உலக நாடுகளின் நெருக்கடி எதிரொலி ஒரு மாதத்துக்குள் நெருக்கடி நிலையை வாபஸ் பெறுவோம் பாகிஸ்தான் அரசு அறிவிப்பு
உலக நாடுகளின் நெருக்கடியை தொடர்ந்து, பாகிஸ்தானில் இன்னும் ஒரு மாதத்துக்குள் நெருக்கடி நிலையை வாபஸ் பெறுவோம் என்று அந்நாட்டு அரசு அறிவித்தது. நெருக்கடி நிலை பாகிஸ்தானில் அதிபர் மற்றும் ராணுவ தளபதி பதவிகளை தக்க வைத்துக் கொள்ள அதிபர் முஷரப் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நீதிபதிகள், வக்கீல்கள் என நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். எனினும் நெருக்கடி நிலையை வாபஸ் பெறக் கோரி பாகிஸ்தான் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால் அங்கு கொந்தளிப்பான நிலைமை காணப்படுகிறது. நெருக்கடி நிலையை வாபஸ் பெற கோரியும், பாராளுமன்ற தேர்தலை நடத்த வலியுறுத்தியும் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ ஊர்வலம் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கடும் கண்டனத்தை தொடர்ந்து அவர் நள்ளிரவில் விடுதலை செய்யப்பட்டார். அமெரிக்கா மீண்டும் வற்புறுத்தல் பாகிஸ்தான் அதிபர் முஷரப்பை அமெரிக்க அதிபர் புஷ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பாகிஸ்தானில் உடனடியாக தேர்தல் நடத்துமாறு வற்புறுத்தினார். இந்நிலையில் பாகிஸ்தானில் நெருக்கடியை நிலையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வற்புறுத்தியது. பாகிஸ்தானில் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெற நெருக்கடி நிலையை வாபஸ் பெற வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் விரும்புகின்றன. எனவே நெருக்கடி நிலையை வாபஸ் பெற வேண்டும். கைது செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அமெரிக்க செய்தி தொடர்பாளர் தொடர்பாளர் கூறினார்.
மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவிக்குமாறும் புஷ் நிர்வாகம் வற்புறுத்தியது.
இன்னும் ஒரு மாதத்தில் வாபஸ்
இந்த நெருக்கடியை தொடர்ந்து, பாகிஸ்தானில் இன்னும் ஒரு மாதத்துக்குள் நெருக்கடி நிலை வாபஸ் பெறப்படும் என்று அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் மாலிக் கïம் அறிவித்தார்.
இந்நிலையில் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் உயர் ராணுவ தளபதிகளுடன், அதிபர் முஷரப் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது நெருக்கடி நிலையை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமை பற்றியும், உள்நாட்டு பாதுகாப்பு குறித்தும் குறிப்பாக வடமேற்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் தீவிரவாதம் பற்றியும் ஆலோசனை நடைபெற்றது.
மேலும் முஷரப், அதிபர் பதவியை மீண்டும் முறைப்படி ஏற்கும் நிலையில் ராணுவ தளபதி பதவியில் இருந்து விலகுவது பற்றியும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
கூட்டத்தில் முஷரப் பேசுகையில்; தீவிரவாதம் மற்றும் தற்கொலை தாக்குதல்கள் அதிகரித்து வருவதை சகித்துக் கொள்ள முடியாது. அவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பெனாசிர் திட்டம்
இதற்கிடையே வீட்டுக்காவலில் இருந்து விடுதலையான போதிலும் முஷரப்புக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த பெனாசிர் திட்டமிட்டு உள்ளார். இதற்காக (13-ந் தேதி) லாகூரில் இருந்து இஸ்லாமாபாத் வரை 275 கிலோ மீட்டர் தூரம் நீண்ட பேரணி நடத்த அவரது கட்சி முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை ரத்து செய்ய வேண்டும். தேர்தலை ஜனவரி மாதத்தில் உரிய காலத்தில் நடத்த வேண்டும். முஷரப் ராணுவ தளபதி பதவியில் இருந்து விலக வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இப்பேரணியை, தானே முன்னின்று நடத்த பெனாசிர் தீர்மானித்து உள்ளார்.