காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்ததால் மாணவியை கொல்ல முயன்றேன்: வாலிபர் வாக்குமூலம்!!
திருப்பூர் புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் கவிதா (17 வயது, பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார்.
பள்ளியில் பிளஸ்–2 வகுப்புக்கு தேர்வு நடைபெறுவதால் கவிதா நேற்று மதியம் 12.30 மணிக்கு ஆட்டோவில் பள்ளிக்கு சென்று விட்டு மாலை மீண்டும் ஆட்டோவில் வீடு திரும்பினார். பின்னர் ஆட்டோவில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார்.
அப்போது அவரை ஒரு வாலிபர் வழிமறித்து பேச முயன்றார். ஆனால் அவரிடம் பேச கவிதா மறுத்து விட்டார். தொடர்ந்து அந்த வாலிபர் கவிதாவிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாலிபர் திடீரென மறைத்து வைத்து இருந்து பீர் பாட்டிலை எடுத்து உடைத்து கவிதா முகம், கண் மற்றும் கழுத்து பகுதிகளில் சரமாரியாக தாக்கினார். மேலும் அந்த வாலிபர் தன்னைத்தானே கழுத்தை பாட்டிலால் அறுத்துக் கொண்டார்.
இருவரும் கீழே விழுந்து ரோட்டில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸ் உதவி கமிஷனர் மணி தலைமையிலான திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–
நான் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் பகுதியை சேர்ந்த பாலகுருநாதன் (வயது 26) ஆவேன். திருப்பூரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி புதுக்காடு பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் கடந்த சில ஆண்டுகளாக டெய்லராக வேலை பார்த்து வருகிறேன்.
நான் வேலை பார்க்கும் பனியன் கம்பெனிக்கு எதிரே கவிதாவின் வீடு அமைந்து உள்ளது. இதனால் அடிக்கடி கவிதாவை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவருடன் பழகினேன். நாளடைவில் அது காதலாக மாறியது. இந்த விவகாரம் கவிதாவின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் அவர்கள் அவரை கண்டித்தனர். மேலும் என்னை கவிதாவுடன் பேசக்கூடாது என மிரட்டினர்.
இதனால் கவிதா என்னுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார். நானும் அவருடனான தொடர்பை சிறிது காலம் நிறுத்திவிட்டேன். இந்த நிலையில் கவிதாவுக்கு நாளை திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக அவரிடம் பேச முயன்றேன். ஆனால் அவர் என்னுடன் பேச மறுத்துவிட்டார். என்னை திருமணம் செய்யும்படி கூறினேன். ஆனால் அவர் நான் சொல்வதை கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நான் என்னை காதலித்து விட்டு இன்னொருவரை திருமணம் செய்வாயா? எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது எனக்கூறி பாட்டிலால் அவரை கொல்ல முயன்றேன்.
மேலும் கவிதா இல்லாத உலகத்தில் நானும் வாழக்கூடாது என்று முடிவு செய்து தற்கொலைக்கு முயன்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே பாலகுருநாதனால் தாக்கப்பட்ட மாணவி கவிதா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இடது கண்ணில் பயங்கர காயம் ஏற்பட்டு உள்ளதால் அவரது இடது கண் பார்வை பாதிக்கப்பட்டு உள்ளது. முகத்தில் பல இடங்கள் தாக்கப்பட்டு உள்ளதால் முகமும் சிதைந்து உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். சிகிச்சைக்கு பின்னர் பார்வை கிடைப்பது அரிது என்றும் தெரிவித்தனர்.
Average Rating