எதிர்கட்சித் தலைவர் பதவி வேண்டும் என அடம்பிடிக்கும் ஐமசுமு!!!
இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இரா.சம்பந்தனை ஏற்றுக்கொள்ள முடியாதென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டுமென உதய கம்மன்பில உள்ளிட்ட 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
அந்த பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை நியமிக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
இந்தக் கடிதத்தின் பிரதியொன்றை சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் அனுப்பிவைத்துள்ளதாக அந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
எதிர் கட்சியில் அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கே இருப்பதால், தங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் குமார வேல்கமவை எதிர்கட்சித் தலைவராக நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததாக உதய கம்மன்பில கூறினார்.
தற்போது, பாராளுமன்ற சபாநாயகர் பதவி, பிரதமர் பதவி, ஆளும் கட்சியின் அமைப்பாளர் பதவி, எதிர் கட்சியின் அமைப்பாளர் பதவி ஆகிய சகல பதவிகளும் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வெற்றிக்காக உதவிய நபர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இதன் காரணமாக பாராளுமன்ற தேர்தலில் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த 47 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பெரும் அநீதி ஏற்பட்டுள்ளதாகவும் உதய கம்மன்பில குற்றம்சாட்டினார்.
தங்களுடைய கோரிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிரானதல்ல என உதய கம்மன்பில கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வேண்டுகோள் ஏதும் வைக்கப்படாத நிலையிலேயே எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு சம்பந்தனை நியமித்ததாக முன்னதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியிருந்தார்.
இது குறித்து கேட்டபோது, எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு குமார வெல்கம நியமிக்கப்பட வேண்டுமென்று தாங்கள் ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றை அளித்ததாகவும் இருந்தபோதும், எதிர் கட்சித் தலைவர் பதவிக்கு தாங்கள் யார் பெயரையும் தெரிவிக்கப் போவதில்லையென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் விஷ்வா வர்ணபால பாராளுமன்றத்திற்கு தெரிவித்ததாகவும் கம்மன்பில கூறினார்.
இந்த பின்னணியில்தான் சபாநாயகர் கரு ஜயசூரிய அந்தக் கருத்தைக் கூறியுள்ளதாக கம்மன்பில கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனதான் இந்த தவறைச் செய்ததாக உதய கம்மன்பில குற்றம் சாட்டினார்.
தங்களுடைய கோரிக்கை, தமிழர் ஒருவர் எதிர் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு எதிரானதல்ல என்று கூறிய உதய கம்மன்பில அரசியல்யாப்பின் விதிமுறைகளை அமல்படுத்துமாறு கோரியே தாங்கள் இந்த வேண்டுகோளை வைப்பதாகக் கூறினார்.
Average Rating