இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியை நிறுத்தக்கோரி இலங்கை மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!!
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையினை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி யாழ். மாவட்ட மீனவர்கள் மாபெரும் அமைதி வழிப் போராட்டம் ஒன்றினை இன்று புதன்கிழமை முன்னெடுத்தார்கள்.
வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு இணையத்தின் தலைவர் நாகநாதி பொன்னம்பலம் மற்றும் செயலாளர் வி.சுப்பிரமணியம் ஆகியோரின் ஒருங்கமைப்பின் கீழ், யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச சம்மேளங்களின் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை, மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஒன்றினைந்து இந்த மாபெரும் அமைதிவழிப் போராட்த்தினை முன்னெடுத்தார்கள்.
ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, இலங்கை அரசே இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை, இந்திய இழுவைப் படகினை எமது கடற்பரப்பில் அனுமதியாதே, இலங்கை அரசே எமது எதிர்கால சந்ததியினரின் வாழ்வினை கேள்விக்குறியாக்காதே போன்ற சுலோக அட்டைகளை கைகளில் ஏற்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் சத்திரத்து சந்தியை வந்தடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கிருந்து, யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதிவழியாக யாழ். மாவட்ட செயலகத்தினை வந்தடைந்தனர்.
யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக ஒன்று கூடிய மீனவர்கள், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
அதன்பின்னர், அங்கிருந்து, ஏ9 வீதி வழியாக சோமசுந்தரம் வீதியை சென்றடைந்து, அங்கிருந்து யாழ் மருதடி வீதியில் உள்ள இலங்கைக்கான இந்திய துணைத் தூதரகத்தில் அமைதிப் பேரணியை நிறைவு செய்தனர்.
அங்கு, இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் அ. நடராஜாவிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
மகஜரைப் பெற்றுக்கொண்ட இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர், மகஜரில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் பற்றி தாம் அறிந்துள்ளதாகவும், உடனடியாக குறித்த மகஜரை உரிய அதிகாரிகளிடம் கையளிப்பதாகவும் கூறினார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்படியினை நிறுத்த கோரி முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள யாழ். மாவட்டத்தில் உள்ள 15 கடற்றொழிலாளர் சங்கங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வருகை தந்திருந்தனர்.
இந்த அமைதி வழிப்போராட்டத்தில், தமது கோரிக்கையினை ஏற்று, உரிய நடவடிக்கையினை இலங்கைஅரசாங்கமும், இந்திய அரசும் எடுக்காவிட்டால், தொடர்ச்சியான போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதுடன், உண்ணாவிரத பேராட்டங்கள் மற்றும் மிகப்பெரிய அளவிலான போராட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் மீனவர்கள் கடுமையான வார்த்தைகளினால், கூறினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர், பா.டெனீஸ்வரன் மற்றும், வடமாகாண சபை உறுப்பினர், ச.சர்வேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Average Rating