ஞாபகமறதி நோயால் பெற்ற தாயே தன்னுடைய கைக்குழந்தையை தனியே விட்டு சென்ற பரிதாபம்!!
ஈரோடு மாவட்டம் சென்னிமலை உப்பிலிபாளையம் ரோட்டில் உள்ள காமராஜ் நகர் மேட்டு பகுதியில் கைக்குழந்தையுடன் ஒரு பெண் நேற்று மதியம் 12.30 மணி அளவில் நின்று கொண்டிருந்தார். திடீரென்று அந்த பெண் அங்கிருந்த ஒரு கல்லில் தன்னுடைய குழந்தையை தனியாக வைத்து விட்டு சட்டென்று நடந்து சென்றார்.
உடனே குழந்தை ‘வீல்…வீல்…’ என்று அலறி சத்தம் போட்டு அழுதது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் வீட்டுக்குள் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர். உடனே கைக்குழந்தையை கல்லில் வைத்து சென்ற பெண்ணை பின் தொடர்ந்து சென்று பிடித்தனர்.
பின்னர் அந்த பெண்ணிடம் ஏன் குழந்தையை இங்கு வைத்து விட்டு செல்கிறாய்? என்று அவர்கள் கேட்டனர். அதற்கு அந்த பெண் இது என்னுடைய குழந்தை தான். பெண் குழந்தை. யாருக்காவது தேவைப்பட்டால் வாங்கி கொள்ளுங்கள் என்றார். உன் குழந்தையை ஏன் நீ எங்களிடம் கொடுக்கிறாய்? என்று கேட்டதற்கு அந்த பெண் பதில் எதுவும் கூறாமல் மவுனமாக இருந்தார். மேலும் அந்த பெண்ணின் நடவடிக்கையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதற்கிடையே இதுகுறித்த தகவல் அந்த பகுதியில் பரவியதும் அங்கு ஏராளமான பொதுமக்கள் கூடினர். அந்த பெண்ணை கண்டிக்க ஆரம்பித்தனர்.
ஆனாலும் அந்த பெண் எதை பற்றியும் கவலைப்படாமல் எந்தவித சலனமும் இல்லாமல் எதுவும் பேசாமல் மவுனமாகவே இருந்தார். அப்போது அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு சில பெண்கள் கூட்டத்தினரை கலைய செய்து விட்டு அந்த பெண்ணை தனியாக அழைத்து சென்றனர்.
பின்னர் அந்த பெண்ணுக்கு உணவும், கைக்குழந்தைக்கு பாலும் வாங்கி கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து நைசாக அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது அந்த பெண் கூறுகையில், ‘தன்னுடைய பெயர் தேன்மொழி (வயது 30) என்றும் சொந்த ஊர் சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணை பகுதியில் வசித்து வருவதாகவும்’ தெரிவித்தார். அவர் கூறிய தகவலை வைத்து அங்கிருந்தவர்கள் ஒரத்துப்பாளையம் அணைப்பகுதியில் உள்ள அந்த பெண்ணின் உறவினர்களுக்கு செல்போன் செய்து விவரம் கேட்டனர். அப்போது கிடைத்த தகவல் வருமாறு:-
தேன்மொழியின் தந்தை கன்னியப்பன். ஏற்கனவே இறந்து விட்டார். அவருடைய மனைவி ருக்குமணி. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள காங்கயம்பாளையத்தை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி நாகராஜுக்கும், தேன்மொழிக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது. இவர்களுக்கு 1½ வயதில் ரமணா தேவி என்ற குழந்தை உள்ளது. தற்போது 3 மாத கைக்குழந்தை உள்ளது. இதுவரை அந்த குழந்தைக்கு பெயர் சூட்டவில்லை. திருமணத்துக்கு முன்பு மொபட் ஓட்டி சென்றபோது தேன்மொழி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் அடிபட்டது. இதற்கு அவர் முறையான சிகிச்சை பெறவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அவருக்கு திடீர் திடீரென்று ஞாபக மறதி நோய் வந்துவிடும். இதற்காக அவர் தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை.
இந்தநிலையில் ருக்மணியும், தேன்மொழியும் நேற்று ஒரத்துப்பாளையம் அணை பகுதியில் இருந்து சென்னிமலைக்கு வந்து உள்ளனர். அப்போது தேன்மொழியை சென்னிமலை பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மரத்தடியில் உட்கார வைத்து விட்டு ருக்மணி அருகில் உள்ள கடைக்கு மாவு அரைக்க சென்று உள்ளார். அப்போது ஏற்பட்ட ஞாபக மறதி காரணமாக தேன்மொழி தன்னுடைய குழந்தையை தூக்கி கொண்டு சென்னிமலையில் வீதி வீதியாக அலைந்ததுடன் அந்த குழந்தையை அப்படியே விட்டு விட்டு செல்ல முயன்று உள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் தேன்மொழியின் உறவினர்கள் கூறினர். இதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்மொழியின் தாய் மற்றும் உறவினர்கள் காமராஜ் நகர் மேட்டுக்கு வந்தனர். அவர்கள் தேன்மொழி மற்றும் அவருடைய கைக்குழந்தையை மீட்டு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Average Rating