2–வது கணவருடன் தொடர்பை அம்பலப்படுத்துவதாக இந்திராணியை மிரட்டியதால் ஷீனா கொல்லப்பட்டாரா?
மும்பையைச் சேர்ந்த டி.வி. பெண் அதிபர் இந்திராணி தான் பெற்ற மகளான ஷீனாவை 2–வது கணவர் சஞ்சீவ் கன்னாவுடன் சேர்ந்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார்.
போலீஸ் விசாரணையில் தினமும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதனால் இந்திராணியின் வாழ்க்கை கற்பனை கதைகளையும் மிஞ்சும் வகையில் திகிலுடன் கூடிய மர்மம் நிறைந்ததாக இருக்கிறது.
அசாமில் சாதாரண குடும்பத்தில் பிறந்த இந்திராணி மும்பைக்கு வந்து மிகப்பெரிய தொழில் அதிபராக கோடீஸ்வரியாக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தார். தனது அழகு, கவர்ச்சியால் 3 கணவர்களை திருமணம் செய்து அவர்களை லாவகமாக ஏமாற்றியுள்ளார். தற்போது கொலை வழக்கில் சிக்கி சிறை கம்பிகளை எண்ணுகிறார்.
போலீசார் எந்த கோணத்தில் விசாரித்தாலும் தோண்ட தோண்ட புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்திராணி சித்தார்த் தாஸ், சஞ்சீவ்கன்னா, பீட்டர் முகர்ஜி என 3 பேரை திருமணம் செய்துள்ளார்.
ஊருக்கு ஒரு கணவர் என்ற வகையில் முதல் கணவர் சித்தார்த்தாஸ் அசாமை சேர்ந்தவர். அவருடன் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தார். அது பிடிக்காமல் கணவர் 2 குழந்தைகளை பிரிந்து கொல்கத்தா சென்றார். அங்கு தொழில் அதிபர் சஞ்சீவ் கன்னாவை 2–வது திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். அடுத்து மும்பைக்கு வந்தபோதுதான் தொலைக்காட்சி அதிபரான பீட்டர் முகர்ஜியை மடக்கினார். அவர் மூலம் தனியாக டி.வி. சேனல் தொடங்கி தொழில் அதிபராக இந்திராணி மாறினார்.
இந்திராணி தான் பெற்ற மகளான ஷீனாவை தனது சகோதரி என்றே சொல்லி அழைத்து வந்துள்ளார். தான் ஏற்கனவே குழந்தை பெற்றவர் என்பதை மறைப்பதற்காக இதை செய்திருப்பார் என்றாலும் பள்ளியில் தனது தந்தையின் இன்ஷியலையே மகளுக்கும் கொடுத்து இருப்பதுதான் ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.
இதுபற்றி இந்திராணியிடம் போலீஸ் விசாரித்த போது தன்னை 17 வயதில் வளர்ப்பு தந்தை பலாத்காரம் செய்ததாகவும், இதில் கர்ப்பமானதால் பிறந்த குழந்தைதான் ஷீனா என்றும், அதன்பிறகுதான் சித்தார்த்தாசை திருமணம் செய்தேன், எனவே எனது தந்தை இன்ஷியலை மகளுக்கும் கொடுத்தேன் என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.
இந்த திரைமறைவு வாழ்க்கையில் ஷீனாவுக்கும், இந்திராணியின் 3–வது கணவர் பீட்டரின் மகன் ராகுலுக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகினர். இருவருக்கும் அண்ணன், தங்கை முறை. இதுதான் இந்திராணிக்கு நெருடலை ஏற்படுத்தியது.
ஷீனாவை சகோதரி என அனைவரையும் நம்ப வைத்ததால் திடீர் என்று மகள் என்ற உண்மையை வெளிப்படுத்த இந்திராணியால் முடியவில்லை. மகளிடம் காதலை கைவிடுமாறு கண்டித்தார். ஆனால் மகளோ இந்திராணியின் திரைமறைவு வாழ்க்கையை அம்பலப்படுத்துவேன் என்று தாயை மிரட்டினார்.
அதாவது 3–வது கணவரான பீட்டர் முகர்ஜியுடன் வாழ்ந்து வந்த இந்திராணி கொல்கத்தாவில் இருக்கும் 2–வது கணவர் சஞ்சீவ் கன்னாவுடன் தொடர்பு வைத்து இருந்தார். சஞ்சீவ் கன்னா அடிக்கடி மும்பை வந்து ஒர்லி பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்துள்ளார்.
இந்த ஓட்டல் அருகில்தான் இந்திராணி பீட்டர் வீடும் உள்ளது. பீட்டருக்கு தெரியாமல் இந்த ஓட்டலில் வைத்துதான் இந்திராணியும், சஞ்சீவ் கன்னாவும் சந்தித்து கொண்டனர். இந்த விஷயம் ஷீனாவுக்கு தெரிந்து இருக்கிறது.
இதைவைத்து தனது காதலுக்கு தடைபோடும் இந்திராணியை ஷீனா மிரட்டி பணிய வைத்து இருக்கிறார். ஆனால் ஷீனா எல்லை மீறி காதலனுடன் பழகியதாலும் சஞ்சீவ் கன்னாவுடனான நட்பை காட்டிக் கொடுத்து விடுவார் என்பதாலும் இந்திராணியும், சஞ்சீவ் கன்னாவும் கொலை திட்டம் வகுத்து இருக்கலாம் என்று போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சஞ்சீவ் கன்னா ரகசியமாக கொல்கத்தாவில் இருந்து மும்பை வந்து இந்திராணியுடன் சேர்ந்து ஷீனாவை காரில் கடத்தினர். காரில் வைத்து கொன்று பிணத்தை எரித்து இருக்கலாம் என்றும் தெரியவருகிறது.
இதற்கிடையே ஷீனா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் எது என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அது மும்பையைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான ‘ஓபல் கார்சா’ கார் ஆகும். இந்த காரை ஷீனாவை கடத்திச் செல்ல வாடகைக்கு எடுத்து இருக்கிறார்கள். இந்த கார் எங்கே இருக்கிறது என்று போலீசார் தேடி வருகிறார்கள். காரின் உரிமையாளரும் தேடப்பட்டு வருகிறார்.
காரை எளிதில் கண்டு பிடிப்பதற்காக கடந்த 2012–ல் மும்பையில் இருந்து ராய்காட் மாவட்டம் செல்லும் வழியில் அனைத்து சுங்கச்சாவடியில் பதிவான வாகனங்களின் எண்களை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் 3 ஆண்டுகள் ஆகிவிட்டதால் வாகன எண்களின் பதிவு சிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
Average Rating