சர்வதேச விசாரணை தேவையில்லை என்பதே எமது நிலைப்பாடு – பிள்ளையான்!!
சர்வதேச விசாரணையொன்று இலங்கைக்கு தேவையில்லையென்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்றது. பேரென்றால் அங்கு ஈவிரக்கம் என்ற பேச்சுக்கு இடமில்லையென்பதை போராளியாக இருந்தவன் என்ற அடிப்படையில் கூறுகின்றேன்.
விடுதலைப் புலிகளும் மிகப்பெரும் குற்றங்களை செய்துள்ளனர். பெருமளவானோரை படுகொலை செய்துள்ளார்கள். எங்களுக்கு சாதகமானோரை கொன்றொழித்துள்ளார்கள்.
இந்த நாட்டில் விடுதலைப் புலிகள் அழிந்த பின்னர் தான் ஒரு சமாதானம், நிம்மதி வரும் என்று நாங்களும் உறுதியாக நம்பினோம். ஆனால் அந்த யுத்தத்தின்போது தமிழ் மக்கள் கேடயமாக பயன்படுத்தப்பட்டு அழிந்தது வேதனையான விடயம்.
யுத்த காலப் பகுதியில் கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது நாங்கள் சரத்பொன்சேகாவிடம் பசில் ராஜபக்ஷவிடம் இந்திய உயர்ஸ்தானிகரிடம் எல்லாம் இதனை நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறு கூறியிருந்தோம்.
இதனை சிங்கள இராணுவம் செய்தது என்பதற்கு அப்பால் அதற்கான சந்தர்ப்பத்தினை தமிழர்கள்தான் வழங்கினார்கள். இந்த அழிவுகள் எதிர்காலத்தில் வராமல் தடுக்கவேண்டுமேயொழிய இது தொடர்பில் ஒருசாராரை மட்டும் தூக்கிலிட வேண்டும் என்பதில் நான் மாற்றுக்கருத்து கொண்டவன்.
தற்போது உள்ள சூழலில் விசாரணையொன்று நடைபெற்று அறிக்கை வந்துள்ளது. உள்நாட்டு பொறிமுறையூடாக சிங்கள மக்கள் மத்தியில் குரோதம் வளராத வண்ணம் தமிழர்களுக்கு தீர்வு வழங்கவேண்டும் என அனைவரும் கருதுகின்றனர். இந்த எண்ணத்தினை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு தற்போதைய எதிர்க்கட்சி தலைவருக்கு வந்துள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை பொறுத்த வரையில் சர்வதேச விசாரணை தேவையற்ற ஒன்றாகவே பார்க்கின்றோம். இங்கு ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு பல அறிக்கைகள் வந்துள்ளது. காணாமல்போனவர்கள் தொடர்பிலான அறிக்கைகள் வந்துள்ளது.
அதேபோன்று தற்போதைய ஆட்சிமாற்றத்தில் கடந்த கால ஆட்சியாளர்கள் ஓரங்கட்டப்பட்டு தற்போது உள்ள ஆட்சியாளர்கள் உள்ளக விசாரணை மூலம் தீர்வினைப் பெற்றுக்கொடுப்போம் என்று உறுதியளித்துள்ளனர்.
இதுதான் எதிர்காலத்தில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பாகும்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எங்களை புறக்கணித்து வருவதனால் தொடர்ந்து அவர்களுடன் இயங்க முடியா நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் நாங்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளோம். அதற்கு பதில் கிடைக்காத சந்தர்ப்பத்தில் அவர்களுடன் இயங்க முடியாத நிலையே ஏற்படும்.
எதிர்வரும் பிரதேசசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து தமது படகுச் சின்னத்திலேயே போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்தார்.
Average Rating