ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக!!
அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, இலங்கை போர்க் குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு ஆணையிடக் கோரும் தீர்மானத்தை மனித உரிமை பேரவையில் இந்தியாவே கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில்,
இலங்கை இறுதிப்போரில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதுதொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 2012 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டன. பேரவையின் 24 ஆவது கூட்டத்தில் 24.09.2013 அன்று நான் பங்கேற்று இலங்கை இனப்படுகொலை பற்றி சர்வதேச விசாரணைக்கு ஆணையிடும்படி வலியுறுத்தினேன்.
அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து மனித உரிமை ஆணையர் அலுவலகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணை குறித்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையர் அல்- உசைன் கடந்த 16 ஆம் திகதி வெளியிட்டார்.
இலங்கை போர்க்குற்ற விசாரணை அறிக்கை மனித உரிமை பேரவையில் வரும் 30-ஆம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ளது. அதன்மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் மீது அடுத்த மாதம் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்படவுள்ளது.
இலங்கை அரசுக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது தான் உலகம் முழுவதுமுள்ள தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதை வலியுறுத்தியும், இதற்கான தீர்மானத்தை ஐநா மனித உரிமை பேரவையில் இந்தியாவே கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த 16-ஆம் திகதி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து, அனைத்துக் கட்சி ஆதரவுடன் நிறைவேற்றியதை வரவேற்கிறேன்.
இந்த தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு ஒரு கடிதமும் எழுதியிருந்தீர்கள்.
ஆனால், அவற்றுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை குறித்து அமெரிக்கா வலுவில்லாத வரைவுத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. அத்தீர்மானத்தில், போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை அரசே விசாரணை நடத்தலாம் என்றும், விசாரணைக் குழுவில் பன்னாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் புலனாய்வாளர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இது நிச்சயமாக ஈழத் தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தராது. இத் தீர்மானத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டுமா? என்பது குறித்து விவாதிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த 21 ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள், இலங்கைக்கு சாதகமான சில திருத்தங்களை வலியுறுத்தின. ஆனால், தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை பிரதிபலிக்கும் வகையில் எந்த திருத்தத்தையும் முன்வைக்காமல் இந்தியா மௌனம்காத்தது. இது தமிழக மக்களை அவமதிக்கும் செயல் என்பதை ஒப்புக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.
பங்களாதேஷ சிக்கலில் மேற்குவங்கத்தின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கிறது. அதே போன்று, தற்போது நேபாளத்தில் புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் வாழும் இந்திய எல்லைப்பகுதியான பீகாரின் வம்சாவழி மக்களின் உணர்வுகளுக்கு நேபாள அரசியல் சாசனத்தில் இடமளிக்க வேண்டும் என்று – இந்திய வெளியுறவுத்துறை செயலாளரை நேரில் அனுப்பி ராஜதந்திர அழுத்தங்களைக் கொடுக்கிறது.
ஆனால், ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்கும் தமிழ்நாட்டின் உணர்வுகளை மட்டும் மத்திய அரசு மதிக்க மறுக்கிறது. இப்போக்கை இனியும் அனுமதிக்கக் கூடாது.
இதற்கு கடந்த காலங்களில் தமிழக ஆட்சியாளர்கள் கடைபிடித்த அணுகுமுறை தான் காரணம் என்று கருதுகிறேன். இலங்கைத் தொடர்பான பிரச்சினைகளில் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்புவது, பிரதமருக்கு கடிதம் எழுதுவது ஆகியவற்றுடன் கடமை முடிந்து விட்டதாக தமிழகத்தை ஆண்ட, ஆளும் முதலமைச்சர்கள் கருதியது தான் இதற்கெல்லாம் காரணம் என்று எண்ணுகிறேன்.
இதுதொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து, அதன் முடிவுகளை பிரதமரிடம் முதல்வரும், பிற கட்சிகளின் தலைவர்களும் நேரில் வலியுறுத்தினால் தான் இலங்கை சிக்கலில் மத்திய அரசு ஓரளவாவது அசைந்து கொடுக்கும் என்பது எனது கருத்து.
தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களையும் பலமுறை சந்தித்து இந்த பிரச்சினை குறித்து வலியுறுத்தியுள்ளேன். இது தொடர்பாக பாராளுமன்றத்திலும் பலமுறை குரல் கொடுத்துள்ளேன்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்திலும் கலந்து கொண்டு இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்த உள்ளேன்.
தமிழக முதலமைச்சராகிய நீங்கள் இப்பிரச்சினையில் ஆற்ற வேண்டிய கடமைகள் பல உள்ளன. உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு ஆணையிடக் கோரும் தீர்மானத்தை மனித உரிமை பேரவையில் இந்தியாவே கொண்டு வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
அந்த தீர்மானத்தின் நகலை அனைத்துக் கட்சித் தலைவர்கள், அனைத்துக் கட்சி சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுடன் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் கொடுத்து வலியுறுத்த வேண்டும்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் வரும் 29 ஆம் திகதி புது டெல்லி திரும்பவுள்ள நிலையில், அன்றே அவரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் அத்தனை பேரும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு செயல்பட்டால் தான் ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும்.
எனவே மேற்கண்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating