2 பேர் மோட்டார் சைக்கிளை குறுக்காக நிறுத்தி மறித்தனர். அடுத்த வினாடியே அவரை தாக்கிவிட்டு ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பினர்.
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அவர்களை துரத்திச் சென்றார். பணப்பையுடன் தப்பியவர்கள் நெல்லியாங்குளம் பகுதியை நோக்கி செல்வதை அறிந்த சுரேஷ் தனது ஊரைச் சேர்ந்த நண்பர் சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்தார். கொள்ளையர்களின் அடையாளத்தை கூறி அவர்களை மடக்கிப்பிடிக்கும்படி கூறினார்.
இதனையடுத்து சீனிவாசன் மோட்டார் சைக்கிளில் கொள்ளையர்களை பிடிப்பதற்காக தெள்ளார் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஸ்ரீரெங்கராஜபுரம் அருகே வந்தபோது சுரேஷ் கூறிய 2 கொள்ளையர்களும் முகத்தை மறைத்தபடி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
அவர்களை அங்கிருந்த பொதுமக்களுடன் சீனிவாசன் மடக்கிப்பிடிக்க முயன்றார். ஆனால் இருவரும் பணப்பையை வீசிவிட்டு வேறுபாதையில் தப்பிவிட்டனர்.
பின்னர் பணப்பையை மீட்ட சீனிவாசன், அதனை சுரேஷிடம் ஒப்படைத்தார். அதில் ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது. இது குறித்து தெள்ளார் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
பணப்பையை வீசிய இடத்தில் கொள்ளையர்களின் செல்போன் கிடைத்தது. அதன்மூலம் போலீசார் துப்பு துலக்கினர். செல்போன் செம்பூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (20) என்பவருடையது எனத் தெரியவந்தது.
அதில் பெட்ரோல் பங்க் கேஷியர் சுரேஷ் செல்போன் எண்ணும் இருந்தது. இதனால் சுரேஷ் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது சினிமா காட்சிகளில் வருவது போல சுரேஷ் கொள்ளை நாடகமாடி பிணத்தை கையாடல் செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:–
குடும்ப செலவுக்கு சுரேசுக்கு பணம் தேவைப்பட்டது. அவரது ஊரை சேர்ந்த கோழிக்கறி கடை அதிபர் ரமேஷ் என்பவரிடம் கடன் கேட்டார். பணம் இல்லை என மறுத்த ரமேஷ் பங்கில் நீ தினமும் பல லட்சம் பணம் எண்ணுகிறாய். நான் 2 பேரை அனுப்பி உன்னிடம் உள்ள பணத்தை கொள்ளையடிக்க கூறுகிறேன். நீயும் அவர்களிடம் போராடுவது போல நடித்து பணத்தை கொடுத்துவிடு. கொள்ளை நாடகம் நிகழ்ந்த பிறகு பணத்தை பங்கு பிரித்துக் கொள்ளலாம் எனக் கூறினார்.
அதற்கு சுரேஷ் சம்மதித்தார். அதன்படி பெட்ரோல் பங்கில் இருந்த சுரேசிடம் பணத்தை பிடுங்க செம்பர் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (20), காதர்பாஷா (22) ஆகியோரை ரமேஷ் அனுப்பினார்.
அவர்கள் சுரேசிடம் பணத்தை பிடுங்கி விட்டு பைக்கில் சென்றனர். பொதுமக்கள் விரட்டியதால் அவர்கள் பணத்தை வீசிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இந்த தகவல்களை சேகரித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்–இன்ஸ்பெக்டர் துரை, ஏட்டுகள் பாபு, அன்பு ஆகியோர் வழக்கு பதிவு செய்து சுரேஷ், ரமேஷ், ராஜேஷ் ஆகியோரை கைது செய்தனர். காதர் பாஷாவை தேடி வருகின்றனர்.
Average Rating