டிவிகளின் போட்டா போட்டி தீபாவளி

Read Time:7 Minute, 1 Second

தீபாவளியையொட்டி தமிழ்த் தொலைக் காட்சிகளுக்கிடையே ரசிகர்களை கவர்வதில் கடும் போட்டா போட்டி நிலவியது. இருப்பினும் வழக்கம் போலவே நடிகர், நடிகைகளின் பேட்டிகள், சூப்பர் ஹிட் படங்கள், சின்னத் திரை நடிகர், நடிகையரின் கலாட்டா காமெடி என அரைத்த மாவையே அரைத்துத் தள்ளி நோக வைத்தனர். தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு என ஆண்டு தோறும் வரும் விசேஷ நாட்களின்போது சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது டிவிகளின் வழக்கமாகி விட்டது. ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை இந்த விசேஷ தினங்களின்போது டிவிகள் சிறப்பு நிகழ்ச்சிகளாக ஒளிபரப்புகின்றன. ஆனால் இவற்றில் 90 சதவீத நிகழ்ச்சிகள் சினிமாவை அடிப்படையாகக் கொண்டவைதான். மருந்துக்குக் கூட சம்பந்தப்பட்ட பண்டிகை குறித்து ஒரு வார்த்தை கூட அவர்கள் காட்டுவதில்லை. இந்த தீபாவளிக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் மக்களை பதம் பார்த்து விட்டன டிவிகள். இதில் கலைஞர் டிவியில் ஹைலைட் நிகழ்ச்சியாக தமிழ்நாடு அரசு திரைப்பட விருது வழங்கும் விழா ஒளிபரப்பானது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை முழுமையாக ஒளிபரப்பியது கலைஞர் டிவி.

ஆனால் இதே நிகழ்ச்சியை அதற்கு முந்தைய தினமே சன் டிவி சுருக்கமாக ஒளிபரப்பி விட்டது.

இதற்குப் போட்டியாக விஜய் டிவி இந்தியா சர்வதேச திரைப்பட விழாவை காட்டியது. முற்றிலும் இந்தி சினிமாக்காரர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியைப் பார்க்க படு வித்தியாசமாக இருந்தது.

கேடிவியோ முன்பு கருணாநிதிக்கு திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவை மீண்டும் ஒளிபரப்பி, தானும் போட்டியில் கலந்து கொண்டது.

சன் டிவி, கலைஞர் டிவி ஆகியவற்றில் ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் ஆகியோரின் பேட்டிகள் இடம் பெற்றிருந்தன. வடிவேலுவும் பல டிவிகளில் சிறப்பாக வந்து போனார். ஆனாலும் சுவாரஸ்யம் என்னவோ குறைவுதான்.

இதேபோல புதுப் படங்களை ஒளிபரப்புவதிலும் கடும் போட்டி நிலவியது. சன் டிவியில் விஜய்யின் கில்லி, சென்னை 600028 ஆகிய படங்கள் காட்டப்பட்டன. கலைஞர் டிவியிலோ ஈ, ஒளிபரப்பானது. ராஜ் டிவியில் அஜீத்தின் வரலாறு, கற்க கசடற ஆகியவை ஒளிபரப்பாகின.

ஜெயா டிவியில் கமல்ஹாசன் தசாவதாரம் குறித்துப் பேசினார். மதியம் விஜய்யின் மதுர படமும், இரவில் டிஷ்யூமும் போடப்பட்டது. ஜெயா டிவியில் இடம் பெற்ற நமீதாவின் பேட்டி படு போர். இப்படியெல்லாமா மக்களின் நேரத்தை வீணடிப்பது? தமிழைக் கொன்று, குதப்பித் துப்பிப் போட்டார் நமீதா, அதை விட மகா கொடுமை அவரைப் பேட்டிக் கண்ட தம்பி. ஒரு வேளை, நமீதாவைப் பார்த்து ரசித்தால் மட்டும் போதும் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ!

வழக்கமாக வித்தியாசமான நிகழ்ச்சிகளைக் கொடுக்கும் விஜய் டிவியில் இந்த தீபாவளிக்கும் சில வித்தியாசமான நிகழ்ச்சிகளைக் காண முடிந்தது. கடற்படையினருடன் சிம்பு கலந்து கொண்டது, சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ் பங்கேற்ற காபி வித் அனு, ஜெயராம் பங்கேற்ற கலக்கப் போவது யாரு சிறப்பு நிகழ்ச்சி, விஜய்யின் வித்தியாச பிறந்த நாள் என கலக்கி விட்டனர்.

சன் டிவியில் இடம் பெற்ற சாலமன்பாப்பையா தலைமையில், சினிமாக்காரர்களும், பட்டிமன்ற பேச்சாளர்களும் கலந்து கொண்ட பட்டிமன்றம் சுவாரஸ்யமாக இருந்தது. குறிப்பாக பாரதிராஜா, குஷ்பு, ஸ்ரீபிரியா, சத்யராஜின் பேச்சு ரசிக்க வைத்தது.

எந்த சானலைத் திருப்பினாலும் சினிமா, சினிமா, சினிமாதான். பண்டிகைகளைக் கொண்டாட வேறு விஷயங்களே இல்லையா அல்லது சினிமாவை மட்டும் மக்கள் ரசித்தால் போதும் என்று டிவி நிறுவனங்கள் நினைத்து விட்டனவா என்று தெரியவில்லை.

ஆனால் தூர்தர்ஷன் வழக்கம் போலா தனது தனி முத்திரையைப் பதித்திருந்தது. தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கும்போது எப்படிக் கவனமாக இருக்க வேண்டும், செய்ய வேண்டிய முதலுதவி என்ன என்பது குறித்து அழகாக விளக்கும் ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள் – அதுவும் நேரடியாக.

இதுதவிர குன்னக்குடி வைத்தியநாதனின் இசைப் புதையல் என்ற நிகழ்ச்சி – ஆஹா, அற்புதம். சிறப்புப் பட்டிமன்றமும் சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்தது. இயக்குநர் வசந்தபாலனின் பேட்டியும் ரசிக்க வைத்தது.

தலை தீபாவளி கொண்டாடும் சினிமா தம்பதிகளான ஸ்ரீகாந்த், மனோஜ் கே.பாரதி, நரேன், பாடலாசிரியர் விவேகா, கிரிக்கெட் வீரர் திணேஷ் கார்த்திக் ஆகியோரின் பேட்டி ரசிக்க வைத்தது.

சினிமாவையும் தொட்டு தீபாவளி தொடர்பான நிகழ்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து, சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் நிகழ்ச்சிகளைக் கொடுத்த தூர்தர்ஷன் உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல்; வைகோ, நெடுமாறன், திருமாவளவன் தலைமையில் மவுன ஊர்வலம்; காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!!
Next post நாக் ரவிக்கு ‘க்ளீன் சிட்’!