தீபாவளி அன்று ஒரே நாளில் ரூ. 60 கோடி சரக்கு விற்பனை * தமிழகத்தில் இதுவரை இல்லாத சாதனை!!
தீபாவளி தினத்தில் குடிமகன்களின் பேராதரவால், டாஸ்மாக் நிர்வாகம் இதுவரை இல்லாத சாதனையை படைத்துள்ளது. அன்று ஒரே நாளில் மட்டும் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்கு தமிழகத்தில் விற்பனையாகியுள்ளது. இதில் பிராந்தி, விஸ்கி, ரம் வகைகள் விற்பனை இரு மடங்காகவும், பீர் விற்பனை மூன்று மடங்காகவும் அதிகரித்துள்ளது. டாஸ்மாக் மூலமாக மாநிலம் முழுவதும் ஆறாயிரத்து 700 மது கடைகள் இயங்கி வருகின்றன. சென்னையில் ஐநூறுக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற விழாக் காலங்களின் போது மதுபான விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையன்று, `குடிமகன்’களை திருப்திபடுத்தும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. தீபாவளியன்று மதுபான விற்பனை உயரும் என்பதால், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் வழக்கமாக அனுப்பப்படும் சரக்குகளைக் காட்டிலும் அதிக அளவு சரக்குகள் கடைகளுக்கு அனுப்பப்பட்டன. டாஸ்மாக்கின் அனைத்து கிடங்குகளும் கடந்த ஞாயிற்றுக் கிழமையும் செயல்பட, நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது. இதன் மூலம், மதுபான உற்பத்தியாளர்களிடம் இருந்து சரக்குகளை பெறவும், உடனடியாக அவற்றை கடைகளுக்கு அனுப்பும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
`டாஸ்மாக்’ நிர்வாகம் எதிர்பார்த்தது போல், தீபாவளியன்று குடிமகன்களின் பேராதரவால் விற்பனை இரு மடங்காக எகிறியது. மாநிலம் முழுவதும் உள்ள ஆறாயிரத்து 700 கடைகளில் தினந்தோறும் 90 ஆயிரம் பெட்டி அயல் நாட்டு மதுபானங்கள் விற்பனையாகி வருகிறது. இந்த விற்பனை தீபாவளியன்று இரு மடங்காக ஏகிறியது. மாநிலம் முழுவதும் உள்ள மது கடைகளில் பிராந்தி, விஸ்கி, ரம் உள்ளிட்ட அயல்நாட்டு மதுபானங்கள் 1.80 லட்சம் பெட்டிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. வழக்கமாக நாள் ஒன்றுக்கு 25 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை நடந்து வந்தது. இது, தீபாவளியன்று இரு மடங்கிற்கும் கூடுதலாக 60 கோடி ரூபாய் அளவுக்கு மது பானங்கள் விற்பனையாகியுள்ளன.
சென்னை நகரில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட மதுபான கடைகளில், நாள்தோறும் ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய்க்கு சரக்கு விற்பனை இருந்து வந்தது. இதுவும் இரு மடங்காக அதிகரித்துள்ளது. தீபாவளியன்று சென்னை நகரில் நான்கு கோடி ரூபாய் வரை சரக்கு விற்பனை எகிறியுள்ளது. அதேபோல, பீர் விற்பனை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் 45 ஆயிரம் கேஸ் பீர் நாள்தோறும் விற்பனையாகி வருகிறது. தீபாவளியன்று பீர் விற்பனை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. ஒரு லட்சத்து 65 ஆயிரம் கேஸ் பீர்கள் தீபாவளி தினத்தில் விற்பனையாகியுள்ளது. அந்தளவுக்கு தீபாவளி பண்டிகையை தமிழக குடிமகன்கள் சரக்கோடு கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.