வேலைக்கு செல்லாததை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை: 2 நாளாக போராடி பிணத்தை மீட்ட தீயணைப்பு வீரர்கள்!!
பேரணாம்பட்டு சிவராஜ் நகரை சேர்ந்தவர் ரஞ்சன். இவரது மகன் ராகுல் (வயது 24). இவர் நேற்று காலை வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த பெற்றோர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கிறாயே? என்று கேட்டு கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த ராகுல் வீட்டை விட்டு வெளியேறினார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. வீட்டில் இருந்து 100 அடி தூரத்தில் உள்ள கிணற்று பகுதிக்கு சென்ற அவர் கிணற்றுக்குள் குதித்ததாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறினார். இதனால் அங்கு பரபரப்பு தொற்றிக் கொண்டது.
ராகுல் குதித்ததாக கூறப்படும் கிணற்றில் தண்ணீர் உள்ளது. ஆனால் முட்கள் வெட்டி போடப்பட்டு சேறும் சகதியுமாக இருந்தது. இதனால் கிணற்றில் குதித்த ராகுலை மீட்க முடியவில்லை. இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி ராகுலை தேடினார்கள். ஆனால் சேறும் சகதியும் அதிகமாக இருந்ததாலும் கிணற்றுக்குள் முட்கள் வெட்டிப் போடப்பட்டு இருந்ததாலும் உள்ளே இறங்க முடியாத நிலை ஏற்பட்டது.
நேற்று மாலை வரை ராகுலை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் திரும்பி சென்றதாக தெரிகிறது. இது ராகுலின் பெற்றோர், உறவினர்களையும் அந்த பகுதி பொதுமக்களையும் ஆத்திரப்படுத்தியது.
எனவே இன்று காலை அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பேரணாம்பட்டு – வீ கோட்டா சாலையில் திரண்ட அவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிணற்றில் குதித்ததாக கூறப்படும் ராகுலை மீட்க வேண்டும் என்று கூறிய அவர்கள் தீயணைப்பு வீரர்கள் அலட்சியமாக செயல்படுவதாக கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கிணற்றில் ராகுலை தேடும் பணி மீண்டும் நடைபெறும் என்று அவர் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்களும் ராகுலின் உறவினர்களும் கலைந்து சென்றனர். இந்த 1 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அந்த சாலையில் போக்குவரத்து சீரானது.
பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து ராகுல் குதித்ததாக கூறப்படும் கிணற்று பகுதிக்கு இன்று காலை தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனத்துடன் வந்தனர். கிணற்றுக்குள் அதிகமாக கிடக்கும் முட்களை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றி ராகுலை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சேறும் சகதியுமாக இருப்பதால் அதனையும் அகற்றி கிணற்றில் இறங்கி தேடினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. கிணற்றை சுற்றி அந்த பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு நின்று பார்த்தனர்.
தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடிய போது கிணற்றுக்குள் ராகுல் பிணமாக கிடப்பது தெரியவந்தது. பிணத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
ராகுல் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
Average Rating